பிரதமர் மோடி தான் பிறவி எடுத்ததன் நோக்கம் பற்றி என்ன சொன்னார்?

பிரதமர் மோடி தான் பிறவி எடுத்ததன்  நோக்கம் பற்றி என்ன சொன்னார்?
X

தேனி பா.ஜ.க.,வை சேர்ந்த டாக்டர் எம்.டி.எஸ்.,

சில நாட்களாக பிரதமர் மோடி தன்னுடைய பிறப்பைப் பற்றி சொன்ன கருத்துக்களை திரித்து வெளியிட்டு பல ஊடகங்கள் தங்களை திருப்திப்படுத்திக் கொள்கின்றன.

தேனி பா.ஜ.க.,வை சேர்ந்த டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்.,பிரதமர் மோடியின் பிறப்பு குறித்து அவர் கூறிய கருத்துக்கள் பற்றி கூறியதாவது:

கல்லில் துணியை அடித்துத் துவைக்கும் ஒருவனைப் பார்த்து, '''அவன் முட்டாள். துணியால் கல்லை உடைக்க முயல்கிறான்'', என்று ஒருவர் சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இவர்களின் மொழிபெயர்ப்பும், உயர்ந்த சிந்தனைகளை புரிந்துகொள்ளும் ஆற்றலும் இருக்கிறது. ஒரு நிருபர், பிரதமரைப் பார்த்து, ‘உங்களால் எப்படி இவ்வளவு ஆற்றலுடன் செயல்பட முடிகிறது’ என்று கேட்கிறார்.

அதற்கு பிரதமர் மோடி, தாயின் மூலமாக பிறந்திருந்தாலும், கடவுள் என்னை சில நற்பணிகளுக்காக தேர்தெடுத்து ஆற்றலை அளித்து அனுப்பியுள்ளார் என்று நான் நம்புகிறேன். இல்லை என்றால் ஒரு மனிதனாக என்னால் இவ்வளவு ஆற்றலுடன் செயல்பட இயலாது, என்று பதிலளித்தார்.

உண்மையான அர்த்தம் இப்படியிருக்க, தங்களுக்கு ஏதுவாக எதையாவது எழுதுவது இவர்களின் வாடிக்கை. அவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அவரின் பேச்சில் நான் பார்த்த உயர்ந்த சிந்தனை பற்றி சாது ஶ்ரீராம் தெளிவாக விளக்கி உள்ளார். அந்த விளக்கத்தை இங்கே பதிவது அவசியம் என்று நினைக்கிறேன்.

அந்த விளக்கம் பற்றி பார்க்கலாம்.

மகாபாரதத்தின் அற்புதமான நிகழ்வு இது. இதை பலமுறை, பல தருணங்களுக்காக எழுதியிருக்கிறேன். அப்படி ஒரு தருணம் மீண்டும் வந்திருப்பதாக நான் உணர்கிறேன். குருட்சேத்திர போர் முடிந்து முப்பத்தி ஆறு வருடங்கள் முடிந்தன. காந்தாரி அளித்த சாபத்தின்படி கிருஷ்ணரின் குலமாகிய விருஷ்ணி குலம் அழிந்தது. ஒரு ஆண் கூட பிழைத்திருக்கவில்லை. கிருஷ்ணரும், அவரைச் சார்ந்தவர்களும் இறந்து போனார்கள்.

கிருஷ்ணர் இறப்பதற்கு முன்பாக தனக்கு அர்ஜுனன் தான் ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல், தான் இறந்த எட்டாம் நாள் துவாரகை கடலில் மூழ்கும். அதனால் பெண்களையும், குழந்தைகளையும் அர்ஜுனன் தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும், என்று சொல்லியிருந்தார். அதன்படி அர்ஜுனன் வரவழைக்கப்பட்டு கிருஷ்ணருக்கு ஈமக்கிரியைகளை செய்து முடித்தான்.

கிருஷ்ணர் சொன்னபடி துவாரகை கடலில் மூழ்கியது. அதற்கு முன் குழந்தைகளையும், பெண்களையும் தன்னுடன் இந்திரப் பிரஸ்தத்திற்கு அழைத்துச் செல்கிறான் அர்ஜுனன். அப்படி செல்லும் வழியில் கொள்ளையர் கூட்டம் ஒன்று கூட்டமாக பெண்கள் செல்வதைக் கவனித்தது. கொள்ளையர்கள் அர்ஜுனனையும், அவனைச் சார்ந்தவர்களையும் தாக்கினார்கள். இதைத் பார்த்த அர்ஜுனன் சிரித்தான். வீரமாக பேசினான்.

' 'கொள்ளையர்களே! குருட்சேத்திர போரை தனி ஒருவனாக வென்ற அர்ஜுனன் நான். உயிர் மீது ஆசையிருந்தால் ஓடிவிடுங்கள். இல்லையேல் என் அம்புக்கு இரையாவீர்கள்', என்று சொன்னான் அர்ஜுனன்.

கொள்ளையர் கூட்டம் அர்ஜுனனின் வார்த்தைகளை அலட்சியம் செய்து விட்டு தாக்குதலை தொடர்ந்தனர். அர்ஜுனனின் சட்டென்று தனது காண்டீபத்தை எடுத்தான். அதில் நாண் பூட்ட முயற்சித்தான். அவனால் பூட்ட முடியவில்லை. கடும் முயற்சிக்குப் பின் மிகவும் கஷ்டப்பட்டுத் தான் நாண் பூட்ட முடிந்தது. அஸ்திரங்களை ஏவுவதற்காக ஒவ்வொரு அஸ்திரம் குறித்த மந்திரங்களை சொல்ல முயற்சித்தான். அந்த மந்திரங்கள் நினைவிற்கு வரவில்லை. இதையெல்லாம் மீறி அஸ்திரங்களை ஏவினான். அவற்றில் பல வீணாயின.

அர்ஜுனனின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. திருடர்கள் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது மட்டுமில்லாமல், பெண்களையும் கவர்ந்து சென்றனர். அர்ஜுனனின் தரப்பில் பலரும் கொல்லப்பட்டனர். மனமுடைந்து போன அர்ஜுனன், மீதமிருந்த பெண்களையும், குழந்தைகளையும் தன்னுடன் இந்திரப்பிரஸ்தத்திற்கு அழைத்துச் சென்றான். இந்த நிகழ்விற்குப் பிறகு வியாசருடைய ஆசிரமத்திற்குச் சென்றான். வியாசரிடம் பேசினான்.

'கிருஷ்ணர் மறைந்த பிறகு எனக்கு புத்தி மயக்கம் ஏற்படுகிறது. சாதாரண திருடர்களைக் கூட என்னால் அடக்க முடியவில்லை. என் கண் எதிரிலேயே பெண்களை கவர்ந்து சென்றார்கள். பொருட்களை கொள்ளையடித்தார்கள். காண்டீபத்தில் நாண் பூட்டுவதே எனக்கு சிரமமான காரியமாகி விட்டது. என் அஸ்திரங்கள் எல்லாம் வீணாயின. நான் மதி மயக்கதில் சிக்கித் தவிக்கிறேன். நீங்கள் தான் எனக்கு மனத் தெளிவை ஏற்படுத்த வேண்டும்', என்று வேண்டினான் அர்ஜுனன்.

'அர்ஜுனா! நடந்ததை நினைத்து வருந்தாதே! தேவ காரியத்தை நிறைவேற்றுவதற்காக மனித உடல் எடுத்து வந்தார்கள் கிருஷ்ணரும், பலராமரும். வந்த வேலை முடிந்ததும், அவர்கள் திரும்பிச் சென்றுள்ளார்கள். நீங்கள் எல்லாம் கூட அந்த வேலைக்காக பயன்படுத்தபட்டவர்களே! உன்னுடைய அஸ்திரங்கள் பயனற்றுப் போனது காலத்தின் பிரதிபலிப்பு. ஒரு விஷயத்தை நினைவில் கொள்; “பலன், செல்வம், எடுத்த காரியத்தை நிறைவேற்றும் உறுதி, அடுத்து வருவதை யோசிக்கும் அறிவு, புகழ் ஆகிய எல்லாமே காலத்தினாலேயே முடிவு பெறுபவை.

இந்த உலகில் ஒருவன் மிகுந்த பலமுள்ளவனாக திகழ்வதும் காலத்தினால் தான்; அவனே பலமற்றவனாக போவதும் காலத்தினால் தான். உன்னுடைய போர்த்திறன், உன்னுடைய அஸ்திர அறிவு ஆகியவை செய்ய வேண்டிய காரியத்தை செய்து முடித்து விட்டது. ஆகையால் இப்போது அவை இல்லாமல் போய் விட்டது. இதுவும் காலத்தின் முடிவே. அர்ஜுனா! நீங்கள் அனைவரும் கூட நற்கதியை நோக்கி நகரும் காலம் வந்து விட்டது', என்று சொல்லி முடித்தார் வியாசர்.

வியாசர் சொன்னதை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாமெல்லாம் காலத்தின் கருவிகள். நாம் எதற்காக பிறந்திருக்கிறோம்? அந்த நோக்கத்தை நிறைவேற்றி விட்டோமோ? என்பதை காலமே முடிவு செய்கிறது. அதை சாதாரண மனிதர்களால் தெரிந்து கொள்ள முடிவதில்லை.

ஒரு நிறுவனத்தில் பெரிய பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர். இந்த பிறவியின் நோக்கமே அந்த நிறுவனத்தை திறம்பட நடத்துவது தான் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். காலையில் நடை பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது ஒரு குட்டி நாய் வண்டியில் அடிபட்டு கத்திக் கொண்டிருக்கிறது. ஓடிப் போய் அதை தூக்குகிறார். உடலில் வழிந்த ரத்தத்தை துடைத்தார். தன் வீட்டுக்கு எடுத்து வந்து சிகிச்சை செய்தார்.

நான்கு நாட்களுக்குப் பின் குட்டி நடக்கத் தொடங்கியது. அந்த நான்கு நாட்களில் அதிகாரிக்கு குட்டியுடன் பந்தம் ஏற்பட்டு விடுகிறது. குட்டி குணமடைந்தவுடன் அதை எங்காவது விட்டு விடலாம் என்று நினைத்தவர் தற்போது அந்த நினைப்பை மாற்றிக் கொண்டார். தினமும் நடை பயிற்சிக்கு குட்டி அவருடன் செல்கிறது. ஓய்வு நாட்களில் பெரும் பகுதி குட்டியுடனே செலவழிக்கும் நிலை. எங்காவது ஊருக்குச் செல்வதென்றாலும், குட்டி தவிக்குமே! என்று மனம் நினைக்கத் தொடங்கியது.

அதன் பிறகு குட்டி அவருடனே பல வருடங்களுக்கு வாழ்கிறது. அந்தக் குட்டியுடம் பிறந்த மற்ற குட்டிகளுக்கு கிடைக்காத அற்புதமான வாழ்க்கை இந்த குட்டிக்கு மட்டும் கிடைத்திருக்கிறது. இந்த உலகத்தில் நம்மை அன்போடு அணைத்துக் கொள்ள யாருமில்லாத நிலையும், நம் மரணத்திற்கு பிறகு நமக்காக கண்ணீர் சிந்த ஆட்கள் இல்லாத நிலையும் நம் பிறவி தோற்றுப் போன பிறவி என்பதைக் காட்டுகிறது. குட்டிக்கும், அதிகாரிக்கும் அந்த நிலை ஏற்படப்போவதில்லை.

ஒரு அதிகாரியாக நிறுவனத்தை திறம்பட நடத்தி உச்ச நிலையை அடைந்தது அவரின் பிறப்பின் நோக்கமா? அல்லது பிழைக்க வழியில்லாத குட்டிக்கு உயிர் கொடுத்து உறவையும் கொடுத்தது அவரின் பிறப்பின் நோக்கமா? இதை யாரால் முடிவு செய்ய முடியும்?

பிறவியின் நோக்கத்தை நாமாக கடந்து செல்ல முடியாது. நோக்கத்தை அடைந்து விட்டோம் என்றும் சொல்லிவிட முடியாது. வாழ்க்கையில் ஒவ்வொரு நாளின் மீதும் நம்பிக்கை இருக்கும் வரை நோக்கம் நகர்ந்து கொண்டே செல்கிறது என்பது தான் உண்மை.

அதனால் தான் மிகப் பெரிய ஞானிகள் உன்னை நீயே அறிந்துகொள் என்று சொல்கிறார்கள். நம் பெயரோ, நம் அடையாளங்களோ நம்மை நாம் அறிந்து விட்டோம் என்று அர்த்தமாவதில்லை. நம்மை கருவியாக்கும் காலம் எதைச் செய்வதற்காக நம்மை வைத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம். காலம் நம்மைக் கேட்டு இலக்குகளை நிர்ணயிப்பதில்லை. எல்லாமே காலத்தால் நிர்ணயிக்கப்பட்டு, காலத்தாலேயே அறுவடை செய்யப்படுகிறது. அந்த நோக்கத்தை நாம் அறிந்து விட்டால், நாம் யார் என்பதற்கான விடை கிடைத்து விடும்.

இப்படிப்பட்ட தேடல்களை செய்யாத காரணத்தால் தான் பகவானிடம் கீதையைக் கேட்ட அர்ஜுனன், தானே குருட்சேத்திர போரின் வெற்றிக்கு காரணம் என்று நினைத்தான். அதனால், தன்னுடைய குணங்களும், பராக்கிரமும் தன்னுடைய சொத்து. அது நிலையானது என்றும் நினைத்தான். அதன் விளைவே அவனை திருடர்களிடம் தோற்கச் செய்தது.

நம்மால் செய்து முடிக்கப்பட்ட சாதனைகள் நம்மை வழி நடத்தினால், நாம் யார் என்ற கேள்விக்கு உண்மையான பதில் கிடைப்பதில்லை. இப்போது பிரதமர் மோடியின் பதிலுக்கு வருவோம். தாயின் மூலமாக பிறந்திருந்தாலும், கடவுள் என்னை சில நற்பணிகளுக்காக தேர்தெடுத்து ஆற்றலை அளித்து அனுப்பியுள்ளார் என்று நான் நம்புகிறேன். இல்லை என்றால் ஒரு மனிதனாக என்னால் இவ்வளவு ஆற்றலுடன் செயல்பட இயலாது .. . . . . இது அவர் பதில்.

தன்னை அவர் அறிந்து கொள்ள தொடர்ந்து முயற்சிக்கிறார். அந்த முயற்சி தொடர்வதால் இப்படி ஒரு பதிலை அவர் அளித்திருக்கிறார். அவர் நம்பிக்கையை மட்டுமே தெரிவித்திருக்கிறார். தன்னை கடவுள் என்று சொல்லவில்லை.

பகவான் ஶ்ரீ கிருஷ்ணரும், ஶ்ரீராமனும் மனிதனாக பிறந்தாலும், தாங்கள் கடவுள்கள் என்பதை மறந்து பிறவியின் நோக்கத்தை நோக்கி பயணித்தார்கள். அப்படித்தான் ஒவ்வொருவரும் பயணிக்கிறோம். அதில் சிலரே நோக்கத்தை தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்று விடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவராகத்தான் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். புரிந்தவர்கள் அமைதியாக செல்கிறார்கள். புரியாதவர்கள் குறைகுடமாக குளுங்குகிறார்கள். இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!