எடப்பாடிக்கு உளவியல் நெருக்கடி கொடுக்கிறாரா அப்பாவு?
சபாநாயகர் அப்பாவு.
செய்கிற வேலை எல்லாம் செய்து விட்டு அமைதியானவர் போல பாவனை காட்டுவதிலும் இவரை மிஞ்ச ஆளில்லை..! அடேங்கப்பா..! சட்டசபை நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தவும், மக்கள் பிரச்சினைகளை மன்றத்தில் எதிரொலிக்க உறுப்பினர்களுக்கு உரிய வாய்ப்பை தருவதும் தான் சபாநாயகரின் கடமை.
ஆனால், அப்பாவு உறுப்பினர்கள் யாரையுமே முழுமையாக பேச அனுமதிப்பதில்லை. பேசிக் கொண்டிருக்கும் போதே அதிரடியாகத் தலையிட்டு, ”இதைத் தானே சொல்ல வர்றீங்க. சரி, உட்காருங்க” அமைச்சர் பதில் சொல்வார் என அதட்டலாக உட்காரச்சொல்கிறார்.
இன்னும் சில நேரங்களில் அமைச்சர்களைக் கூட பதில் சொல்ல விடாமல், அவர்களின் குரலாக இவரே ஒலிக்கிறார். சட்டசபையை ‘ஒன்மேன் ஷோ’வாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.
சிவ சண்முகம்பிள்ளை, செல்ல பாண்டியன், பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், தமிழ் குடிமகன் போன்ற பெருந்தன்மையான பெரிய மனிதர்கள் அலங்கரித்த நாற்காலியை இன்று அப்பாவு அலங்கரித்து வருகிறார். இவர் சபாநாயகர் என்ற அந்தஸ்த்தையே சிதைக்கிறாரோ… என மூத்த பத்திரிகையாளர்கள் பலர் விமர்சிக்கின்றனர்.
‘பகை முற்றி பிரிந்து விட்ட இருவரையும் அருகருகே தான் உட்கார வேண்டும்’ என நிர்பந்திப்பது மிகத் தவறானது. அராஜகமானது. இது கடுமையான மன உளைச்சலை தரக் கூடியது. எனவே, ‘ஒ.பி.எஸ் இருக்கையை மாற்றி, அதிகாரபூர்வமாக அதிமுக எம்.எல்.ஏக்களால் சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உதயகுமாரை அருகே அமர வைக்கும் மரபை பின்பற்ற வேண்டும்’ என அதிமுக எம்.எல்.ஏக்கள் பலமுறை சபாநாயகர் அப்பாவுவிடம் மனு கொடுத்து அலுத்து விட்டனர்.
இருக்கை பிரச்சினையில், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒ.பி.எஸ்.,ஐ வலுக்கட்டாயமாக பழனிசாமி இருக்கையின் பக்கத்தில் உட்கார வைப்பது என்பதை தவிர்த்து, அதே முன்வரிசையில், அவருக்கான முக்கியத்துவத்தை குறைக்காமல் சற்று தள்ளி உட்கார வைப்பதில் என்ன பிரச்சினை இருக்க முடியும்..? எதிர்கட்சித் துணைத் தலைவராக ஒருமனதாக சட்டசபையின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதயகுமாருக்கு உரிய இருக்கையை தரமறுத்து, தொடர்ந்து பிடிவாதமாக நடந்து கொள்வதன் பின்னணி என்ன? நேர்மையாக அவர் செயல்பட முடியாமல் எந்த சக்தி இந்த நிர்பந்தத்தை தந்து கொண்டு இருக்கிறது?
காங்கிரஸ் கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்தவர் தான் அப்பாவு. தற்போது சபாநாயகராக உட்கார்ந்து கொண்டு சகல அமைச்சர்களிடமும் நிர்பந்தித்து காரியம் சாதித்து வரும் அப்பாவுவின் அதிகார அத்துமீறல்களை ஆவணங்களோடு பட்டியல் போட்டு வைத்துள்ளதாம் மத்திய உளவுத்துறை.
பாஜகவின் தீவிர விசுவாசியான பன்னீர்செல்வத்தை திமுகவின் சபாநாயகர் ஏன் தூக்கி சுமக்கிறார்? அதுமட்டுமின்றி, தன் சபாநாயகர் அந்தஸ்த்தையும் கடந்து, அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தை விலாவாரியாக திமுகவின் பேச்சாளரைப் போல விவரித்து நீண்ட நேரம் பேசுகிறார்.
ஒ.பி.எஸ்-ம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எடப்பாடி பழனிச்சாமி அருகே அமர்ந்து கொள்கிறார். இதனை அவரே தவிர்த்திருக்க வேண்டும். தன்னை உருவாக்கிய கட்சியான அதிமுகவை அழிக்க இன்றைக்கு பாஜகவிற்கும், திமுகவிற்கும் கிடைத்துள்ள சிறந்த துருப்பு சீட்டாக மாறியுள்ளார் ஓ.பி.எஸ்., என அரசியல் விமர்சகர்கள் அனைவரும் விமர்சித்து வருகின்றனர். அப்பாவு நடந்து கொள்ளும் விதம் ஆளும் கட்சிக்குள்ளேயே விவாத பொருளாகியுள்ளது.
(குறிப்பு: இது சமூக வலைதளங்களில் உலா வந்த செய்தி. இதில் இருந்த ஆட்சேபகரமான சில வாசகங்களை நீக்கி விட்டு இன்ஸ்டா நியூஸ் வாசகர்களுக்காக கொடுத்துள்ளோம்.)
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu