உலக அளவில் சாதனை படைத்த பிரதமர் மோடி..! நடுத்தர மக்களையும் கவனிங்க..!

உலக அளவில் சாதனை படைத்த பிரதமர் மோடி..!  நடுத்தர மக்களையும் கவனிங்க..!
X

மோடி (கோப்பு படம் )

கொரோனா தொற்றுக்கு பின்னர் நடந்த உலகளாவிய பல ஜனநாயக நாடுகளின் தேர்தல்களில் பிரதமர் மோடி தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சமூக வலைதளத்தில் நண்பர் ஒருவர் எழுதிய பதிவு இதுவரை இல்லாத ஒரு யதார்த்த சூழலை சுட்டிக்காட்டியது. அவர் தெளிவாக பல விஷயங்களை சொல்லியிருக்கிறார். அதில் சிலவற்றை தவிர்த்து தேவையானவற்றை மக்களுக்கு தந்துள்ளோம். அவர் பதிவை பார்க்கலாம்.

பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை மேலோட்டமாக பார்த்தால் பாஜகவின் தோல்வியாகத் தான் தெரியும். ஆனால் உலகில் கோவிட்டுக்கு பிறகு எந்த ஜனநாயக நாட்டிலும் ஒரு அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. முதன் முதலாக மோடி அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அதுவும் நேருவுக்கு பின்பு 62 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அரசு மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம். உலகமே பொருளாதாரத்தில் வீழ்ந்த போது இந்தியா 8.2% GDP வளர்ச்சியை அடைந்தது சாதாரணமல்ல.

அதன் ஆழத்தை நாம் புரிந்து கொள்ளாததாலும், நம் எதிர்பார்ப்பு மிக அதிகமாக நம்மிடம் இருந்ததாலும், அதை தோல்வியாக பார்க்கிறோம். இதை தோல்வியாக பார்க்க வேண்டாமா என்றால், நம்மால இலக்கை எட்ட முடியவில்லை என்பதைத்தான் பார்க்க வேண்டும்! அதற்கு மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துமுன், நம்மை கொஞ்சம் சீராய்ந்து கொள்ள வேண்டும். அதை செய்யத் தவறினால் நமக்கும், கொத்தடிமைகளுக்கும் வித்தியாசம் என்ன?

பாஜகவிற்கு கண்ணுக்கு எட்டிய தூரம் எதிர்கட்சியே இல்லை. மோடிக்கு இணையாக யாருமில்லை என்றளவில் மோடியின் புகழ் என்பது காதை கிழிக்கும் அளவிற்கு போய்விட்டது. மோடிதான் இந்த மாற்றத்திற்கு மூலக் காரணம், முக்கிய காரணம் என்றால் அதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் எந்நேரமும் மோடி புகழ் பாடிக்கொண்டிருந்தால், கேட்கிற நமக்கே சலிப்பாக இருக்கிறது. அப்போது மற்றவர்களுக்கு? அதில் மோடி வேறு தன்னைத்தானே பாராட்ட ஆரம்பித்து விட்டார். மற்றவர்கள் புகழ்ந்து பேசுவதற்கு அவர் செய்வதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் உண்டு. (இதில் பல பாஜவினர் கோபப்படுவீர்கள், நிதானமாக யோசித்து பாருங்கள்).

அதனால் தன்னை இங்கே யாரும் வெல்ல முடியாது என்று பாஜகவிற்கு ஓவர் மிதப்பு வந்து விட்டது. நம்மைப் போன்ற ஆதரவாளர்கள் கூட எதிர்கருத்து சொல்பவர்களை சொல்ல அனுமதிக்கவில்லை. நமது அணுகுமுறை திமுகவினருக்கு பொருந்தும். ஆனால் சாதாரண மக்களுக்கு அது எரிச்சலை தந்துள்ளது என்பதை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம்.

அப்போது அளவுக்கதிகமான எதிர்பார்ப்பில் அதை செய்த நாம் இன்று எல்லாம் முடிந்து விட்டது என்று சுருங்கி சுணங்கிப் போய் விட்டோம். ஆனால் இரண்டுமே தேவையில்லை. பாஜக தோற்றும் போகவில்லை, முழுதாக வெற்றியும் பெறவில்லை என்ற என்ற சமன்பாட்டில் நிற்கிறோம்.

ஆம், நாம் பெற்ற அதீத சக்தியால் மிக உயரே வானில் பறந்து கொண்டிருந்த போது, அந்த சக்தி இழந்து மிக வேகமாக கீழே விழுவதைப் போன்ற ஒரு மோசமான தருணம். ஆனால் நாம் கண் விழித்தபோது அது மோசமான கனவு என்பது எப்படி ஒரு ரெண்டு கெட்டான் நிலையை கொடுக்குமோ அந்த நிலையில் இப்போது உள்ளோம். ஆனால் நாம் இன்னும் உயரமாக பறக்க முடியவில்லை என்று வருந்துவதற்கு பதிலாக வீழ்ந்து விடவில்லை என்பதற்காக சந்தோஷப்படுவோம்.

மோடி அரசு கட்டமைப்புகளை பெருமளவில் உயர்த்தியுள்ளது. அதுவும் இந்த குறுகிய காலத்தில். பரவாயில்லை இந்த தோல்வியில் பல நல்ல விஷயங்கள் நடக்க வாய்ப்புண்டு.

பொறுப்பேற்கும் மோடி அரசு இதைத்தான் முதலில் கவனிக்கவேண்டும்

நடுத்தர வர்க்கம் ஒரு ஸ்கூட்டர் வாங்கினால், 5 ஆண்டுகளுக்கு முன்பு ₹65,000 ஆக இருந்தது. இன்று ₹1,10,000. அதில் இன்சூரன்ஸ் ஐந்து ஆண்டுகளுக்கு போடவேண்டும். அந்த இன்சூரன்ஸ் என்பது பாதுகாப்பிற்கு, ஆனால் அதற்கு வரியாக 18%.

கோவையில் இருந்து சென்னை வருவதற்கு ஒரு லாரிக்கு டோல் கட்டணம் ₹2080. டீசல் ₹11,750, டிரைவர், கிளீனர் ₹2500, அப்படியெனில் ₹16,330. அது தவிர இன்சூரன்ஸ், போலீஸ் மாமூல், லாரிக்கு தேய்மானம் என்று பார்த்தால், அதுவே ₹20,000. அப்படியெனில் அந்த விலை ஏற்றம் எல்லாம் நாம் வாங்குகிற பொருளில் விலையேற்றத்தில் தான் முடியும்.

ஆனால் அந்த விலையேற்றம் என்பது பல வகைகளில் அரசுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வருமானமாக வருகிறது. அதன் மூலம் ஒரு பொருளின் விலை 10 ஆண்டுகளுக்கு முன்பு ₹100 ஆக இருந்தது இன்று ₹150 ஆகிவிட்டது. அதில் முன்பு 18% வரியாக இருந்தால், முன்பு அதே பொருளுக்கு GST ₹18, இப்போது ₹27. அப்படியெனில் அரசாங்கம் கண்ணுக்கு தெரியாமல் வரி என்று மக்களை நோகடிக்கிறது.

மக்கள் மீது மறைமுகமாக கடும் வரியை திணித்தது பாஜக. விலைவாசி உயர்வுக்கு பாஜகதான் மிக முக்கிய காரணம். கேஸ் விலை உயர்வு முதல் பல விஷயங்கள் நடுத்தர மக்களை வெகுவாக பாதித்தது. அதனால் இந்த தோல்வி இப்போதைக்கு மிக அவசியமானது.

இதே வரியை காங்கிரஸ் அரசாக இருந்தால் உயர்த்தாது. ஏனெனில் அவர்கள் அதில் பெருமளவில் ஊழல் செய்திருப்பார்கள். ஆனால் பாஜக இந்தியாவின் மிகவிரைவு சாலைகள் முதல், பாதுகாப்பில் மிகப்பெரிய முதலீடு, சந்திராயனுக்கு ராக்கெட் என்று பல தேவையான முதலீடுகளை செய்துள்ளது.

