தவிக்கும் தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு உதவ கமலஹாசன் கோரிக்கை
தவிக்கும் தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு உதவ வேண்டும் மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தப் பேரிடர் காலத்தில் தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களின் இயல்பு வாழ்க்கை பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கின்றது. சில ஆசிரியர்கள் நிர்வாகம் தரும் பாதி சம்பளத்தில் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். பல ஆசிரியர்கள் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதாலும் நிதி பற்றாக்குறை போன்ற காரணங்களாலும் வேலையை இழந்துள்ளார்கள். ஓராண்டிற்கு மேலாக மாற்று வேலை வாய்ப்புகள் இன்றியும் வருமானம் இல்லாமல் வாழ்வாதாரத்திற்காக போராடி வருகின்றனர்.
லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்களின் கரங்களில் தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த சமுதாயத்தை நல்வழியில் செலுத்துமாறும் பணியில் தங்களை அர்ப்பணித்தவர்கள் இவர்கள் குடும்பத்தை காப்பாற்றவே போராடிக்கொண்டிருக்கும், இவர்களிடம் ஆசிரியர் பணி என்பது மகத்தான சேவை என்று சொல்லி தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது நியாயமில்லை. ஆசிரியர்கள் அன்றாட வாழ்க்கை நடத்த அல்லல்படும் பொழுது எப்படி முழுமனதோடு மாணவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த முடியும்.
பள்ளிகள் திறக்கும் வரை தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாதம் தோறும் நிதிஉதவி வழங்கப்படும் என்று தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசும் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு உதவித்தொகை வழங்க உடனடியாக ஆவன செய்ய வேண்டும். தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அரசு உடனே செவிமடுத்து செயலாற்ற வேண்டும்.
தகுதி அனுபவம் அடிப்படையில் ஆசிரியர்களின் ஊதிய வரன்முறை நிர்ணயித்து அது முறையாக செயல்படுத்த படுகிறதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர்களின் பணியிட பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை உடனே வழங்க கல்வி நிறுவனங்களை அரசு வலியுறுத்த வேண்டும் என அவர் தெரிவித்த நம்மவர் அறிக்கையை முடிக்கும் பொழுது கடைசியாக அறியாமை இருள் அகற்றி அறிவொளி தீபமேற்றும் ஆசிரியப் பெருந்தகைகள் வாழ்வில் ஒளி குன்ற நாம் அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu