எடப்பாடி இனியும் சுதாரிக்காவிட்டால் அதிமுக உடைந்து சிதறும்

எடப்பாடி இனியும் சுதாரிக்காவிட்டால் அதிமுக உடைந்து சிதறும்
X
நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி, இடைத்தேர்தல் புறக்கணிப்பு என எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஆகிய முடிவால், எடப்பாடிக்கு எதிரான மனத்தாங்கல் கட்சிக்குள் பரவலாக எழத் தொடங்கியிருக்கிறது. இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு, அ.தி.மு.க-வைக் கைப்பற்றும் கனவோடு பன்னீர், சசிகலா, தினகரன் மூவரும் திட்டமிடுவது, கட்சி வட்டாரத்தில் பலத்த பேசுபொருளாகியிருக்கிறது.

2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், “தீவிர அரசியலிலிருந்து ஒதுங்குகிறேன்” என்ற சசிகலா, “என்னோட ரீ-என்ட்ரி ஸ்டார்ட் ஆகிடுச்சு...” எனத் தற்போது அறிவித்திருக்கிறார்.

மற்றொரு புறம், பன்னீரும் சுற்றுப்பயணத்துக்குத் தயாராகிறார். “அ.தி.மு.க-வுடன் நாங்கள் இணையும் பேச்சுக்கே இடமில்லை’’ எனும் தினகரன், ``அ.தி.மு.க தொண்டர்கள், ‘இது தலைவர் ஆரம்பித்த கட்சி’ எனத் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என அ.தி.மு.க தொண்டர்களைத் தன் பக்கம் இழுக்க அடிபோடுகிறார்.

இந்த மூவரின் செயல்பாடுகளும் பேச்சும் பொருட்படுத்தும் அளவில் இல்லை என்றாலும், அ.தி.மு.க-வை அரசியல்ரீதியாக விழுங்கிவிட்டு, பிரதான எதிர்க்கட்சி இடத்தை நிரப்பிக்கொள்ளத் துடிக்கிறது பா.ஜ.க. ‘அவர்களின் திட்டத்துக்கு, அந்த மூன்று பேரும் உதவுகிறார்களோ..?’ என்கிற கேள்வி எழுகிறது.

அதேசமயம், எதையுமே கருத்தில்கொள்ளாமல், இ.பி.எஸ்-ஸும் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்து கோட்டைவிடுகிறாரோ என்று தோன்றுகிறது என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் வட்டாரங்களில் என்னதான் நடக்கிறது, அப்படி அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள், அதற்கு எடப்பாடி தரப்பின் ரியாக்சன் என்ன? . விரிவாகவே விசாரித்தோம்.


“இரட்டை இலையை வைத்துக்கொண்டும் எடப்பாடியால் ஜெயிக்க முடியவில்லை!”

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம், பலாப்பழம் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு இரண்டாமிடத்தைப் பெற்றார். இரட்டை இலைச் சின்னத்தில் களமிறங்கிய அ.தி.மு.க வேட்பாளர் ஜெயபெருமாள் மூன்றாமிடத்தைப் பெற்றதோடு, டெபாசிட்டையும் பறிகொடுத்தார். அதைத்தான் தனது பிரசாரமாகத் தமிழகமெங்கும் கொண்டுபோகப்போகிறாராம் ஓபிஎஸ்.

அது குறித்து நம்மிடையே பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர், “தென்மாவட்டங்களிலுள்ள ஐந்து தொகுதிகளில், டெபாசிட்டைப் பறிகொடுத்திருக்கிறது இரட்டை இலை. இது புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி இருவரும் கட்டிக்காத்த இயக்கத்துக்கு நேர்ந்திருக்கும் பெரிய அவமானம். எடப்பாடி தலைமைக்குக் கட்சி போன பிறகுதான் இது போன்ற தோல்விகள் தொடர்கின்றன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது, நாங்கள் நிறுத்திய வேட்பாளரை வாபஸ் பெறச் சொல்லி பா.ஜ.க மூலமாக அழுத்தம் கொடுத்தார் எடப்பாடி. மரியாதையின் அடிப்படையில் வேட்பாளரை வாபஸ் பெற்றோம். அப்போதும்கூட இடைத்தேர்தலில் வெற்றிபெறவில்லை

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியை உதறிவிட்டு, தனித்தே களமிறங்கினார். 35 தொகுதிகளில் இரட்டை இலை போட்டியிட்டு, ஒன்றில்கூட வெல்லவில்லை.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தால், ‘பதினோரு தோல்வி எடப்பாடி’ என்கிற பெயர் வந்துவிடும் என்று பயந்துதான், இப்போது இடைத்தேர்தலையே புறக்கணித்திருக்கிறார் எடப்பாடி. இரட்டை இலைச் சின்னத்தை வைத்துக்கொண்டும்கூட எடப்பாடியால் ஜெயிக்க முடியவில்லை. அவரது கட்டுப்பாட்டிலும் கட்சி இல்லை.

இதையெல்லாம், தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் கொண்டுசெல்லவிருக்கிறார் ஓ.பி.எஸ். அதற்காக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லவும் திட்டமிட்டிருக்கிறார். அது தொடர்பாகப் பேசுவதற்கு, வரும் ஜூன் 20-ம் தேதி ‘அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக் குழு’வின் ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தவிருக்கிறார்.

எடப்பாடியின் சறுக்கல் நம்பிக்கையை ஊட்டியிருந்தாலும், அமைப்புரீதியான பலமில்லாமல் இருப்பதும், ஜே.சி.டி.பிரபாகர், பெங்களூரு புகழேந்தி, கு.ப.கிருஷ்ணன் போன்றோர் அடுத்தடுத்து பிய்த்துக்கொண்டு வெளியேறுவதும் உரிமை மீட்புக் குழுவை மீட்கவே மீட்புப் பணிக்கு ஆள் தேடவைத்துவிட்டது. மனம் உடைந்துபோயிருந்த ஓ.பி.எஸ்-ஸை, வைத்திலிங்கம்தான் தேற்றி ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.


ஆனால் இப்போது, ‘பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடக்கும்’ என ஓ.பி.எஸ் அறிவித்திருப்பதுதான் பெரும் சலசப்பை உண்டாக்கியிருக்கிறது. ஏனென்றால், இதுவரை பண்ருட்டியார் அரசியல் வாழ்வில் அவர் பயணித்த அரை டஜன் கட்சிகளில், அவர் உருப்படியாக எந்த இடத்திலும் இருந்ததில்லை. சரியான அரசியல் நகர்வுகளையும் முன்னெடுத்ததில்லை. ‘அவர் ஆலோசனைகளைக் கேட்டு இனி செயல்படுவோம்’ என ஓ.பி.எஸ் அறைகூவல் விடுத்திருப்பதுதான், எஞ்சியிருக்கும் சில நிர்வாகிகளைக்கூடப் பதற்றமடைய வைத்திருக்கிறது.

டெல்லியின் சப்போர்ட்டைப் பெற ஓ.பி.எஸ்-ஸும் தீவிரமாகவே முயல்கிறார். சிக்னல் கிடைத்ததும், விரைவிலேயே `அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்’ என்பது அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்யப்படும்” என்றனர் அபார நம்பிக்கையோடு.

“கட்சியை மீட்டெடுத்தே தீருவேன்...” என ஓ.பி.எஸ் ஒரு பக்கம் உருண்டுகொண்டிருக்கும் நிலையில், சசிகலாவும் தன் பங்குக்கு உருட்டத் தொடங்கியிருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்த போது, “நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ‘ஜெயலலிதா இல்லம்’ உங்களை அன்புடன் வரவேற்கிறது. எல்லோரும் வாருங்கள் என அழைப்பு விடுத்தார் சசிகலா. ஆனால், அழைப்பை மதித்து ஓர் அ.தி.மு.க தொண்டன்கூட அந்தப் பக்கம் செல்லவில்லை.


இந்தச் சூழலில்தான், ‘அ.தி.மு.க தொண்டர்களை சசிகலா சந்திக்கப்போகிறார்’ எனக் கடந்த ஜூன் 16-ம் தேதி செய்தி பரவியது. காலை 10 மணிக்கு என்று திட்டமிடப்பட்டது. பிறகு மதியம் 3 மணி என்று அறிவித்தார்கள். ஆனாலும், மணி மூன்றைத் தாண்டியும்கூட 200 பேருக்கும் மேல் திரளவில்லை. வந்திருந்தவர்களில் முக்கால்வாசிப் பேர், “குடிக்குறதுக்கு டீ, காபி இல்லை. தாகத்துக்குத் தண்ணிகூட இல்லை. ஒரு பானையில தண்ணி வெக்க முடியாதவங்க தான், கட்சியை மீட்டெடுக்கப்போறாங்களா..?” என்று கடுகடுத்துக்கொண்டே புறப்பட்டனர். கடைசியில், 50 பேரே மிஞ்சியிருந்தார்கள்.

இதற்குமேல் காத்திருந்தால் இருப்பவர்களும் புறப்பட்டு விடுவார்கள் என்பதைப் புரிந்துகொண்ட சசிகலா, வீட்டைவிட்டு வெளியே வந்து மைக் பிடித்தார். “நான் அரசியலுக்கு ரீ-என்ட்ரி கொடுத்து விட்டேன். அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்காமல் ஓயப்போவதில்லை...” என்று சூளுரைத்தவர், “எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி செயல்படவில்லையென்றால், நானே செயல்படுவேன். தி.மு.க எனக்கு பதில் சொல்லியே ஆகணும்” என்று சீரியஸாகப் பேசவும், சுற்றிலும் நின்றிருந்த சிலர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

அப்போது ஒரு செய்தியாளர், ‘`பா.ஜ.க-வுடனான கூட்டணியை அ.தி.மு.க உடைத்துக்கொண்டது சரியா?” என்று கேட்க, அதிர்ச்சியாகி, என்ன பதில் சொல்வதென்று தெரியாததால், ‘`அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் ஏன் வழங்கப்படவில்லை?’’ என இருபது நிமிடங்கள் ஏதேதோ பேசினார். பிறகு தி.மு.க-வை விமர்சிக்கும்விதமாகப் பேச்சை டைவர்ட் செய்தபோது, சுற்றி நின்றவர்கள் மீண்டும் கைதட்டி ஆராவாரம் செய்தனர்.

இது இப்படி நடந்துகொண்டிருக்க, சசியுடன் பயணிப்பவர்களிடம் விசாரித்தால், “இது காலம் தாழ்ந்த முடிவு” என்று முணுமுணுக்கிறார்கள். சசிகலாவுடன் பயணிக்கும் முன்னாள் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவந்தபோதே, ‘நான் அரசியலுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துவிட்டேன்’ என சசிகலா அறிவித்திருக்க வேண்டும். அவர் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து சேர்வதற்குள், அப்போது எடப்பாடி அமைச்சரவையிலிருந்த பாதிப் பேர் சசிகலா பக்கம் வந்து சேர்ந்திருப்பார்கள். எடுத்த எடுப்பிலேயே சொதப்பிவிட்டார்.

2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்திலாவது ஒரு சலசலப்பை உருவாக்கியிருக்கலாம். ஆனால், டெல்லியின் அழுத்தத்துக்குப் பணிந்து, ‘அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டேன்’ என அறிக்கையை வெளியிட்டுவிட்டு முடங்கிவிட்டார். இப்போது, எடப்பாடிக்கு அனுசரணையாக டெல்லி பா.ஜ.க தலைமை இல்லை என்பதால்தான், இறங்கி அடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

‘பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டிருப்பதால், எப்படியும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குள் எடப்பாடியை பா.ஜ.க ஒரு வழி செய்துவிடும். அந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், அ.தி.மு.க-வைக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து விடலாம்’ என்பதே சசிகலாவின் திட்டம். அதற்காக, டெல்லி பா.ஜ.க தலைவர்கள் சிலருடன் மறைமுகப் பேச்சுவார்த்தையும் தொடங்கியிருக்கிறது.

அ.தி.மு.க-வில் இருக்கும் சில நிர்வாகிகளும் எங்களுடன் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லவும் திட்டமிட்டிருக்கிறார் சசிகலா. அதற்கான டூர் புரோகிராமைத் தயாரிக்கும் பொறுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ நரசிம்மனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

‘கொடநாடு வழக்கை தி.மு.க அரசாங்கம் ஏன் விசாரிக்கவில்லை..?’ என்கிற கேள்வியைத் திரும்பத் திரும்ப எழுப்பி, தொண்டர்களிடையே மறந்துபோயிருக்கும் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தை எடப்பாடிக்கு எதிராகத் திருப்பிவிடத் தீர்மானித்திருக்கிறார் சசிகலா.

அதோடு, கட்சிக்குள் சாதியரீதியாகப் பாகுபாடுகள் காட்டப்படுவதாக, எடப்பாடிக்கு எதிராகச் சுத்துப்போட்டிருக்கிறார். ஒரு சமூகமே மெஜாரிட்டியாக அ.தி.மு.க-வைக் கட்டுப்படுத்தும் சூழலில், சசிகலாவின் வாதம் சரியானதுதான். ஆனால் அதை, அவர் சொல்லும் போதுதான் பிரச்னையாகிறது.

‘நீங்க அதிகாரத்துல இருக்கும்போது, உங்க மன்னார்குடி குடும்பம்தானே எல்லாத்தையும் கட்டுப்படுத்திச்சு? இப்பகூட திவாகரன், எம்.ராமச்சந்திரன்னு உங்க சொந்தக்காரங்கதானே உங்களை இயக்குறாங்க. அவங்க ஒரே சமூகம் இல்லையா. நீங்களும் சாதி அரசியல்தானே செய்றீங்க..?’ என எதிர்வாதம் கிளம்பும். இதையெல்லாம் சசிகலா சமாளிக்க வேண்டி யிருக்கிறது.

டெல்லியுடன் வலுவான தொடர்பு ஏற்பட்டு, அனுசரணையும் கிடைத்து விட்டால் அ.தி.மு.க சசிகலா கையில்தான்” என்றனர்.


மே 2018-ல், மதுரை மேலூரில் தன் புதிய கட்சியான அ.ம.மு.க-வின் முதல் பொதுக்கூட்டத்தைக் கூட்டிய டி.டி.வி.தினகரன், “அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதே நமது நோக்கம். அதற்காகத்தான் அ.ம.மு.க-வை உருவாக்கியிருக்கிறேன்” என்று முழக்கமிட்டார். இன்று அவரே, “அ.தி.மு.க-வுடன் ஒன்றிணையும் பேச்சுக்கே இடமில்லை” என்றிருப்பது, அவரது கட்சி வட்டாரத்திலேயே அதிர்வை உருவாக்கியிருக்கிறது.

அது குறித்து அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் சிலர் கூறுகையில், “இத்தனை ஆண்டுகளும், கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்படும்போதெல்லாம், ‘அ.தி.மு.க-வை மீட்டெடுத்துவிடுவோம்’ என்று கூறிவந்தார் தினகரன். ஆகஸ்ட் 2021-ல் நடந்த பொதுக்குழுவில்கூட, அதற்காகத் தீர்மானமே போடப்பட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘அ.தி.மு.க., தினகரன் கையில்தான் வந்துசேரும்?’ என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சொன்னதும், நாங்களும் நம்பிக்கையோடு இருந்தோம்.

இப்போது, எடப்பாடியின் செல்வாக்கு அ.தி.மு.க-வுக்குள் சரிந்து, கட்சியை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு அமைந்திருக்கும் நிலையில், ‘என் வழி தனி வழி’ என்று தனி ரூட்டில் பயணிக்கிறார் தினகரன்.

‘அ.தி.மு.க-வை இனி மீட்டெடுக்க முடியாது. அம்மாவின் மறைவுக்குப் பிறகு, அதன் வாக்குவங்கியும் செல்வாக்கும் சரியத் தொடங்கிவிட்டன. அந்த வெற்றிடத்தை, அ.ம.மு.க-வை வைத்து நிரப்பிக்கொள்ளலாம்’ என்பதே அவரது எண்ணமாக இருக்கிறது. அதற்காகத்தான், டெல்லியின் அனுசரணையைத் தேடி பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் தினகரன். டெல்லியையும் அண்ணாமலையையும் வைத்து எடப்பாடிக்கு எதிராகச் சுத்துப்போடுகிறார்.

சமீபத்தில், பிரதமர் பதவியேற்பு விழாவுக்காக டெல்லிக்குச் சென்றபோது, எடப்பாடிக்கு எதிரான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகாரையும், அவருடைய உறவினருக்கு எதிராக பெங்களூரில் நடைபெறும் வழக்கின் விசாரணையையும் துரிதப்படுத்தச் சொல்லியிருக்கிறார்.

இவர்கள் இப்படி கணக்கு போட, டெல்லியும் ஒரு கணக்கு போடுகிறது. ‘அ.தி.மு.க வெற்றிடத்தை பா.ஜ.க-வை வைத்து நிரப்பிக்கொள்ளலாம்’ என அவர்கள் தனிக்கணக்கு போடுகிறார்கள். அதில், தினகரனுக்கும் அ.ம.மு.க-வுக்கும் என்ன ரோல் இருக்கப்போகிறது என்பது தெரியவில்லை. தினகரனின் செயல்பாடுகளில், அ.ம.மு.க நிர்வாகிகள் பலருக்கும் உடன்பாடில்லை. பா.ஜ.க அவரை விழுங்கிவிடும் என்பது புரியாமல் இருக்கிறார் தினகரன். அவரது கணக்கு எடுபடுமா என்பது எங்களுக்கே தெரியவில்லை” என்றனர் புலம்பலாக.

இந்த பிரச்னை குறித்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமந கூறுகையில்,1987, 1989, 1996 எனப் பல்வேறு தருணங்களில் கட்சி பிளவுபட்டிருக்கிறது. ஆர்.எம்.வீரப்பன், பாக்கியராஜ், ஐவர் அணி, போட்டி அ.தி.மு.க என எத்தனையோ பேர், எத்தனையோ இயக்கங்கள் முளைத்தார்கள். ‘அ.தி.மு.க முடிந்துபோய்விடும்...’ என்றார்கள். அவர்கள் சொன்னதெல்லாம் நடந்ததா?. அ.தி.மு.க-தான் மீண்டும் மீண்டும் மீண்டெழுந்து வந்தது.

அதுபோலத்தான், இப்போதும் சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் யாரும் பொருட்படுத்தவேண்டியதில்லை. யாருக்கு யார் பின்னணியில் இருந்துகொண்டு செயல்பட்டாலும் சரி, அ.தி.மு.க-வை ஒன்றும் செய்துவிட முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தலில், எடப்பாடியாருக்கும் ஸ்டாலினுக்கும் இடையேதான் நேரடி போட்டியே இருக்கும். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்று, முதல்வராக எடப்பாடியார்தான் அமர்வார். அப்போது, இந்த வெற்று ஆரவாரமெல்லாம் ஒன்றுமில்லாமல் அடங்கிப்போகும்” என்றார்.

‘எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, நாங்கள் துவண்டுபோகவில்லை...’ என ஜெயராமன் விளக்கமளித்தாலும் நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியும், இடைத்தேர்தல் விலகலும் அ.தி.மு.க-வுக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மை.

டெல்லி தயவை நாடியபடி, அந்தக் குழப்பத்துக்குள் மீன்பிடிக்கப் புறப்பட்டிருக்கிறார்கள் பன்னீர், சசிகலா, தினகரன் மூவரும். அவர்களுக்குப் பெரிய அளவில் அமைப்புரீதியான பலம் இல்லையென்றாலும், ‘கொடநாடு வழக்கு என்னவானது... இரட்டை இலை இருந்தும் தோற்றுப்போய்விட்டார். தேர்தலைக் கண்டு அஞ்சுகிறார். நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகார் என்னவானது.’ என அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் எடப்பாடி தரப்பை உலுக்கவே செய்திருக்கின்றன.

‘ஜெயலலிதா ஓர் இந்துத்துவத் தலைவர்’ எனச் சொல்லி, அ.தி.மு.க-வைக் கபளீகரம் செய்வதற்கான தங்களுடைய ஆபரேஷனை பா.ஜ.க ஏற்கெனவே தொடங்கிவிட்ட சூழலில், இப்போதும்கூட எடப்பாடி சுதாரிக்கவில்லையென்றால், அந்த மூவரும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அவரது தலைமைக்குப் புதுத் தலைவலியை உருவாக்கும். சுதாரிப்பாரா எடப்பாடி?

Tags

Next Story