என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
நயினார் நாகேந்திரன்
``தேர்தல் பிரசாரத்தின் போதே அது என் பணம் இல்லை. எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவாக கூறி விட்டேன். யாரோ என் பெயரை கூறுவதற்கு நான் பொறுப்பேற்க முடியாதே..." - நயினார் நாகேந்திரன்
சென்னையிலிருந்து நெல்லை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், திருநெல்வேலி தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் வேலை செய்யும் நபர் உள்ளிட்ட 4 பேரிடமிருந்து சுமார் ரூ.4 கோடியை தேர்தல் பறக்கும் படை கைபற்றியது. இது தொடர்பாக சதீஷ், பெருமாள், நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், விசாரணையில்,'500 ரூபாய் கட்டுகளுடன் கூடிய நான்கு பைகளை திருநெல்வேலியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக கொடுத்து அனுப்பினார்கள்' எனத் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, இந்தப் பணம் தொடர்பாக விசாரணை நடத்த 22-ம் தேதி ஆஜராகும்படி நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தனிப்பட்ட வேலைகள் காரணமாக நயினார் நாகேந்திரன் ஆஜராகவில்லை. இதற்கிடையில், அவருக்கு இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நயினார் நாகேந்திரன்,``தமிழ்நாட்டில் பறக்கும் படையால் இதுவரை 200 கோடிக்கு மேல் கைப்பற்றியிருக்கிறார்கள். இதில் ரூ.4 கோடி யாரோ என் பெயரை சேர்த்து கூறியதால் இதற்கு மட்டும் தனி கவனம் செலுத்துக்கிறீர்கள்.
இத்தனைக்கும் தேர்தல் பிரசாரத்தின்போதே அது என் பணம் இல்லை. எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவாக கூறிவிட்டேன். யாரோ என் பெயரை கூறுவதற்கு நான் பொறுப்பேற்கமுடியாதே... அதில் இருக்கும் மூன்று பேர்(பணத்துடன் சிக்கியவர்கள்) மட்டுமல்ல இன்னும் நிறைய பேரை எனக்கு தெரியும். அதற்காக அவர்கள் கூறும் குற்றச்சாட்டை நான் ஏற்க முடியாது. இதற்கு பின்னணியில் தி.மு.க, அ.தி.மு.க இருக்குமா என கேட்கிறீர்கள்.
இருவர் மீதும் குற்றமில்லை... இறைவன் செய்த குற்றம். உட்கட்சியிலிருப்பவர்களே இதை செய்திருப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நீங்களோ, நானோ நினைத்துப்பார்க்க முடியாத வகையில் பா.ஜ.க-வின் வளர்ச்சி வந்துகொண்டிருக்கிறது. இந்தப் பணம் தொடர்பாக காவல்துறையின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தருவோம். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், காவல்துறை அடித்து மிரட்டி வாக்குமூலம் வாங்கியிருக்கலாம். இதற்காகவெல்லாம் அவதூறு வழக்கு தொடர்வது நேர விரையம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu