உணர்ச்சிகரமாக பேசுவதற்காக வரம்புகளை மீறாதீர்கள்..!

உணர்ச்சிகரமாக பேசுவதற்காக  வரம்புகளை மீறாதீர்கள்..!
X

செய்திக்கான மாதிரி படம்

உணர்ச்சிகரமாக பேசுவதாக நினைத்து வரம்புகளை மீறாதீர்கள் என தினமலர் மூத்த நிருபர் நுாருல்லா தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

லோக்சபா தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பல திரைநட்சத்திரங்கள் களம் இறங்கி உள்ளனர். அவர்களுக்கு சினிமா வேறு, நிஜவாழ்க்கை வேறு என்பதை பிரித்து அறிய முடிவதில்லை. இதனால் உணர்ச்சிவசப்பட்டு பேசி பலரும் சிக்கலி்ல மாட்டிக் கொள்கின்றனர். குறிப்பாக விஜயகாந்த் பற்றி பேசியதற்காக நடிகர் வடிவேலு அவர் இறந்த போது பட்டபாட்டை அத்தனை பேரும் நன்றாக அறிவார்கள்.

இதனால் நுாருல்லா தனது அனுபவங்களை ருசிகரமாக தொகுத்து கொடுத்துள்ளார். இதனை நமது வாசகர்களுக்கு தருகிறோம்.

நடிகர் எம் ஆர் ராதாவின் குலக்கொழுந்தான நடிகை ராதிகா தமிழ்நாடு அரசியலில் திடீர் பிரவேசம் செய்துள்ளார். நள்ளிரவில் கணவர் சரத்குமாரின் முன்மொழிவுக்குச் சாதகமாக வழி மொழிந்த ராதிகா, அதன் மூலமாகச் சமத்துவ மக்கள் கட்சியை, பாஜகவுடன் இணைக்க வழிவகுத்துத் தந்து விட்டார்.

அதன் பிரதிபலன்கள் பலவாராக இருப்பினும், முதல் பலனாக விருதுநகர் தொகுதி ராதிகாவுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் ராதிகா போட்டியிடுகிறார். சரத்குமாருக்கு மட்டும் ஏன் சீட்டு தரவில்லை? இது ஒரு நியாயமான கேள்வி.

தமிழகத்தில் பாஜகவைப் பொறுத்தவரை அண்ணாமலையைத் தாண்டி மக்களிடையே பிரபலமான வேறு தலைவர்கள் யாரும் கிடையாது. தமிழகம் முழுவதும் பாஜகவுக்காக, அதன் கூட்டணிக் கட்சிகளுக்காகத் தேர்தல் பிரசாரம் நடத்துவதற்குச் சரத்குமார் தான் சரியானவர் என்று அண்ணாமலை உட்பட பாஜகவினர் திட்டமிட்டனர். அவருக்கு சீட்டு கொடுத்து விட்டால், தனது வெற்றிக்காக தொகுதிக்குள்ளையே முடங்கி விழுந்து விடுவார்.

அவரின் மனைவிக்குச் சீட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சரத்குமாரோ தமிழ்நாடு முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் நடத்தி, பாஜக அணிக்கு ஆதரவான பரப்புரையில் சுறுசுறுப்பு காட்ட இருக்கிறார்.

அரசியல் பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்ற ராதிகா, "நான் ஒன்றும் அரசியலுக்குப் புதியவள் அல்ல; ஏற்கனவே அரசியல் அரங்கத்தில் கொடி கட்டிப் பறந்தவள் தான்" என்று பேசி வருகிறார்.

ராதிகாவின் இந்த பேச்சைக் கவனித்தபோது எனக்குக் கடந்த காலத்து நினைவுகள் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன. எம்ஜிஆர் முதலமைச்சராக, கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராகத் தமிழகத்தில் பரபரப்பான அரசியலைத் துருதுருப்போடு நடத்தி வந்த காலமது.

1980 களின் போது தேர்தல் பிரசாரம் சூடு பிடித்த சமயத்தில், திடீரென்று திரைப்பட நட்சத்திரங்கள் அரசியல் மேடைகளில் ஜொலிக்கத் தொடங்கினர். அந்த வகையில் இந்த ஒளிர்வினைத் தொடக்கி வைத்தவர்களில் ஒருவர் என்று நடிகர் ராதிகாவைச் சொல்லலாம்.

அப்போது அவர் திமுகவின் சார்பில் தேர்தல் பிரசாரப் பரப்புரையில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். அவரின் பல்வேறு மேடை முழக்கங்களின் போது, செய்தியாளனாக இருந்து, செய்தி எழுதி வந்திருக்கிறேன்.

ராதிகா அந்த காலகட்டத்தில் பிரபலமான உச்சத்தில் இருந்த நடிகை என்பதால், அவரது உரைச் செய்திகள் பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியாகி வந்தன.

இதனைக் கவனித்த காங்கிரஸ் கட்சி தீவிர யோசனையில் மூழ்கியது. இதன் விளைவாக அரசியல் மேடைகளில் புதிய நட்சத்திரங்கள் மின்னத் தொடங்கினர். அவர்களில் முக்கியமாக நடிகை தீபா. காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுக்கூட்ட மேடைகளில் நடிகை தீபா தொடர்ந்து பரப்புரை நிகழ்த்தி வந்தார். அவரின் உரை முழுவதும் மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் செய்தது போலவே இருந்தது.

ஆனால் ராதிகாவின் மேடைப் பேச்சுகள் உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக் கொட்டுவது போலிருந்தது. எம் ஆர் ராதா என்ற கலை குடும்பத்துக் குணக்கொழுந்து அல்லவா? இவர்களுக்கிடையே திடீரென்று இன்னொரு நட்சத்திரம் துடித்துக் கிளம்பி, மூன்றாம் தர மேடைப் பேச்சாளரின் பாணியில் வெடித்துக் கிளம்பித் துடித்துப் பேசி வந்தார். அவர் தான் கவர்ச்சி நடிகை மாயா.

தீபா மற்றும் மாயா ஆகியோரின் மேடைப் பரப்புரைச் செய்திகளை நானும் எழுதி வந்திருக்கிறேன். இவர்கள் இருவரின் மேடைப் பேச்சுகளும் ராதிகா அளவுக்குச் சோபிக்கவில்லை. இந்த நிலையில் திடீரென்று தீபா இல்லத்திலிருந்து அவரின் உதவியாளர் தீபாவின் இல்லத்திற்கு வருமாறு தீபாவின் சார்பில் அவர் வேண்டுகோள் விடுத்தார். நான் ஆசிரியரிடம் அனுமதியை கேட்டேன். அதற்கான அனுமதியும் கிடைத்து விட்டது. ஆகவே தி நகர் நரசிங்கபுரம் சாலையில் இருந்த நடிகை தீபாவின் வீட்டிற்குக் கிளம்பிச் சென்றேன்.

சந்திப்பு நிகழ்ந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த உரையாடல் நீடித்தது. ராதிகாவுக்கு நிகராக, உணர்ச்சிகரமான வார்த்தைகளைப் புரட்சிகரமாகப் பேசுவதற்கான வழிகாட்டுதல்களை என்னிடம் கேட்டார். சந்தித்த மரியாதைக்காக சில யோசனைகளைக் கூறி விட்டுத் திரும்பி விட்டேன்.

எனது வழிகாட்டுதலையும், வாசகங்களையும் வாக்கிய வரிகளையும் அவர் அப்படியே மனப்பாடம் செய்து கொண்டு, மேடைகளில் முழங்கத் தொடங்கினார். இதனால் கிடைத்தப் பொதுமக்களின் கைத்தட்டலைப் பார்த்து, மீண்டும் என்னை அழைத்தார். உணவு பரிமாறி, அதன் மூலம் உணர்ச்சி மிகுந்த பேச்சுக்களை தடுமாற்றங்கள் இன்றி பேசும் அளவு தன்னை சரிப்படுத்திக்கொண்டார்.

நடிகை தீபாவின் ஆரம்பக் காலத்து தேர்தல் பரப்புரையும், அதன் பின்னர் தரமேறியப் பிரசார வாசகங்களும் பொது மக்களால் கவனிக்கப்பட்டன. இது நடிகை மாயாவாலும் கூர்ந்து நோக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நடிகை மாயாவின் உறவினர் என்று கூறிக்கொண்டு, ஒரு மனிதர் தினமலர் அலுவலகத்திற்கு வந்து என்னைச் சந்தித்தார். அவரும் நடிகை மாயாவின் சார்பில் எனக்கு அழைப்பு விடுத்தார். ஆசிரியரின் அனுமதி கிட்டிய நிலையில் நான் மாயாவை அவரின் இல்லம் இருக்கும் வடபழநி தாண்டிய சாலிகிராமம் அருகே சென்றேன்.

மாயாவுடன் சந்திப்பு சில மணி நேரம் நீடித்தது. அப்போது படங்கள் எடுப்பதற்காக, தினமலரில் போட்டோகிராபராக பணியாற்றி வந்த தேள்கடி ராமமூர்த்தியும் என்னுடன் வந்திருந்தார். அவர் படங்களை எடுத்துத் தள்ளினார். இதனால் உற்சாகமடைந்த நடிகை மாயா, அடுத்தடுத்து வெவ்வேறு உடைகளை அணிந்து கொண்டு வந்து, போஸ் கொடுத்து அசத்தினார்.

"கருணாநிதியைப் பற்றிய கடுஞ்சொற்களோடு கூடிய அனல் தெறிக்கும் வாசக வடிவங்கள் தேவை" என்று அவர் வற்புறுத்தினார். நானும் போகிற போக்கில் சில வார்த்தைச் சரங்களை வார்த்து வழங்கினேன். பொறுமையாக அவர் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக்கொண்டார். நானும் விடைபெற்று நடை பிடித்தேன்.

அடுத்த இரண்டு நாட்களில், திடுக்கிட வைக்கும் திடீர் திருப்பம் நிகழ்ந்தது. தேர்தல் களத்தில் சுற்றிச் சுழன்றுத் தொகுத்தச் செய்திகளை, தினமலர் அலுவலகத்தில் அமர்ந்து நான் எழுதிக் கொண்டிருந்தேன். திடீரென்று அலுவலக வாயில் பாதுகாவலர் உய்க்காட்டுத் தேவர் என்னைச் சந்தித்தார்.

"யாரோ மாயாவாம் சாமி. முகத்தில் எல்லாம் ரத்தம் வடிகிறது. கட்டு கூட போட்டுக்கொள்ளாமல் வாசலில் காத்திருக்கிறார். உங்களைச் சந்திக்க வேண்டுமாம்" என்று தெரிவித்தார். அதிர்ச்சியின் முதிர்ச்சியால் வியர்த்து விறுவிறுத்துப் போன நான், விரைந்து சென்று மாயாவைச் சந்தித்தேன். மண்டையில் பலத்த அடி. ரத்தம் முகமெல்லாம் பரவிக் கிடந்தது. அவரோ, தலைவிரி கோலமாக, பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்க நின்றிருந்தார்.

உடனே ஆசிரியரிடம் விரைந்தேன். அவரின் வழிகட்டுதலின்படி உள்ளே அழைத்துச் சென்றேன். நிருபர்கள் அறையில் அவரை அமர வைத்தேன். அங்கிருந்தபடியே உடனடி முதலுதவிச் சிகிச்சைகள் செய்தேன். பேண்டேஜ் வரவழைக்கப்பட்டு போடப்பட்டது.

இதற்கிடையே ரத்தம் சொட்டச் சொட்ட இருந்த மாயாவின் உருவப் புகைப்படமும், கட்டுப் போட்ட பிறகு படங்களும் எடுக்கப்பட்டன. " நீங்கள் சொல்லிக் கொடுத்தபடி தான் பேசினேன். ஆனால் உணர்ச்சிவசப்பட்டுக் கொஞ்சம் தப்பான விஷயத்தை எல்லாம் பேசி விட்டேன். நான் அப்படிப் பேசியபடியே திறந்த ஜீப்பில் வலம் வந்து கொண்டிருந்தேன். துறைமுகம் தொகுதியில் நான் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தபோது, சற்று காரமாகப் பேசிவிட்டேன். கூட்டத்தில் யாரோ மூன்று பேர் கல்லெடுத்து அடித்து விட்டார்கள். என் மண்டையில் இரண்டு கற்கள் பட்டன. ரத்தம் பீறிட்டு எழுந்தது. நான் கதறினேன். கூட்டம் கலைந்து மறைந்து விட்டது. கல்லடித்தவர்களும் காணாமல் போனார்கள். நான் நேராக இங்கே வந்து விட்டேன். " என்று, நடந்த நிகழ்வுகளைக் காட்சிப் படம் போல் விவரித்தார் நடிகை மாயா.

அவற்றையெல்லாம் ஒரு பேட்டி என நான் திரட்டி, தினமலர் நாளிதழில், மாயா ரத்தம் சிந்தும் படத்தோடு வெளியிட்டோம். அதன் பின்னர் அனல் தெறிக்கும் பிரசார வாசகங்கள் சற்று மென்மைப்படுத்தப்பட்டு வந்தன. இவ்வாறாக, சுடச்சுட அரசியல் செய்திகள் வழங்கும் கட்சித் தலைவர்களின் செய்திகள் பத்திரிகைகளில் வந்து கொண்டிருந்தன. அதே நேரத்தில் 'லைட் ரீடிங்' என்ற வகையில் திரைப்பட நடிகைகளின் அரசியல் பரப்புரைகளையும் செய்திகளாக எழுதி, மக்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம்.

பத்திரிக்கை என்றால் நவரச நயங்களையும் திரட்டிக் கொடுக்க வேண்டும் அல்லவா? அந்த வகையில் நடிகையரின் தேர்தல் பிரசாரச் செய்திகளை எல்லா பத்திரிகைகளும் வெளியிட்டு வந்தன. அந்த வகையில் தினமலரில் வெளியான செய்திகளைப் பெரும்பாலும் அடியேன் எழுதியதாகவே அமைந்தன.

நடிகை ராதிகாவின் தேர்தல் பரப்புரையின் தொடக்கத்தில் அவர், "அரசியலுக்கு நான் புதியவள் அல்ல. அனுபவம் வாய்ந்தவள் தான்" என்றார். இந்த வாசகத்தையடுத்து, கிளர்த்துக் கிளம்பிய சிலவற்றை மட்டும் இங்கே கொட்டித் தீர்த்து இருக்கிறேன்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!