கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!

கட்சி நிர்வாகிகள் மீது  கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
X

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 

லோக்சபா தேர்தலில் சரியாக வேலை செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இ.பி.எஸ்., தயக்கம் காட்டுகிறார் என்ற புகார் எழுந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு, தேர்தல் பணிகளில் நடந்த குழப்பங்கள், சுணக்கங்கள், உள்ளடிகள், ஒழுங்காகப் பணியாற்றாத நிர்வாகிகள், கணக்கு வழக்குகளில் குழப்பியவர்கள் என லிஸ்ட் எடுத்து ‘பரேடு’ நடக்கிறது எல்லாக் கட்சிகளிலும். ஆனால், அ.தி.மு.க-விலோ அப்படியான அதிரடிக் காட்சிகள் ஏதுமில்லை!

“உண்மைநிலை என்னவென்றால், எடப்பாடியின் பேச்சை முக்கியமான சீனியர் நிர்வாகிகள் யாரும் கேட்பதில்லை. நடவடிக்கை, கடுமையான பேச்சு என இறங்கினால் கட்சிக்குள் மீண்டும் கீறல், கிழிசல்கள் வந்துவிடக் கூடாது என்று பயப்படுகிறார் அவர். மேலும், சீனியர்கள் சிலருக்கும் தன் நாற்காலிமீது ஒரு கண் இருப்பது அவருக்கு நன்றாகவே தெரியும். எல்லாவற்றுக்கும் மேலாக, தான் புரட்சித்தலைவியோ, புரட்சித் தலைவரோ இல்லை என்பதும் அவருக்குத் தெரியும்.

தமிழக அரசியல் களம் தாறுமாறாக மாறிக்கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அது இன்னும் மாறும். எனவே, 2026 வரை கட்சியையும் நாற்காலியையும் பொத்தினாற்போலக் கொண்டு போய்விட வேண்டும் என்கிற எச்சரிக்கையிலும் பயத்திலும் இருக்கிறார் இ.பி.எஸ். அவரிடம் இருக்கும் அந்த பயம், கட்சியைக் கட்டுக்குள் வைக்க முடியாத நிலைக்கு அவரை ஆளாக்கியிருக்கிறது.

யாரையும் கண்டிக்க முடியாத ‘பவர் இல்லாத’ பழனிசாமியாக இப்படியே இவர் தொடர்ந்தால், அ.தி.மு.க எனும் கட்சிக்குப் பெரும் ஆபத்து” என்கிறார்கள் முக்கியமான அ.தி.மு.க நிர்வாகிகள்!

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு, பூத்வாரியாகப் பதிவான வாக்கு சதவிகிதத்தையும், நிர்வாகிகளின் செயல்பாடுகளையும் பட்டியல் எடுத்து வந்தார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தலைமையின் உத்தரவுக்குக் கட்டுப்படாதவர்கள் மீதெல்லாம் அவர் கடும் நடவடிக்கை எடுப்பார் எனக் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியது. சரியாக அந்தச் சமயத்தில், சென்னையிலுள்ள அ.தி.மு.க தலைமையகத்தில் நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டது.

ஆனால், அவ்வளவு எதிர்பார்க்கப்பட்ட அந்தக் கூட்டத்தில், டீக்கடையில் சாதாரணமாகப் பேசுகிற விஷயங்களைப் பேசி, உப்புச் சப்பில்லாமல் முடித்திருக்கிறார் எடப்பாடி. இதில் கட்சி சீனியர்கள் பலருக்கும் கடும் அதிருப்தி.

இது ஒரு பக்கமென்றால், ‘அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிவு ஒரு நாடகம்’ என்று எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனத்துக்குத் தீனி போடுவதுபோலவே எடப்பாடி தொடர்ந்து நடந்து கொள்வதும் கட்சிக்குள் மற்றுமொரு அனலாக வீசிக்கொண்டிருக்கிறது. “கூட்டணி முறிவின் போதும் சரி, தேர்தலின் போதும் சரி, இப்போது தேர்தல் முடிந்த பின்னும் சரி... மோடி மீது சிறு தாக்குதலையும் தொடுக்காமல் நழுவியே வருகிறார் இ.பி.எஸ்.

அ.தி.மு.க-வுக்குள் என்னதான் நடக்கிறது... எடப்பாடி பழனிசாமிக்கு என்னதான் ஆச்சு... விரிவாக விசாரித்தோம்.

களையிழந்த எம்.ஜி.ஆர் மாளிகை: சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டக் கழக சீனியர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், “கடந்த ஏப்ரல் 23-ம் தேதி சித்ரா பெளர்ணமி என்பதால், ‘அன்று தலைமை அலுவலகத்துக்குச் சென்றால் நல்லது’ என்று இ.பி.எஸ்-ஸின் ஜோதிடர் ஆலோசனை கூறியிருக்கிறார். கட்சி அலுவலகத்துக்குப் பணியில்லாமல் செல்லக் கூடாது என்பதால், சம்பிரதாயத்துக்கு ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்த திடீரென முடிவானது.

அவசர அவசரமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னையின் மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்களைத் தலைமை அலுவலகத்துக்கு வரச் சொன்னார்கள். தன்னுடைய தாயார் மறைவையொட்டி, அதற்கான சடங்குகளைச் செய்ய, தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர் தி.நகர் சத்யா கோயிலுக்குச் சென்று விட்டதால், அவர் மட்டும் வரவில்லை. மற்றவர்கள் ஆஜராகி விட்டனர்.

சம்பிரதாயக் கூட்டம் என்பதால், அன்று எம்.ஜி.ஆர் மாளிகையில் வழக்கமான பரபரப்பில்லை. தொண்டர்கள் கூட்டமும் பெரிதாக இல்லை. சம்பந்தமே இல்லாமல் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளரும், வேட்பாளருமான குமரகுரு கூட்டத்துக்கு வந்திருந்த போதே, எவ்வித ஆக்கபூர்வமான விஷயமும் பேசப்படாது என்று உள்ளே இருந்தவர்கள் முடிவு செய்து விட்டோம்.

கூட்டத்தில், ‘உன் தொகுதி எப்பிடிப்பா இருக்கு..?’ என முன்னாள் அமைச்சர் பென்ஜமினிடமிருந்து தான் பேச்சைத் தொடங்கினார் இ.பி.எஸ். ‘திருவள்ளூர் நல்லாவே இருக்குண்ணே...’ என்று பென்ஜமின் பதிலளிக்கவும், அப்படியே அடுத்த ஆளுக்குத் தாவிவிட்டார் இ.பி.எஸ். ‘தி.மு.க-மீது மக்களுக்குக் கடும் அதிருப்தி இருக்கிறது. அந்த வாக்குகளை நாம் மொத்தமாகப் பெற்றிருக்கிறோம்’ என்று இ.பி.எஸ் சொன்னதும், கூட்டத்தில் இருந்தவர்கள் ‘தி.மு.க கொண்டு வந்த வரி உயர்வு, பெருநகரங்களில் மிகப்பெரிய அளவில் அவர்களுக்கு நெகட்டிவ்வாக அமையவில்லை’ என்றனர். ‘அப்படியா?’ என ரியாக்ஷன் காட்டிவிட்டு, அதைப் பொருட்படுத்தாமல் கடந்துவிட்டார் இ.பி.எஸ்.

தேர்தல் சமயத்தில் நடந்த குளறுபடிகள், உள்குத்து அரசியல் குறித்தெல்லாம் நிர்வாகிகள் பேச முற்பட்டபோது, அதை அப்படியே மடை மாற்றி விட்டார் இ.பி.எஸ். ‘என் வீடு இருக்கும் சேலம் நெடுஞ்சாலை நகரிலேயே ரெண்டு பேரு ஓட்டுப் போட முடியலை’ எனச் சம்பந்தா சம்பந்த மில்லாமல் அவர் பேசிக்கொண்டு போகவும், நிர்வாகிகள் நெளியத் தொடங்கி விட்டனர். கூட்டத்தை முடித்து விட்டு வெளியே வந்த நிர்வாகிகள் பலரும், ‘சென்னைக்குள்ளும், சென்னையைச் சுற்றியிருக்கும் தொகுதிகளிலும் சுமார் 300 புகார்கள் தேர்தல் தொடர்பாகவே இருக்கின்றன. அதைப் பற்றியெல்லாம் ஒரு வார்த்தைகூடக் கேட்க மாட்டேன் என்கிறார். சேலம் நெடுஞ்சாலை நகரில் யாருக்கு ஓட்டு இல்லை என்பது குறித்துப் பேசவா நம்மை அழைத்தார்..?’ என நொந்துகொண்டனர்.

அம்மா உயிரோடு இருந்தபோது, தேர்தலுக்குப் பிறகு ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டால், நிர்வாகிகளெல்லாம் கதிகலங்கிப்போவார்கள். ‘யார் தலை உருளப்போகிறதோ..?’ என்கிற பீதி வயிற்றில் புளியைக் கரைக்கும். யாருக்கும் தூக்கமே வராது. அப்படியான எந்தப் பதற்றமும், யாரிடமும் இ.பி.எஸ் கூட்டிய கூட்டத்தில் தென்படவில்லை. தேர்தல் முடிந்ததும் புகார்களை விசாரிக்க, குழுவை அமைப்பார் அம்மா. ஆனால் அம்மா உட்கார்ந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு, தவறு செய்த நிர்வாகிகள்மீது நடவடிக்கை எடுக்கவே அச்சப்படுகிறார்.

ஏற்கெனவே பல சீனியர்கள், அவரை ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ளாத மனநிலையில்தான் இருக்கிறார்கள், நடந்துகொள்கிறார்கள். இவர் இப்படியே பயந்து கொண்டிருந்தால் நிலைமை படுமோசமாகி விடும். அ.தி.மு.க தலைமையின் ராணுவக் கட்டுப்பாடு சிதைந்து சின்னா பின்னமாகி விட்டது என்பதற்குச் சமீபத்திய ஆலோசனைக் கூட்டமே சாட்சி” என்றனர் விரக்தியுடன்.

அ.தி.மு.க அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டிய இ.பி.எஸ்., ‘பூத் கமிட்டி சரியாக அமைக்கப்பட வேண்டும். இல்லையென்றால், கட்டாயம் நடவடிக்கை எடுப்பேன்’ என்று ஆவேசமாகப் பேசினார். அவர் எச்சரிக்கையைப் பெரும்பாலான மா.செ-க்கள் பொருட்படுத்தவே இல்லை. சென்னையில் அமைக்கப்பட்ட ஒரு பூத் கமிட்டியில், வெளி மாநிலத்தவர்களெல்லாம் சேர்க்கப்பட்டதாக ஆதாரங்களோடு புகார் வந்தும், யார்மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதன் விளைவாக, இந்தத் தேர்தலில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, வேலூர், தேனி, கரூர், ராமநாதபுரம், மத்திய சென்னை, பெரும்புதூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் எனப் பல தொகுதிகளில் தேர்தல் அன்று மதியத்துக்கு மேல் ‘பூத்’களில் ஆளே இல்லை. பூத் கமிட்டிகளுக்குக் கொடுத்த பணத்தையும் மாவட்டச் செயலாளர்கள், இடைப்பட்ட நிர்வாகிகளே அமுக்கிக் கொண்டு விட்டனர். இது குறித்துப் புகார் வந்தும் இன்னும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை, இ.பி.எஸ். கட்சி நலனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும், அவர்கள் எப்பேர்ப்பட்ட தலைவர்களாக இருந்தாலும், அவர்களின் பதவியைப் பறித்து விடுவார் அம்மா. ஆனால், தன் தலைமையின்கீழ் கட்சி வந்த பின்னர் பல புகார்கள் இருந்தும், இதுவரை ஒருவர்மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை இ.பி.எஸ். அவ்வளவு ஏன்... ஒன்றிய அளவில்கூட சிறு நடவடிக்கை இல்லை. பிறகு எப்படி இவரின் பேச்சுக்கு மதிப்பிருக்கும்?

கட்சியில், 2.25 கோடிப் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதன்படி பார்த்தால், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்குச் சராசரியாக ஐந்து லட்சம் வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு இருக்க வேண்டும். அந்த வாக்குகள் அப்படியே கிடைத்து விட்டாலே, பெரும்பாலான தொகுதிகளில் வெற்றியை நெருங்கி விட முடியும்.

ஆனால், கள யதார்த்தம் அப்படி இல்லையே... வலுவான கூட்டணி, கவனத்தை ஈர்க்கும் தேர்தல் அறிக்கை என எதுவுமே இல்லாமலும் கூட, பல தொகுதிகளிலும் தி.மு.க-வுக்கு அ.தி.மு.க கடும் போட்டியைக் கொடுப்பதற்கு, ஏற்கெனவே இருக்கும் கட்சியின் கட்டமைப்பு பலம் தான் காரணமே தவிர, இ.பி.எஸ்-ஸின் பிம்பமோ, செயல்பாடுகளோ காரணம் அல்ல” என்றனர் ஆக்ரோஷமாக.

கட்சியில், இப்போது இரண்டு கோஷ்டிகள் இருக்கின்றன. ஒன்று, ஜெயலலிதாவின் படத்தைச் சட்டைப் பையில் வைத்திருப்பவர்கள். மற்றவர்கள், இ.பி.எஸ் படத்தைச் சட்டைப்பையில் வைத்திருப்பவர்கள்.

அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் சிலர் இது குறித்துப் பேசுகையில், “அம்மாவால் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்ட நிர்வாகிகளான பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, எம்.எஸ்.எம்.ஆனந்தன், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, கோகுல இந்திரா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பரஞ்சோதி, வைகைச்செல்வன் உள்ளிட்ட பலருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பளித்தார் இ.பி.எஸ். அப்படி இவரால் கட்சியில் மீண்டும் வாழ்வு பெற்றவர்கள், இ.பி.எஸ்-ஸுக்கு விசுவாசமாக இருப்பது போலக் காட்டிக் கொள்கின்றனர். ஆனால், உருப்படியாகக் கட்சிப் பணி எதுவுமே செய்யவில்லை.

இ.பி.எஸ் பொறுப்புக்கு வந்த பிறகு, திருவண்ணாமலை, தேனி, நெல்லை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களைப் பிரித்து, புதுப்புது நிர்வாகிகளை நியமித்தார். ஆனால், கோவை, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், விழுப்புரம் என சீனியர்கள் கோலோச்சும் மாவட்டங்கள் மீது அவரால் கைவைக்க முடியவில்லை. இதனால் சீனியர்கள் சிலர், தலைமையால் கைவைக்க முடியாத அதிகாரம் பொருந்திய குறுநில மன்னர்களாக நடந்து கொள்கிறார்கள். இந்தத் தேர்தலிலேயேகூட, பல சீனியர் தலைவர்கள் தங்களின் வாரிசுகள், உறவினர்களுக்கு சீட் கேட்டனர்.

ஆனால், கிடைக்கவில்லை. அந்த அதிருப்தியில் கடுமையாக உள்ளடி வேலைகளைப் பார்த்தனர். அது தொடர்பாகப் பல புகார்கள் வந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதைய நிலையில் இ.பி.எஸ்-ஸிடம் இரட்டை இலைக்குக் கையெழுத்திடும் அதிகாரத்தைத் தவிர, கட்சியின் முழு லகானும் இல்லை. பிரச்னைகளை, பிரச்னைக்குரிய நிர்வாகிகளைக் களையெடுக்க முடியாத ‘பவர் இல்லாத’ பழனிசாமியாகத் தான் இருக்கிறார் அவர்.

தனக்கு விசுவாசமானவர்கள் என இ.பி.எஸ் நம்பிய பலரே இப்போது அவருக்குக் குழிதோண்டிகளாக மாறியிருப்பதில் அதிர்ந்து போயிருக்கிறார். ஆனால், அவர்களை ஒன்றும் செய்ய முடியாத நிலையில் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார். தலைவரைப்போல, அம்மாவைப்போல, பெயருக்கு முன்னால் ‘புரட்சியை’ ஒட்டவைத்துக்கொள்வதால் அவர்களைப்போல ஆகிவிட முடியாது அல்லவா..?” என்றனர் விரிவாக.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா