அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?

அதிருப்தி... விரக்தி... சுணக்கம்…  சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
X

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்)

அ.தி.மு.க.,வில் கோஷ்டி குழப்பத்தால் கொங்கு மண்டலத்தில் பெரிய அளவில் சரிவை சந்திக்கும் என தெரிகிறது.

அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் சேலம். இதனால் இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவது அவர்களின் கௌரவப் பிரச்னையாகப் பார்க்கப்பட்டது. கோவைக்கு மட்டுமே மூன்று முறை விசிட் அடித்திருக்கும் பிரதமர் மோடி, “கொங்கு மண்டலத்துக்குக் கூடுதல் கவனம் செலுத்துவோம்” என்கிறார்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையோ, “2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க-வே அழிந்து விடும்” என்கிறார். இந்த நிலையில், நடந்து முடிந்திருக்கும் தேர்தலில், கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க-வின் பணி சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்பது அந்தக் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொறுப்பு வகித்தார். கோவையில், வேட்பாளர் அறிமுகக் கூட்டம் முடியும் போது கட்சியில் மிகப்பெரிய எழுச்சி தெரிந்தது. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனும் வேலுமணியும், பா.ஜ.க-வையும் அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்தனர்.

ஆனால், நாளடைவில் அ.தி.மு.க-வில் சுணக்கம் தென்பட்டது. ‘எந்தப் பகுதியிலும் ‘பசை’ சரியாகச் சென்று சேரவில்லை’ என்பது தொண்டர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியது. வேலுமணியும் கோவையைப் பெரிதாக எட்டிப் பார்க்கவில்லை. இதனால் ‘பா.ஜ.க-விடம் டீல் பேசிவிட்டனரா..?’ என அ.தி.மு.க-வினரே ஓப்பனாகப் பேசத் தொடங்கினர். அண்ணாமலை அ.தி.மு.க-வைத் திட்டிய பிறகு ஆங்காங்கே சில இடங்களில் இறங்கி வேலை பார்த்தனர்.

ஏற்கெனவே கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க-வின் செல்வாக்கைத் தகர்க்க, தி.மு.க-விலிருந்து செந்தில் பாலாஜியை அனுப்பினர். அது கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வுக்குக் கைகொடுத்தது. இப்போது பா.ஜ.க-விலிருந்து அண்ணாமலை, கோவையில் களமிறங்கி அ.தி.மு.க-வுக்குக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அ.தி.மு.க வலுவாக இருக்கும் தொகுதி, பொள்ளாச்சி. அந்தப் பகுதியிலுள்ள அனைத்து நிர்வாகிகளும் சூப்பர் சீனியர்கள். மேலும், தி.மு.க சிட்டிங் எம்.பி சண்முகசுந்தரத்தின் மீது மக்களுக்கு இருந்துவரும் கடும் அதிருப்தி, உடன் பிறப்புகளிடையே நிலவிவரும் உட்கட்சிப்பூசல் என அ.தி.மு.க இறங்கியடிக்கச் சாதகமாக, கள நிலவரம் இருந்தது. ஆனால், அங்கும் அ.தி.மு.க களப்பணிகளில் வேகம் காட்டவில்லை.

வேலுமணி தன்னுடைய தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டுமே அதிக கவனம் செலுத்தினார். இப்படிச் சில நிர்வாகிகள் ‘தங்களது செல்வாக்கை ஓரளவுக்குத் தக்கவைத்தால் போதும்’ என்ற மனநிலைக்குச் சென்று விட்டனர். அங்கு தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக பா.ஜ.க-கூட களத்தில் சற்று வேகம் காட்டியது. 100 பேர் செய்யும் பணிகளை, 1,000 பேர் செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினர். ஆனால், அ.தி.மு.க-வில் பணி செய்ய ஆயிரக்கணக்கானோர் இருந்தும் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

நீலகிரி தொகுதியிலும் ஆ.ராசா Vs எல்.முருகன் என்ற போட்டியில், அ.தி.மு.க பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்குக்கூட வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தாமதமாகத்தான் வந்தார். தொகுதிக்குள் ஆ.ராசா மீதிருந்த அதிருப்தியை அறுவடை செய்ய, பா.ஜ.க காட்டிய முனைப்பைக்கூட அ.தி.மு.க காட்டவில்லை.

திருப்பூர் வேட்பாளர் அருணாசலத்துக்கு, லோக்கல் நிர்வாகிகளிடையே பெரிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. அங்கிருக்கும் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்களது தொகுதிக்குள்ளேயே முடங்கி விட்டனர். முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும், “இந்தத் தேர்தல் வெறும் சடங்கு தான்” என்று ஆரம்பத்திலேயே கைவிரித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில், அ.தி.மு.க-வுக்கு மிகவும் சாதகமாக இருந்தது ஈரோடு தொகுதி. வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு தொடக்கத்தில் எழுந்த பாசிட்டிவ் இமேஜை அவர் தக்க வைக்கவில்லை. அவர் கையாண்ட கார்ப்பரேட் அரசியலால் சீனியர்கள் தொடங்கி அடிமட்டத் தொண்டர்கள் வரை கொதித்து விட்டனர். மேலும் கே.வி.ராமலிங்கம் உள்ளிட்ட சீனியர்களும் அசோக்குமாருக்குப் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது. இப்படி அடுத்தடுத்த பஞ்சாயத்துகளால் ஈரோட்டிலும் அ.தி.மு.க பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம், சேலம். இதனால் இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவது அவர்களின் கௌரவப் பிரச்னையாகப் பார்க்கப்பட்டது. எனவே, ‘போட்டி கடுமையாக இருக்கும்’ என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், வேட்பாளராக விக்னேஷ் தேர்வு செய்யப்பட்டதும், ‘கட்சிக்காக உழைத்தவர்கள் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்க, தொகுதிக்குள் பெரிய அளவுக்கு அறிமுகமில்லாதவரை நிறுத்தி விட்டனர்’ என்று கட்சியினர் அப்செட்டாகினர்.

எடப்பாடியின் சொந்த மாவட்டம் என்பதால், ரோடு ஷோ உள்ளிட்டவற்றை சம்பிரதாயத்துக்காகவே நடத்தினர். இது போன்ற அதிருப்திகளால், ‘பழைய அ.தி.மு.க-காரர்தானே…’ என்று தி.மு.க வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவாக, அ.தி.மு.க-வில் சிலர் பிரசாரம் செய்த சம்பவங்களும் அரங்கேறின.

‘எங்களுக்கு 2026 சட்டசபைத் தேர்தல்தான் இலக்கு’ என்று அ.தி.மு.க-வினர் சொல்லலாம். ஆனால், தி.மு.க-வும் பா.ஜ.க-வும் 2026 தேர்தலைக் குறிவைத்து, அதற்கான அஸ்திவாரத்தை இப்போதே போடத் தொடங்கி விட்டனர் என்பதை அ.தி.மு.க உணர வேண்டும்.அஸ்திவாரத்தை விட்டுவிட்டு கட்டிடம் கட்ட அதிமுக நினைக்கலாமா..?!

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!