சொத்து சேர்க்காத தேசத்தின் சொத்து, காமராஜர்..! அவரைப்போல யாரு?
Kamarajar Birthday Speech
Kamarajar Birthday Speech-பிறந்தாலும் அவரைப்போல ஒரு தலைவர் பிறக்கவேண்டும். இறந்தாலும் அவரைப்போல பேர் சொல்ல வேண்டும். எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற ஒரே தலைவர் காமராஜர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, தலைவர்களை உருவாக்குபவர்(கிங் மேக்கர்), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்ந்து கூறுவார்கள். இவர் 'கருப்பு காந்தி' என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராஜரின் மறைவுக்கு பின், 1976ம் ஆண்டில் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பிறப்பு
படிக்காத மேதை என்று புகழப்பட்ட காமராஜர் விருதுநகரில் 1903ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் அவர்களது குடும்ப குலா தெய்வமான காமாட்சி என்ற பெயர். அவரது தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை செல்லமாக அன்போடு 'ராசா' என்று அழைப்பது வழக்கம். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, 'காமராசு' என்று ஆனது. பின்னர் அந்த பெயரும் உருமாறி காமராஜர் என்று ஆகிவிட்டது.
பள்ளிப்படிப்பு
தனது பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யாசாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் விளங்கினார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.
பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கிருக்கும்போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுகளை அடிக்கடிக் கேட்டு அதில் கவரப்பட்டார். அதனால், அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16 வயதில் காங்கிரசின் உறுப்பினராக ஆனார்.
ராஜாஜியின் தலைமையில் 1930ம் ஆண்டு மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்றபோது அதில் காமராஜரும் கலந்து கொண்டார். அதற்காக காமராசர் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ. வரதராசுலு நாயுடுவின் வழக்காடும் திறமையால் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்படாமல் விடுதலை ஆனார்.
1940 ம் ஆண்டில் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவியில் இருந்து விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-இல் ஆகஸ்ட் புரட்சி நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டார். இந்த முறை அவருக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை கிடைத்தது.
அரசியல் குரு
காமராசர், சிறந்த பேச்சாளரும் நாடாளுமன்றவாதியுமாக இருந்த சத்தியமூர்த்தியைத் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-இல் சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரானபோது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரஸ் கட்சி நல்ல வளர்ச்சி கண்டது. அதன்மூலமாக நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டவுடன் காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்குதான் தேசியக் கொடியை ஏற்றினார்.
1953ம் ஆண்டுக்குப் பிறகு ராஜாஜிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அவர்மீது அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்தது. அந்த காலகட்டத்தில் காமராசர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கினார். காரணம் அவருக்கிருந்த மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சி. ஏனெனில் அந்த காலகட்டத்தில் தமிழகம் சென்னை ராஜ்ஜியமாக இருந்தது. அப்போது ஆந்திராவின் பெரும்பகுதியும், கர்நாடகாவின் சில பகுதிகளும் சென்னை ராஜ்ஜியத்தில் இருந்தன.
செல்வாக்கு இழந்த ராஜாஜி -முதல்வரான காமராஜர்
குலக்கல்வித் திட்டத்தால் ராஜாஜி மீதான செல்வாக்கு சரிந்து கீழிறங்கிக் கொண்டிருந்தது. மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக 1953ம் ஆண்டில் அக்டோபர் 1,ம் தேதி ஆந்திர மாநிலம் பிறந்து விட்டது. தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரசின் உள்ளேயே ராஜாஜிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது.
நிலைமையை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளே தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராஜாஜி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, 'எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம். நானே விலகிக் கொள்கிறேன்' என்று அறிவித்து விட்டாலும் கூட தனது இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின்னிருந்து வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதற்கு முன்மொழிந்தார்.
ஆனால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராஜர் பெருவாரியான வாக்குகள் பெற்று பெரும் வெற்றி பெற்றார். இதுதான், காமராஜர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று பதவியேற்றதன் பின்னணி.
முதலமைச்சராக ஆற்றிய பணிகள்
ராஜாஜி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தை காமராஜர் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் 27,000 பள்ளிகளைத் திறந்தார். 1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டமே 1960 களில் காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்டு எம். ஜி. ராமச்சந்திரனால் 1980 களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடித் திட்டமாகும்.
அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாகப் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அது வெறும் 7 சதவீதமாக இருந்தது. பள்ளிகளின் வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT)தொடங்கப்பட்டது.
பயனுள்ள திட்டங்கள்
காமராஜர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 10 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம், சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராஜரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.
காமராஜர் தொடங்கிய பெரும் பொதுத்துறை நிறுவனகள், தொழிற்சாலைகள் :
- பாரத மிகு மின் நிறுவனம்
- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
- மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
- ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)
- நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
- கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
- மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
- குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராஜரால் கொண்டுவரப்பட்ட பெரும் திட்டங்களாகும்.
காமராஜர் முதல் அமைச்சரான முதல் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க ஆணையிட்டார். பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும், அதன் பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை நீட்டித்தார்.
K-PLAN
மூன்று முறை (1954–57, 1957–62, 1962–63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர், பதவியைவிடத் தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாகக் கட்சித் தொண்டர்களுக்கும் உணர்த்த விரும்பி அவர் கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராசர் திட்டம்' ஆகும்.
அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டுக் கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும். காமராஜர் இந்த கருத்தைக்கூறியதும் நேரு அப்படியே ஏற்றுக் கொண்டார். இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியில் இருந்து முன்மாதிரியாக பதவி விலகினார். 1963ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பொறுப்பினை காமராஜர் பக்தவத்சலத்திடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார். அக்டோபர் 9ம் தேதி அன்று அகில இந்தியக் காங்கிரசின் தலைவர் ஆனார். லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், எஸ். கே. பாட்டீல், ஜெகஜீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.
அகில இந்திய அளவில் காமராஜரின் செல்வாக்கு உயர்ந்தது. அவரது கட்சியினரின் மரியாதைக்குரிய மனிதராக இருந்தார். அதனாலேயே 1964இல் ஜவகர்லால் நேரு இறந்தவுடன் இந்தியாவின் தலைமை அமைச்சராக லால் பகதூர் சாஸ்திரியை முன்மொழிந்து காமராஜர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். 1966-இல் லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தின்போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின்போது இந்திரா காந்தியை தலைமை அமைச்சராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது.
இரண்டான காங்கிரஸ்
காமராஜருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகக் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராஜரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரஸ் தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போகக் காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராஜரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த கவலை கொண்ட நிலையில் காமராஜர் இருந்தார். இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் மற்றும் பல தலைவர்கள் இக்காலகட்டத்தில் இந்திரா காந்தி அரசால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
உயிர் துறந்தார்
அக்டோபர் 2 காந்தியடிகள் பிறந்த நாளன்று அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார் காமராஜர். ஆனால், அன்று ஆச்சார்ய கிருபளானியும் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியைக் கேட்ட அன்றே காமராஜர் உயிர் துறந்தார். 1975ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி (அன்றுதான் காந்தியின் பிறந்தநாள்) மதிய உறக்கத்திற்குப் பின்னர் காமராஜர் நிரந்தரமாக கண்மூடினார். அவர் இறந்தபோது அவரது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.
நினைவுச் சின்னங்கள்
தமிழ்நாடு அரசு, காமராசர் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்குக் காமராசரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்கு காமராசரின் மார்பளவு சிலையும் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
திரைப்படம்
2004ம் ஆண்டு காமராஜ் என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் ஒன்று வெளியானது. அதன் ஆங்கில மொழியாக்க குறுந்தகடு 2007ம் ஆண்டு வெளியிடப்பட்டது. காமராஜர் உடலால் மறைந்துவிட்டாலும் இன்றளவும் அவர் செய்த அரும்பணிகளின் நீட்சி இன்னும் பல திட்டங்களாக தொடர்கின்றன என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரியதே.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu