சோமண்ணாவை பலி கொடுத்ததா பா.ஜ.,?
கர்நாடகாவின் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரான சித்தராமையாவை வீழ்த்துவேன் என முஷ்டி முறுக்கி, சொந்த தொகுதியை விட்டு வெளியேறி வருணா, சாம்ராஜ்நகரில் போட்டியிட்ட பாஜக அமைச்சர் தோல்வியடைந்தார். சித்தராமையா மற்றும் அவரது ஆதரவாளர் புட்டரங்க செட்டி ஆகியோர் சரியாக ஸ்கெட்ச் போட்டு சோமண்ணாவை வீழ்த்தி உள்ளனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சித்தராமையா மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிட்டார். இவர் இந்த தொகுதியில் 2008, 2013 தேர்தலில் வெற்றி பெற்றார். அதன்பிறகு கடந்த தேர்தலில் மகன் யதீந்திராவுக்காக தொகுதியை விட்டு கொடுத்தார். இதையடுத்து யதீந்திரா வெற்றி பெற்றார்.
மாறாக கடந்த தேர்தலில் சித்தராமையா தொகுதி மாறி 2 இடங்களில் போட்டியிட்டார். மைசூர் மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் அவர் தோல்வியடைந்த நிலையில், பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரானார். இந்த தேர்தலில் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி வென்றால் முதல்வர் பதவியை பெறும் நோக்கத்தில் அவர் சொந்த தொகுதிக்கு திரும்பினார். தந்தைக்காக மகன் யதீந்திரா தொகுதியை தியாகம் செய்தார். சித்தராமையாவை தோற்கடிக்க பாஜகவில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா களமிறக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது. ஆனால் இதற்கு எடியூரப்பா ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் வேறு வழியின்றி வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா வருணாவில் பாஜக சார்பில் போட்டியிட்டார். மேலும் அவருக்கு சாம்ராஜ்நகர் தொகுதியிலும் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியது.
சோமண்ணா பெங்களூர் கோவிந்தராஜ் நகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த நிலையில், அதனை விட்டு விட்டு வெளிமாவட்டங்களில் உள்ள 2 தொகுதிகளில் போட்டியிட்டார். மேலும் சித்தராமையாவை வீழ்த்துவாக அவர் முஷ்டி முறுக்கி பிரசாரம் செய்தார். இந்நிலையில் தான் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வருணா, சாம்ராஜ் நகர் என 2 தொகுதிகளிலும் சோமண்ணா தோல்வியடைந்துள்ளார். வருணா தொகுதியில் சித்தராமையா வெற்றி பெற்றுள்ளார். சாம்ராஜ் நகரில் காங்கிரஸ் வேட்பாளர் புட்டரங்க செட்டி வெற்றி பெற்றுள்ளார். புட்டரங்க செட்டி என்பவர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
சோமண்ணா தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் சேரவில்லை. மேலும் பாஜக தலைவர்களுடன் அவர் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில் தான் சோமண்ணாவுக்கு சொந்த தொகுதியை விட்டு வெளி மாவட்டங்களில் 2 தொகுதிகளை பாஜக மேலிடம் வழங்கியது. இதன்மூலம் சோமண்ணா தற்போது பலிகடாவாகி உள்ளார். சோமண்ணா தனது பழைய தொகுதியில் நின்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பார். உட்கட்சி அதிருப்தியில் இருந்த அவரை தொகுதி மாற்றி இரண்டு இடங்களில் நிற்க வைத்து, இரண்டிலும் பா.ஜ., வீழ்த்தி விட்டது என கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu