அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எடப்பாடி புகார்: அமைச்சர் எ.வ.வேலு
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற, போக்குவரத்து விழிப்புணர்வு கண்காட்சியை, அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர், எம்.பி ராஜேஷ்குமார், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுலகத்தில், சாலைப்பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சாலையை விரிவுப்படுத்த மரங்கள் வெட்ட வேண்டிய சூழல் வருகிறது. எனினும், சாலைகளின் இருபுறமும் மரங்கள் நடப்படும். மழைக்காலம் முடிந்த பின் பழுதடைந்த சாலைகள் அனைத்தும் போர்கால அடிப்படையில் கட்டாயம் செப்பனிடப்படும். எதிர்கட்சியினர் அரசியல் செய்ய, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாய்ப்பே கொடுப்பதில்லை. அவர் நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்கிறார். சென்னையில் எங்கு தண்ணீர் தேங்கும் என்பது உள்ளிட்ட பிரச்சினைகள் அனைத்தும் முதல்வர் அறிந்து வைத்துள்ளார். அதனால் அதிகாரிகளிடம் நேரடியாக பிரச்சினை குறித்து பேசி நடவடிக்கை எடுக்க உத்திரவிடுகிறார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, கிரீன்வேஸ் சாலை மற்றும் தலைமை செயலக சாலை என இரண்டு மட்டும் தான் தெரியும். வேறு எதுவும் தெரியாது. எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஏதாவது சொல்ல வேண்டுமென அவர் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு சொல்கிறார். இணைப்பு சாலைகளில் தண்ணீர் தேங்கத்தான் செய்யும். அதை எப்படி வெளியேற்றுகிறோம் என்பது தான் முக்கியம். 2 மணி நேரத்தில் இணைப்பு சாலையில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் பழுடைந்த தடுப்பணை, கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. தரமான தடுப்பணை கட்டியிருந்தால் எவ்வித பிரச்சினையும் இருக்காது. தரமில்லாமல் கட்டியிருந்தால் சம்மந்தப்பட்ட கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விபத்தை தடுக்க கல்வித் துறை மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர், ராஜ்யசபா எம்.பி ராஜேஸ்குமார், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, ஈஸ்வரன், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu