அ(ம்மா) இ(ல்லாத) அதிமுக, அ(னைவரும்) இ(ணைந்த) அதிமுக வாக மாறுமா?
அதிமுகவின் எதிர்காலம்
எம் ஜி.ஆர் என்ற ஒற்றை மனிதரின் சினிமா கவர்ச்சியால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் தொண்டர்களாக உருமாறி காலத்தின் கட்டாயத்தால் உருவாக்கப்பட்ட கட்சி தான் அதிமுக. அன்று முதல் இன்று வரையிலும் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களையும் தொண்டர்களையும் கொண்ட ஒரே கட்சி அதிமுக தான். திரைப்படத்தில் தான் பேசியதை எல்லாம் அரசியலிலும் செய்து காட்டிய எம்.ஜி.ஆர் என்ற அதிசய மனிதர் இருந்த வரை தமிழ்நாட்டில் எதிர்கட்சிகளே இல்லாமல் போனது. அரசியல் அதிசயம் தான்.
அவர் இருந்த காலத்திலேயே அதிமுக கட்சியானது நால்வர் அணி , நமது கழகம் என்றெல்லாம் பிரிவினையைக் கண்டன. என்றாலும், அவை யாவும் மக்கள் திலகத்தின் மந்திர புன்னகை முன் மாயமாகிப் போனது. அதிமுகவில் முதல் பிளவை தொடங்கி வைத்தவர் எஸ்.டி சோமசுந்தரம். எம்ஜிஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்துகொண்டே எம்ஜிஆர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய தைரியம் எஸ்டிஎஸ்ஸுக்கு உண்டு. உடனே அவரை கட்சியை விட்டு நீக்கினார் எம்ஜிஆர். பதவி தோளில் கிடக்கும் துண்டு போன்றது என்று உதறிவிட்டு நமது கழகம் என்ற கட்சியை தொடங்கினார் எஸ்டிஎஸ். அதே எஸ்டிஎஸ். மீண்டும் அதிமுகவில் சேர்ந்த சில வருடங்களில், ஜெயலலிதாவின் பிரசார வேனில் அதே துண்டை கொண்டு பேலன்ஸ் செய்துகொண்டு வேனில் தொங்கியபடி பாதுகாப்புக்குப் போனது அரசியல் சோகம்.
எம்ஜிஆர் காலத்திலேயே தனது அடுத்த அரசியல் வாரிசாக முறைப்படி மக்கள் முன்னால் ஜெயலலிதாவை அவரே அறிவித்த போதிலும் கூட, அவரது மறைவுக்குப் பின்பு கட்சி இரண்டாக உடைந்தது.
இன்றைக்குள்ள இரண்டு பி.எஸ்கள் அடித்துக் கொள்வதை விட மோசமாய் அடித்துக் கொண்டு, அன்றைக்கே ஜா. அணி, ஜெ. அணி என இரண்டாகக் கட்சி பிளவுபட்டது. இந்த குழம்பிய குட்டையில்தான் திமுக மீன் பிடித்து ஆட்சியைப் பிடித்தது. இரட்டை இலை பிரிந்து சேவலாகவும், இரட்டைப் புறாவாகவும் மாறி தொண்டர்களின் உள்ளக் கொதிப்புக் குழம்பில் வெந்து போனது. ஆனாலும் ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக் கொண்டு இரட்டை இலை நிமிர்ந்து துளிர்த்தது.
ஆனாலும் யாரெல்லாம் அன்று தன்னை எதிர்த்தார்களோ அத்தனை பேரையும் அலட்டிக் கொள்ளாமல் தன் கீழ் கொண்டு வந்த ஆளுமை சினிமா கவர்ச்சியையும் தாண்டி ஜெயலலிதாவிடம் இருந்தது. அந்த கம்பீரம் இனி எவரிடமும் தமிழகத்தில் இருக்க வாய்ப்பேயில்லை. சிங்கம் சிங்கிளாக 37 மக்களவைத் தொகுதிகளில் ஜெயித்ததை எப்படி மறக்க முடியும் ? அவரை எதிர்த்து எம்.ஜி.ஆரின் பெயர், எம்.ஜி .ஆர் படம் போட்ட கொடி என்று போட்டியாய் கட்சி தொடங்கிய அத்தனை பேரும் புரட்சித் தலைவியின் மெளன புன்னகைக்குள் மறைந்து போனார்கள் என்பது நிஜம்.
ஆட்சி இழப்பு, பர்கூர் தொகுதியில் தோல்வி, தன் சொந்த வாழ்க்கையைப் பற்றிய மோசமான விமர்சனங்கள், ஊழல் அதற்கான தண்டனை, உடல் நலக்கோளாறு, கூடவே இருந்து குத்தப்பட்ட உடன்பிறவா நட்பின் துரோகம், இத்தனை இடையூறுகளையும் தாண்டி தொடர்ந்து பத்தாண்டுகள் ஜெயலலிதா ஆட்சி தொடர்ந்ததற்குக் காரணம் ஒன்று மட்டுமே. அது எவராலும் அசைக்க முடியாத அக்கட்சித் தொண்டர்களின் அசுர பலமும் அவரின் செயல்பாடுகளின் மீது, மக்கள் கொண்டிருந்த அளவு கடந்த நம்பிக்கையும் தான்.
தனது கட்சியின் கடந்த கால பிளவு வரலாறுகள், தனது கட்சி தலைவர்களின் பலம், பின்புலம், தன்னைச் சுற்றியுள்ளவர்களின் எதிர்பார்ப்பு, தன் உடல் நலம் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு "தனக்கு அடுத்து இவர்" என்று சரியாக அடையாளம் காட்டத் தெரியாத தலைவராக அவர் இருந்ததால், இன்று அவர் வளர்த்த கட்சி, அரசியல் களத்தில் தலைவன் இல்லாத படையாய், கையறுநிலையில் அசிங்கப்பட்டு நிற்கிறது. இது அக்கட்சிக்கு புதிதல்ல.
சசிகலாவால் திடீரென சுட்டிக்காட்டப்பட்ட எடப்பாடியும், உண்மையான விசுவாசி என்று ஜெயலலிதாவால் பாராட்டப் பெற்ற பன்னீர் செல்வமும் தங்களுக்குள் யார் பெரியவர் என்பதை காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்களே தவிர.. கட்சியைக் கைப்பற்ற துடிக்கிறார்களேத் தவிர, எம்ஜிஆர் உருவாக்கிய பெரிய இயக்கியத்தைக் காப்பாற்றும் முயற்சியில் சிறிதும் இறங்கவில்லை. அப்படியானால் .. அகில இந்திய அதிமுக அவ்வளவுதானா ? என்றால் .. அதுதான் இல்லை நிச்சயம் தீர்வு காண முடியும்.
1989 பொதுத் தேர்தலில் தனித்தனிச் சின்னத்தில் நின்று எந்த அணிக்கு செல்வாக்கு என்று தெரிந்து கொண்டு ஓரணியாய் இணைய முடிந்தது. ஆனால் பொதுத் தேர்தலுக்கு இப்போது வாய்ப்பில்லை. ஒன்று சில விட்டுக் கொடுத்தல்களுடன் , சில புரிதல்களுடன் சில அதிகாரப் பகிர்வுகளுடன் அதிமுகவின் இரண்டு தலைவர்களும் இணைய வேண்டும். இதுவும் இக்கட்சிக்கோ இந்த இரு தலைவர்களுக்கோ புதிதல்ல. இயலாது என்று வீம்புப் பிடித்தால் உடனடியாக கட்சிக்குள் மாவட்ட வாரியாக தேர்தல் நடத்தி இரண்டு அணிகளும் தனித்தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும். அனைத்து உறுப்பினர்களையும் அந்தத் தேர்தலில் வாக்களிக்கச் செய்ய வேண்டும். பெருவாரியான தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவரே கட்சியின் பொதுச் செயலராக வேண்டும்.
விருப்பு வெறுப்புகளைக் களைந்து எல்லா அணிகளும் அவருடன் இணைந்து அவரது தலைமையையேற்று கட்சியைப் பலப்படுத்தி அடுத்தப் பொது தேர்தலுக்கும் சட்டமன்ற தேர்தலுக்கும் தயாராக வேண்டும். இணைந்தால் இரட்டை இலை .இல்லையேல் எவரும் இ(ல்)லை என்பதே அதிமுகவின் இன்றைய நிலை.
அ(ம்மா) இ(ல்லாத) அதிமுக என்பது அ(டையாளம்) இ(ல்லாத )அதிமுக என்ற அவப்பெயரை மாற்றி, அசுர பலத்துடன் கூடிய அ(னைவரும்) இ(ணைந்த) அதிமுகவாக அரசியல் அரங்கை அதிரச் செய்ய இது ஒன்றே நிரந்தரத் தீர்வு என்பதே கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்களின் வேண்டு கோளாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu