மக்கள் கோபம் நியாயமானதா? மோடியின் செல்வாக்கு சரிகிறதா?

மக்கள் கோபம் நியாயமானதா?  மோடியின் செல்வாக்கு சரிகிறதா?
X

பிரதமர் மோடி (கோப்பு படம்)

வரும் பட்ஜெட் நடுத்தர மக்களின் சுமைகளை குறைக்கும் என நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பாஜகவுக்கு சில பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. அந்த பாடங்கள் சில திட்டமிடுதலுக்கு வழிவகுத்துள்ளது. அதைத்தான் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கான காரணங்களை பார்க்கலாம்.

பெரிய வெற்றியை எதிர்பார்த்த பாஜக, தட்டுத் தடுமாறி வெற்றிபெற்றுள்ளது. இப்போது மொத்த எதிர்கட்சிகள் சேர்ந்து பாஜக பெற்ற வெற்றியை பெறவில்லை என்று அவர்களுக்கு பதில் சொல்வது சரிதான். ஆனால் அதே பதிலை நமக்குள்ளும் சொல்லிக் கொண்டு சமாதானப்படுத்திக் கொண்டால், காங்கிரஸ் வழியில் பாஜகவும் செல்ல நேரிடும்.

ரஷ்யாவை போரினால் வீழ்த்த முடியாது. பொருளாதாரத்தால் வீழ்த்த முடியும் என்று உக்ரைனை வைத்து போரில் இறங்கிய அமெரிக்காவிற்கு, இந்தியா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் வல்லரசின் வலிமையை கேள்விக் குறியாக்கி விட்டது.

உலகின் உயர்ந்த குடி என்று நினைத்த ஐரோப்பிய நாடுகளை, ஏழ்மையின் சுவடுகளை சுட்டிக்காட்டியது மட்டுமல்ல, அதன் ஏழை நாடுகளை ஏய்க்கும் தந்திரத்திற்கு, இருந்த வாய்ப்புகளை ஏழை நாடுகளுக்கு புரியவைத்து, அதன் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி, செவுலில் அறைந்து கேள்வியும் கேட்டு விட்டது.

யானைக்காலை வைத்து மிரட்டிக்கொண்டு இருந்த சீனாவிற்கு, அதன் கால்களுக்கு ஆட்டுக்குட்டியின் பலம் கூட இல்லை என்பதை புரியவைத்தது. அது அதன் எதிர்கால வல்லரசு என்ற கனவை கேள்விக்குறியாக்கி விட்டது. அதற்கு மேலாக தீவிரவாதிகளின் ஆணி வேரினை பறித்தது. அண்டை நாடுகளுக்கு அதன் உண்மையான பலம், பலவீனம் என்ன என்பதை புரிய வைத்தது. அதன் எதிர்காலம் என்ன என்பதெல்லாம் போய், நாளைக்கான வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டது.

அவர்கள் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார்கள். இங்கே இருக்கும் தேச விரோத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதாவது பாஜக அரசுக்கு இருக்கும் ஆதரவாளர்களிடம் இருக்கும் ஒற்றுமையைவிட, எதிர்ப்பவர்களுடம் ஒற்றுமையும், அதற்கான தேவையும் மிக அதிகம்.

அதையெல்லாம் தாண்டி இந்தியாவின் கட்டமைப்பு பிரமாண்டத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் இதுவெல்லாம் ஒரு சாதாரண மனிதனின் வாழ்வில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது? விலைவாசி கடந்த மூன்று ஆண்டுகளில் எப்போதும் இல்லாத உச்சம் தொட்டுள்ளது. முன்பு இதைவிட மோசமான வரிகள் இருந்தது. ஆனால் அவை மக்களின் கண்ணுக்கு தெரியவில்லை. இன்று ஒரு பொருளின் வரி மொத்தமாக பில்லில் தெரிகிறது.

மேல்தட்டு மக்கள் சமாளித்துக் கொள்கிறார்கள். கீழ்த் தட்டு மக்களுக்கு இலவசங்கள் சென்றடைகிறது. சமரசம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அதிகமாக தன் உழைப்பை மட்டும் நம்பி வாழும் நடுத்தர மக்களுக்கு, கடுமையான விலைவாசி ஒரு பக்கம் கீழிழுக்க, தன்னால் உழைத்து வாழ முடியும் என்ற நம்பிக்கையை வேகமாக சிதைக்கிறது என்பதைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது.

தினந்தோறும் வாழ்க்கைக்காக போராடிக்கொண்டு இருப்பவர்களிடம் போய் இந்தியா வல்லரசாகிறது, பொருளாதாரத்தில் மூன்றாம் இடத்தை நோக்கி நகர்கிறோம், எக்ஸ்பிரஸ் வழியில் மூன்று மணி நேரத்தில் சென்னையில் இருந்து பெங்களூர் போகலாம் என்று சொன்னால், அவர்களுக்கு எரிச்சல் தான் வரும். அவர்களிடம் போய் உனக்கு நாட்டுப்பற்று இல்லையா என்றால், அதிக கோபமே வரும். காரணம் அவர்களுக்கு நாட்டுப்பற்று அதிகம் இருக்கிறது. அதேநேரம் வயிற்றுப்பிழைப்பும் முக்கியம் என கருதுகின்றனர்.

இப்படி பல காரணங்களை ஒவ்வொருவருக்கும் தெரிந்த காரணங்களை சொல்லலாம். இது நீண்டகால எதிர்காலத்திற்கு நல்லது என்று சொன்னாலும், நிகழ்காலமே கேள்விக்குறியாக இருப்பவர்களிடம், எதிர்காலம் பற்றி பேசினால் எரிச்சல் தான் வரும். இதில் தமிழகத்தில் சங்கிகள் அடித்த கூத்து சொல்லி மாளாது. அவ்வளவு பெரிய குளறுபடிகள் நடந்தது.

வாக்குகளை கூட்டும் வாய்ப்புகள் இருந்ததை பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் வெகுவாக குறைத்து விட்டனர். சங்கிகள் வாக்கு சதவீதத்தை ௧௫சதவீதம் என்று நம்மில் பலர் களத்தில் இறங்கி வேலை பார்க்கவில்லை. கேட்டால் எல்லாம் மோடி, அண்ணாமலை பார்த்துக் கொள்வார் என்று இருந்து விட்டனர்.

அதிமுகவில் இருந்த ஓட்டுக்கள் 1/3 பாஜகவின் ஓட்டுக்கள் அது வந்து விட்டது. இன்னொரு 1/3 பாஜக எதிர்ப்பு திராவிட ஓட்டுக்கள், அதில் பெரும்பகுதி பாஜகவை தோற்கடிக்க திமுகவிற்கு போய் விட்டது. மீதம் இருந்த ஓட்டுக்களில் கணிசமான ஓட்டுக்கள் பாஜகவிற்கு வரவேண்டியது, அதை வரவிடாமல் செய்ததில் பா.ஜ.க.,வினரின் பங்கு மிக அதிகம்..

ஏனெனில் பா.ஜ.க.,வினருக்கு கட்சிக்கும் எடப்பாடிக்கும் வித்தியாசம் தெரியவில்லை. எடப்பாடியை டயர் என்று திட்டும் போது, அது அதிமுகவினரையும் காயப்படுத்துகிறது என்ற வித்தியாசம் புரியவில்லை. அதை கோயம்புத்தூரில் அண்ணாமலைக்கு எதிராகிப்போன அந்த வாக்குகள் ஆணித்தரமாக சொல்கிறது.

அதே நிலையில் திமுக லாவகமாக பாஜக- அதிமுக விடையே இருந்த பகைமையை மிக சாதுர்யமாக வளர்த்தது. அதன் மூலம் ஓட்டுக்கள் பிரிந்தது. எனது எதிர்பார்ப்பு, அந்த ஓட்டுக்கள் ஏதாவது ஒரு பக்கம் பொலாரைய்ஸ் ஆகும் என்பது தான். அதை ஆகாதவண்ணமும். அதை தாண்டி, அதை தன்னிடம் ஈர்த்து திமுக சிறப்பாக சாதித்தது.

இந்த கடும் தோல்விக்கு பின்னர் கூட இரு கட்சிகளிடையே அந்த பகைமை மறையவில்லை. அதனால் இது தொடர்ந்தால் அடுத்த சட்டசபை தேர்தலில் மீண்டும் திமுக தான் வெற்றி பெறும்.

இங்கே பாஜக ஆதரவாளர்கள் கணக்கிடுவது எடப்பாடிக்கு இன்னொரு தோல்வி என்பது தாங்க முடியாத ஒன்று என்று நினைக்கிறோம். ஆனால் அதற்கான லகான் தி.மு.க., கையில் உள்ளதை யாரும் புரிந்து கொள்ளவில்லை. இதே லகானை தி.மு.க., அடுத்த முறை பாஜகவில் இருக்கும் கூட்டணி கட்சிகளிடம் செய்யாதா?

ஆனால் எவ்வளவு காலம் இது செல்லும் என்று நினைக்கலாம், அதே வேளையில் பாஜகவில் இருப்பவர்களிடம் இதே நம்பிக்கை எத்தனை நாள இருக்கும் என்று சொல்ல முடியும்?

இதை வெகு லாவகமாக மத்திய அரசு செய்ய முடியும். அவர்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளை தீவிரப்படுத்தினால் போதும், ஆனால் அதை செய்து முடிக்கும் என்ற நம்பிக்கை பாஜக ஆதரவாளர்களிடம் நாளுக்கு நாள் குறைகிறது. ஊழல்வாதிகளை ஒருவரைக்கூட விடமாட்டேன் என்று 2014 சொன்னதை மோடி மீண்டும் சொல்லும் போது கட்சியினருக்கே எரிச்சல் வருகிறது என்றால், சாதாரண மக்களுக்கு?

மேலும் மோடி பார்த்துக் கொள்வார் என்று சொல்கிறோம். அத்தனை செய்த பின்னரும் மோடி காசியில் வெறும் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்றால், அடுத்த முறை மோடியின் வெற்றியே கேள்விக்குறியாகி உள்ளது என்பதை நாம் கவனிக்க மறுக்கிறோம்.

தமிழகத்தில் மோடி எதிர்ப்பு குறைந்திருக்கிறது என்றாலும் இன்னும் பெருமளவில் இருக்கிறது. அதுவும் குறிப்பாக வடமாவட்டங்களில் கூட்டணி கட்சிகளில் இருப்பவர்களிடமே இந்த கோபத்தை பார்க்க முடிகிறது. இப்போது அன்புமணிக்கு அமைச்சர் பதவி கொடுத்திருந்தால், அது கொஞ்சம் மாறியிருக்கலாம்,

ஆனால் அதையெல்லாம் பாஜக செய்யவில்லை என்றால், அதற்கு தமிழகத்தில் அரசியல் செய்யத் தெரியவில்லை என்பது, இங்கே இருக்கும் தலைவர்களால், அதை செய்ய வைக்க முடியவில்லை என்பதையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

எந்த ஒரு அரசும் இரண்டு முறை தாண்டி மூன்றாம் முறை வருவது என்பது அசாதாரணம். அதுவும், கொரானாவிற்கு பிறகு எந்த ஆளும் அரசும் மீண்டும் பதவிக்கு வரவில்லை என்ற உலக நிலவரத்தை தாண்டி மோடி வந்துள்ளார். ஆனால் அவரின் புகழ் வெளி நாடுகளில் வளரும் அளவிற்கு, உள் நாட்டில் வளராமல் சரியத் தொடங்கி இருக்கிறது என்பதை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

மோடி பார்த்துக்கொள்வார் என்கிறோம், ஆனால் அடுத்த முறை மோடி போட்டியிடுவாரா என்பது சந்தேகமே. அப்போது மேலே மோடியில்லாவிட்டால் பாஜக மீண்டும் வரமுடியாது என்ற நம்பிக்கையை மக்களிடம் எதிர்கட்சிகளால் எளிதாக, ஆழமாக விதைத்து அறுவடை செய்யமுடியும். ஆனால் நாம் இன்னம் மோடிதான் நிரந்தர பிரதமர் என்று நம்பிக் கொண்டு இருக்கிறோம்.

அண்ணாமலைக்கு தன்னம்பிக்கை மிக அதிகம். ஆனால் நாளை மோடியில்லாமல், பண பலத்திற்கும், ஆட்சி அதிகாரத்திற்கும் எதிராக எவ்வளவு நாள் தாக்குப் பிடிக்க முடியும் என்ற எதார்த்தத்தை புரிந்துகொள்ள மறுக்கிறோம்.

மோடி அரசு சென்ற பத்து ஆண்டுகள் செய்ததையே மீண்டும் செய்தால், ஆயிரம் அண்ணாமலை வந்தாலும் பாஜக ஆட்சி என்பதெல்லாம் வெறும் கானல் நீராகிவிடும்.

இங்கே மோடி வாழ்க, அண்ணாமலை வாழ்க என்று கோஷமிடுவதைக் காட்டிலும், கொஞ்சம் எதார்த்தமாக யோசிக்கும் திறனை பாஜக தலைவர்களும், ஆதரவாளர்களும் செய்யாவிட்டால், எல்லாமே மாறி விடும்.

இதனை படிக்கும் உங்களுக்கு கடும் கோபம்தான் வரும். ஆனால் திட்டும் முன், உங்களிடம் ஒரே ஒரு கேள்வி, 2026 ல் மோடி பதவி விலகிவிட்டால், கூட்டணி எதுவும் இல்லாமல் (பாமக கூட அதிமுக பக்கம் போகும்) பாஜகவால், தமிழகத்தில் ஜெயிக்க முடியுமா? இதைத் தாண்டி இந்த பாரத தேசம் உயரும் என்ற நம்பிக்கை, கேள்விக்குறியாகி விடக்கூடாது.

ஆக இதனை சரியாக மத்திய பா.ஜ.க., உணர்ந்து கொண்டது என்பதை நிதியமைச்சர் நிர்மலாசீத்தாராமன் அறிவிப்பு உணர்த்துகிறது. தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை புரிந்து கொண்டாரா என்பது தெரியவில்லை. புரிந்தால் நல்லது. புரியாவிட்டால் அது தி.மு.க.,விற்கு அடுத்த வாய்ப்பினை வழங்கி விடும்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி