வைகோவுக்கு எதிராக திரளும் மாவட்ட செயலாளர்கள் - உடைகிறதா மதிமுக?
வைகோ
மதிமுக பொதுச் செயலாளராக வைகோ உள்ளார். அவர், தனது மகன் துரை வையாபுரிக்கு, மதிமுக தலைமைக்கழக செயலாளர் பதவியை வழங்கினார். இது, மதிமுகவினர் மத்தியில் மட்டுமின்றி அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
காரணம், வாரிசு அரசியல் எதிர்த்து திமுகவில் இருந்து வெளியேறிவர்தான் வைகோ. மு.க. ஸ்டாலினை திமுக தலைவராக்குவதற்காக, தம்மை கட்சியில் விட்டு கருணாநிதி நீக்கினார் என்று கூறி, கடந்த 1994ம் ஆண்டில் வைகோ, மதிமுகவை தொடங்கினார்.
அப்படி கூறிவிட்டு, வைகோவே இன்று தனது மகனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கலாமா என்று, கட்சிக்குள் அதிருப்திக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. மதிமுக இளைஞரணி பொறுப்பில் இருந்து ஈஸ்வரன் விலகினார்.
ஆனால் வைகோ, தனது மகன் வையாபுரிக்கு பதவி வழங்கியதை நியாப்படுத்தி பேசினார். தனிப்பட்ட முறையில் துரை வைகோ அரசியலுக்கு வருவது எனக்கு விருப்பமில்லை என்பதை பலமுறை சொல்லிவிட்டேன். எனது மகன் துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கியதால் எதிர்ப்புகள் வந்துள்ளது என்பது அப்பட்டமான பொய். நேரடியாக தேர்வு செய்ய பொதுச்செயலாளருக்கு அதிகாரம் இருந்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியே தேர்வு செய்யப்பட்டதாக, வைகோ சமாளித்தார்.
இந்நிலையில், மீண்டும் மதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. வைகோவுக்கு எதிராக 4 மாவட்ட செயலாளர்கள் சிவகங்கையில் இன்று ரகசிய ஆலோசனை மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன் மற்றும் திருவள்ளூர், நாகப்பட்டிணம், விருதுநகர் ஆகிய மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர்.
ஆலோசனைக்கு பின்னர், அவர்கள் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், புதிய உறுப்பினர்களை சேர்த்தல், பழைய உறுப்பினர்களை புதுப்பித்தல் ஆகிய பணிகள் நிறைவடைந்த பின்னர், கட்சியின் சட்டவிதிகளை பின்பற்றி, மாநிலம் முழுவதும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களும் மூத்த நிர்வாகிகளும் கட்சி தேர்தலில் பங்கேற்கும் வகையில் வேட்பு மனுத்தாக்கல், பரிசீலனை, வாபஸ் பெறுதல் ஆகிய நடைமுறை பின்பற்றி தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
மதிமுகவில் வைகோவுக்கு எதிராக, மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை நடத்தி இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu