வாரிசு அரசியலால் மதிமுகவில் பிளவு? இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் விலகல்

வாரிசு அரசியலால் மதிமுகவில் பிளவு? இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் விலகல்
X

ஈஸ்வரன்

மதிமுகவில் துரை வைகோவுக்கு முக்கிய பொறுப்பு தரப்பட்ட நிலையில், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் திடீரென விலகி, புதிய அமைப்பை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 28 ஆண்டுகளாக என் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் பணியாற்றி வந்தேன். கட்சியில் பொறியாளர் அணி அமைப்பாளர்,ஒன்றிய செயலாளர்,மாவட்ட செயலாளர்,இளைஞர் அணி செயலாளர் என்று பல பொறுப்புகளில் மிகச்சிறந்த முறையில் பணியாற்றி வந்துள்ளேன்.

எனது பொதுவாழ்வின் மூலம் கிடைத்த அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி கடுகளவு கூட நான் பலன் அடைந்ததில்லை. கடந்த 28 ஆண்டுகள் எனக்கு எந்த பதவியும் கிடைக்காவிட்டாலும்,ஏராளமான பொருள் இழப்புகளை சந்தித்திருந்தாலும்,மக்களுக்காக பணியாற்றி பல வெற்றிகளை பெற்றதன் மூலம் இந்த அரசியல் வாழ்க்கை எனக்கு மனநிறைவையே தந்துள்ளது.

ஆனாலும் அரசியலிலும்,சமூகத்திலும் நடக்கின்ற பல நிகழ்வுகள் என்னை மிகவும் கோபம் கொள்ள செய்கிறது. இதனை மாற்ற வேண்டும் அல்லது தீர்வுகாண வேண்டும். இயக்கத்தின் பொதுவான மனநிலைக்கும், எனது செயல்பாடுகளுக்கும் முரண்பாடுகள் வரத்தொடங்கும் போது நான் இங்கு இயங்குவது இயக்கத்திற்கும் நல்லதல்ல.


அதனால் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை தொடங்க உள்ளேன். இது அரசியல் இயக்கமல்ல. ஆனால் அரசியலை தூய்மைப்படுத்தவும் பயன்படும். நான் நேசிக்கும் தலைவர் வைகோ, என் உள்ளத்தில் பல அடிப்படை கொள்கைகளை விதைத்து விட்டார். அது இன்று மரமாகிவிட்டது. அதை என்னால் வெட்ட இயலவில்லை. என் தலைவரா ? அவர் விதைத்த கொள்கையா ? என்ற போராட்டத்தில், அவரின் கொள்கையே என்னை ஆட்கொண்டுவிட்டது.

எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது. இன்று, கனத்த இதயத்தோடு என் தலைவரின் இயக்கமான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையை சேர்ந்த மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். துரை வைகோ நியமனத்தால் மதிமுகவில் சலசலப்பு எழுந்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

Tags

Next Story