முதலில் வாழ்க்கை பாதுகாப்பு; அடுத்தது வாழ்வியல் மேம்பாடு..!

முதலில் வாழ்க்கை பாதுகாப்பு;  அடுத்தது வாழ்வியல் மேம்பாடு..!
X

டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்.,

மோடி இந்திய மக்களின் வாழ்க்கை பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியுமா?

மோடி உலக அளவில் பெயர் வாங்குகிறார். நாட்டு மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கு பெரிய அளவில் பங்காற்றவில்லை என்ற புகார் பரவலாக இருந்து வருகிறது. அந்த அளவு விலைவாசி உயர்வும், பணமதிப்பு வீழ்ச்சியும், வருவாய் பற்றாக்குறையும், வேலையிழப்பும் நாட்டு மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இதனால் தான் தேர்தலில் பாஜக சறுக்கியது என்ற விமர்சனங்கள் வலுத்து வருகின்றன. இப்படி விமர்சிப்பவர்களை எதிர்த்து பேச பா.ஜ.க.,வின் முக்கிய நிர்வாகிகள் கூட தயக்கம் காட்டுகின்றனர். இந்நிலையில் இது பற்றி தேனி மாவட்ட பா.ஜ.க., மருத்துவ பிரிவு டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்., கூறியதாவது:

இந்தியாவில் இப்போது நடந்து வருவது எவ்வளவு பெரிய விசயம். யாராவது இது பற்றி பெருமையா பேசியிருக்கோமா? யாரோட உழைப்பு? மோடியும் அவரது அணியினரும் நம்ம பேஸ்புக் கருத்து கந்தசாமிகளிடம் அட்வைஸ் கேட்டு தான் செய்தார்களா? வெனிசுலாவிலிருந்து சீனாவே எண்ணெய் வாங்க பயந்து நிறுத்திய பின்னும், இந்தியா ஒரு செம்ம ப்ளான் பண்ணி அமெரிக்காவின் தடையை மீறி இறக்குமதி செய்து வருகிறது. இது யாருடைய திட்டம்? எப்படிப்பட்ட கடுமையான உழைப்பு?

ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஆயுதங்கள் வாங்க செலவு செய்தது போய், பல நாடுகளுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்கிறோமே இதுக்கு முன்னாடி ஏன் நடக்கல? இப்ப நடக்கக் காரணம் யார்?

அஜர்பைஜானுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்கிறோம். யாரைத் தாக்க? அர்மீனியாவினைத் தாக்க பயன்படுத்துகிறது அஜர்பைஜான். ஆனால், நாம அதே அர்மீனியாவுடன் கூட்டு சேர்ந்து வட மத்திய கிழக்கு காரிடாருக்கு ரோடு போட்டுட்டு இருக்கோம். இதெப்படி சாத்தியமானது? இதற்கு எத்தனை விசயங்களில் வளைந்து, விட்டுக் கொடுத்து சாதித்திருக்க வேண்டும்? யாரால் இது சாத்தியமானது?

தென்சீனக் கடலில் எப்பவோ பிரச்சினை வரலாம் என்பதை மனதிற் கொண்டும், சூயஸ் கால்வாயில் ஏற்படும் ட்ராஃபிக் மற்றும் அதீத செலவுகளைக் குறைப்பதோடு, 44 நாட்களில் வர வேண்டிய பொருட்களை 23 நாட்களிலேயே ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்து சாதித்திருக்கிறோமே? ஒரு வார்த்தை அதை பத்தி எழுதி சிலாகித்திருப்போமா?

உலகின் அதிமுக்கியமான கமாடிடியான லித்தியம் தாதுவை, சீனாவின் போட்டியைத் தாண்டி, அமெரிக்காவின் கெடுபிடியைத் தாண்டி பொலிவியா இந்தியாவுக்குக் கொடுக்க சம்மதித்திருக்கிறதே அது எப்படின்னு யோசிச்சிருப்போமா?

ஒத்த ஹம்பந்தோடா துறைமுகத்துக்கு எதிராக கொழும்பு மற்றும் விழிஞ்சியம் போர்ட் மட்டும் போதாதென்று எதிர்காலத்தை மனதிற் கொண்டு மலாக்கா ஸ்ட்ரைட்க்கு நெத்திக்கு எதிராக நிக்கோபார்ல போர்ட் ஒன்று கட்ட ஆயத்தமாகி விட்டோமே.. நம் எதிர்கால சந்ததியைப் பற்றி நம்மை விட அதிகமாக யோசிக்கும் இந்த மோடி அரசை நினைத்து பெருமையா பேசியிருக்கோமா?

இத்தனை வருசமா பஞ்சாயத்திலேயே ஓடிட்டிருந்த தீஸ்டா நதி பிரச்சினையை சீனாவின் ஆதிக்கத்தை முறியடித்து அதிலிருந்து மின்சாரம் எடுத்து பகிர்ந்து கொள்ள ஷேக் ஹசீனா கூட ஒப்பந்தம் போட்டிருக்கோமே பெரிய விசயமா தெரியல?

சவுதி, ஈரானோடு ஒரே தட்டுல சாப்பிட்டுக்கிட்டு, பாலஸ்தீனத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு, இஸ்ரேலுக்கு (ஊரறிஞ்ச) ரகசியமாக ஆயுதங்கள் சப்ளை பண்றோமே அது எவ்வளவு பெரிய சாணக்கியத்தனம்னு மோடி அரசாங்கத்தை நினைத்து ஆச்சர்யமா இல்லை?. இது மாதிரி இன்னும் ஐம்பது பாய்ண்ட்கள் எழுத முடியும்.

ஆனால், நம்ம ஆளுக சோசியல் மீடியாவில் உட்கார்ந்துக்கிட்டு மோடி மிச்சர் திங்கிறார்னு வெட்டி சவுண்டு விட்டுட்டிருக்கோம். கேட்டா என்ன சொல்வீங்க அடுத்தடுத்து ஜெயிக்கணும் என்ற ஆதங்கத்தில் தான் நாங்க பாஜக மோடி அமித்ஷாவைத் திட்டுறோம்னு சப்பைத் தனமா சப்ப கட்டுவீங்க... உங்க ஆதங்கங்களத் தான் 2014லிலிருந்து பார்த்துட்டு தானே இருக்கோம்? உங்க அட்வைஸை எல்லாம் கேட்கிற அளவுக்கு அவங்க இருந்தா பத்து வருசமா அங்க இருக்க முடியுமா?

மோடிக்கும் அமித்ஷாவுக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு அறிவிருக்கிறவங்க அவங்கவங்க தொழில் வேலையில் எம்புட்டு சாதிச்சிருக்கீங்கனு சொல்லுங்க பார்ப்போம்? இந்த “ஜெயிக்கிற குதிரை என் குதிரை! தோத்தா காறித் துப்புவேன் “ என்ற லாஜிக்கை எல்லாம் கிரிக்கெட்டோட நிறுத்திக்குங்க. மாநிலப் பிரச்சினைக்கு எப்ப தேசியப்பிரச்சினைக்கு எப்ப முன்னுரிமை கொடுக்கணும்னு தெரியாமலா அவ்வளவு பெரிய டீம் வேலை செய்திட்டிருக்கு?

முதலில் உலக நெருக்கடிகளில் இருந்து நாட்டை காப்பாற்றி பலப்படுத்த வேண்டும். அதன் பின்னர் உள்நாட்டில் அதிகமாக களையெடுக்க வேண்டியிருக்கும். அதனை செய்த பின்னரே நடுத்தர, ஏழை மக்களின் வாழ்வியல் முறைகளை மேம்படுத்த முடியும். இதெல்லாம் தெரியாமலா மோடி ஆட்சி நடத்துகிறார்.

அவருக்கும், அவரது டீமுக்கும் எப்போது எதை செய்ய வேண்டும் என்பது தெளிவாகத் தெரியும். காங்கிரஸ் ஆண்ட போது கொட்டப்பட்ட 60 ஆண்டுகால குப்பைகளை சுத்தம் செய்ய சில ஆண்டுகள் பொறுத்து தான் ஆக வேண்டும். மோடியின் தலைமையில் இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரமும் மிகப்பெரிய அளவில் உயரத்தான் போகிறது. அதனை நாம் காணத்தான் போகிறோம். இந்தியாவை பார்த்து ஒட்டுமொத்த உலகமும் வியந்து போகத்தான் போகிறது. வியந்துகொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!