மேல்தட்டு மக்கள் இந்த வரிவிதிப்பு பாதித்தாலும் சமாளிக்க முடியும். கீழ்தட்டு மக்களுக்கு பெரும்பாலும் இலவசமாகவும், செய்யாத வேலைக்கு நூறு நாள் திட்டம் என்றும், ரேஷனில் 80 கிலோ இலவச உணவு, இன்சூரன்ஸ் என்று எல்லாம் கொடுக்கிறது. ஆனால் இந்த மத்திய தர மக்கள் இந்த கடும் வரி விதிப்பில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இன்று ₹50,000 சம்பளம் வாங்குகிற நடுத்தர வர்க்கம் கூட நாட்களை கடத்த தடுமாறுகிறது. வீட்டுவாடகை ₹10000, உணவு, அத்தியாவசிய தேவை ₹15000, போக்குவரத்து, மின்சாரம், போன் ₹2500. குழந்தைகள் கல்விக்கு ₹10,000. மருத்துவம் உற்பட மற்ற செலவுகள் ₹5,000. இதை தவிர எதிர்பாராத செலவுகள்? அவன் வாழ்க்கையை கொஞ்சம் யோசித்து பார்த்தாரா மோடி என்பது தான் மிகப்பெரிய கேள்வி.

இதற்கு மேலாக நாம் 8% வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று சொல்கிறோம். நேர்மையாக பார்த்தால் அதில் பாதி பணவீக்கத்தில் போய் விட்டது. பண வீக்கத்தை நாம் பொருட்களின் விலைவாசியை வைத்து பார்த்தால் புரியும். அதற்கு தங்க விலை என்பது நேரடியான ஒப்பிடும் முறை.

சென்ற 10 ஆண்டுகள் மெற்சொன்ன வரிகள் மூலம் மிகப்பெரிய வருமானத்தை ஈட்டிய அரசு அதில் மிகச்சிறப்பான கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளது. அதில் எந்த சந்தேகமுமில்லை. அதை மோடியை, பாஜகவை தவிர யாராலும் செய்ய முடியாது. 16,500 கோடி செலவில் சென்னை- பெங்களூர் விரைவு சாலை மூலம் பயண நேரம் 6 மணியிலிருந்து 3.5 மணியாக குறைந்துள்ளது.

ஆனால் இந்த முன்னேற்றங்கள் விலைவாசியை கட்டுப்படுத்தியதா, மக்கள் வருமானத்தை பெருக்கி, விலைவாசியை குறைத்ததா என்பதுதான் மிக முக்கிய முன்னேறத்துக்கான முக்கிய விஷயம்.

அதை சென்ற 10 ஆண்டுகளில் நல்ல காரணத்துக்காக செய்ய முடியவில்லை. பாஜகவிற்கு மீண்டும் ஒரு இமாலய வெற்றியை கொடுத்திருந்தால், அதைத்தான் இந்த மோடி அரசு மீண்டும் தொடர்ந்து செய்திருக்கும். இப்போது கிடைத்த தோல்வி என்பது அதை சரி செய்ய இறைவன் கொடுத்த சமிக்ஞை. இதனை மோடி நிச்சயம் புரிந்து கொண்டு விட்டார்.

சரி, தமிழகத்திலும் பாஜக கொஞ்சம் ஓவர் எதிர்பார்ப்பில் தான் இருந்தது. ஆனால் பாஜக மட்டுமல்ல, அதிமுகவின் இறுமாப்பும் பெரும் பிரச்னையாக இருந்தது. அ.தி.மு.க.,விற்கு பாஜகவின் பலம் புரியவில்லை. பாஜக ஒரு நோட்டா கட்சி என்று சொன்ன முன்னாள் அமைச்சர் உதயகுமார், தற்போது அ.தி.மு.க., பல இடங்களில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பின்பு புரிந்து கொண்டார். அதேபோல் பாஜகவிற்கு தனியாக 20% ஓட்டு இருக்கிறது. அடுத்த முதல்வர் நாங்கள் தான் என்று சொன்ன பாஜகவின் ஓட்டு 11.24% என்று முடிவுகள் மூலம் தெரிந்தத எதார்த்தம் தான். இதன் மூலம் நல்ல பல விஷயங்கள் வெளி வந்திருக்கிறது. அதில் பாஜக மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்று விட்டது.

திமுக : 26.93%

அதிமுக: 20.46%

பாஜக: 11.24%

காங்கிரஸ் : 10.67%

நாதக: 8.19%

பாமக: 5.?%

பாஜகவிற்கு கட்டமைப்பே இல்லை என்று சொன்ன போது, ஏற்றுக்கொள்ளாமல், பாஜக தனித்து நின்றாலே வெற்றி பெறும் என்று திட்டிய பல பாஜவினர் இன்று என்ன சொல்லப்போகிறார்கள்?

இந்திய அளவில் பாஜக 1.5% வாக்குகளை இழந்துள்ளது. காங்கிரஸ் இன்னும் மூன்று இலக்கத்தை கூட தொட முடியவில்லை என்பதும், மாநில் கட்சிகள் ஒவ்வொன்றாக வீழ்கிறது, கம்யூனிஷம் காலியாகி விட்டது என்று எல்லாம் நல்லவையே நடந்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் ஒரு நாளைக்கு 7 கிமீ துாரம் மட்டுமே போடப்பட்ட ரோடு, இன்று 47 கிமீ ஆகியிருக்கிறது. அதற்கு அர்த்தம் இல்லையா என்றால், அதனால் தான் இன்று பாஜக கூட்டணியாக, மூன்றாவது முறையாக, உலகில் எந்த ஜனநாயக அரசும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாத போது, மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள மறந்து விட்டோம்.

காரணம் எமோஷன். அதே எமோஷந்தான் தி.மு.க., தொண்டர்களை இன்னும் இப்படி வைத்திருக்கிறது என்று நாம் புரிந்து கொண்டால், உண்மையும், மோடி அரசு இதுவரை செய்தது சரிதான். ஆனால் இனிமேல் அதையே செய்யக்கூடாது, முடியாது என்ற எதார்த்தத்தை புரிந்து கொண்டால் மீண்டும் வெல்வோம், புரியாவிட்டால் வீழ்வோம்!

அதேநேரம் ஊழல்வாதிகளுக்கு தண்டனை தருவது, போதைப்பொருள் கும்பலை அழிப்பது, நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, தேசத்தின் உள்நாடு, வெளிநாடு பாதுகாப்பு விஷயங்களில் உறுதி காட்டுவது நிச்சயம் நாட்டிற்கு நன்மையை தான் தரும். இந்த விஷயங்களி்ல் மோடி நிச்சயம் தேசத்தின் நன்மையில் இருந்து துளியளவும் பின்வாங்கவே மாட்டார் என்பது உறுதியாக தெரியும்.

இந்த பதிவு பாஜவினருக்கும் பிடிக்காது. எதிர்கட்சிகளுக்கும் பிடிக்காது என்றாலும், இதுவே சரியென்று எனக்குத் தோன்றியது. ஏனெனில் நான் மோடி தான் நிரந்தர பிரதமர் என்று சொல்லி பெறும் ஆதாயத்தை விட, அவரின் ஆட்சி அடுத்த 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என்ற எதார்த்தத்தில் எழுதுகிறேன்!

இதை செய்தால், இதுவரை இந்தியா பெற்ற வளர்ச்சியை விட அதிகமான வளர்ச்சியை இந்தியா பெறும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

மோடி எதுவும் செய்யலைன்னு நாங்கள் சொல்லலை. நடுத்தர மக்களின் வாழ்க்கைக்கும் கொஞ்சம் செய்தால் நால்லாருக்கும்னு சொல்றோம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!