ஆட்சி செய்ய தகுதியற்றவர் நிதிஷ் குமார்: தேஜஸ்வி யாதவ் கருத்து..!
பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்
மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டும் நோக்கில், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும் பிஹார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ’ஜன் விஸ்வாஸ்’ என்ற பெயரில் 11 நாள் தேர்தல் யாத்திரையை நேற்று தொடங்கினார்.
மார்ச் 1-ம் தேதி வரையில் பிஹாரில் உள்ள 38 மாவட்டங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து உரையாற்ற அவர் திட்டமிட்டுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பிஹாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) ஆட்சி நடத்தி வந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் நிதிஷ் குமார் இந்தக் கூட்டணியிலிருந்து விலகி, பாஜகவுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். இது பிஹார் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிதிஷ் குமாரின் கூட்டணி தாவலை ராஷ்டிரிய ஜனதா தளம் விமர்சித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று யாத்திரையை தொடங்கிய தேஜஸ்வி யாதவ், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “நிதிஷ் குமாருக்கு பிஹார் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து எந்த இலக்கும் கிடையாது. பிஹாருக்கு நிலையான, தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைவர் தேவைப்படுகிறார். அந்தத் தகுதி நிதிஷ் குமாரிடம் இல்லை. நிதிஷ்குமார், ஒரு கூட்டணியிலிருந்து மற்றொரு கூட்டணிக்கு தாவிக்கொண்டிருப்பவர். தவிர, அவர் புதிய கோணத்தில் சிந்திக்கக்கூடியவரும் அல்ல.
பிஹாரின் பெரிய கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளது. மக்கள் எங்கள் கட்சி மீது மிகுந்த நம்பிக்கையும் அன்பும் கொண்டுள்ளனர். 17 மாதம் நிதிஷ் குமாருடன் இணைந்து ஆட்சியைப் பகிர்ந்தோம்.
இந்தக் காலகட்டத்தில் அவர் எடுத்த முக்கிய முடிவுகளுக்கு பின்னால் எங்கள் கட்சியே உள்ளது. குறிப்பாக, 10 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது எங்கள் கட்சியின் உறுதிமொழி. சொல்லப்போனால், பிரதமர் மோடியின் ரோஜ்கர் மேளாவுக்கு எங்கள் திட்டமே உந்துதலாக இருந்தது”என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu