"தமிழக அரசு சிறப்பாக செயல்படவே விமர்சனம் செய்கிறேன்"-அண்ணாமலை பேட்டி
அண்ணாமலை.
கோவை கோட்டை மேட்டில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந்தேதி அதிகாலை ஒரு கார் திடீர் என்று வெடித்து தீப்பிடித்து எரிந்தது.இதில் காரில் வந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின். வயது 29 உடல் கருகி பலியானார்.தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து முதலில் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.ஜமேஷா முபின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வெடி பொருட்களை கைப்பற்றினார்கள். மேலும் ஜமேஷா முபின் கூட்டாளிகள் 6பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து மத்திய அரசின் என்.ஐ.ஏ.அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு மீது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறிவருகிறார்.இந்த சம்பவத்தை கண்டித்து கோவையில் 31ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கோவை மாவட்ட பா.ஜ.க.வினர் அறிவித்தனர். இதற்கு தடை விதிக்க கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதற்கிடையே இந்த முழு அடைப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக பா.ஜ.க.வினர் அறிவித்தனர்.
இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவா் அண்ணாமலை நேற்று கோவைக்கு வந்தார்.கோவையில் கார் வெடித்து தீப்பிடித்த இடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலிலுக்கு சென்று அண்ணாமலை, சாமி தரிசனம் செய்தார். கார் தீப்பிடித்த இடத்தையும் அவர் பார்வையிட்டார்.பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த சம்பவம் நடந்ததும் கோவை மாநகர போலீசார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு வெடிகுண்டு தான் காரணம் என்று தெரிந்தபிறகும், தற்கொலைப்படைத் தாக்குதல் என்று தெரிந்தும் போலீசார் மிக துணிச்சலாக செயல்பட்டு இந்த இடத்தில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தினர்.இந்த குற்றத்தில் தொடர்புடையவர்களின் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் அகற்றி வேறு எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காத வகையில், தங்கள் உயிரை பணையம் வைத்து கோவை போலீசார் செயல்பட்டுள்ளனர். அதற்காக முதலில் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்மை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்று மதத்தால் பிளவுபடுத்த சில சதிகாரர்கள் நினைத்தாலும் கூட கோவை மக்கள் ஒன்றாக இருக்கிறார்கள்.அது மிகப்பெரிய விஷயம். எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வன்முறை என்ற ஆயுதத்தை கையில் எடுக்கக்கூடாது. பா.ஜ.க. எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. தமிழக அரசு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் நான் சில கருத்துக்களை சொல்கிறேன், விமர்சனங்களையும் செய்கிறேன். மத்திய அரசு முன்கூட்டியே எச்சரித்த பிறகும் தவறுகள் நடந்துள்ளன.குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்த மதச்சாயத்தையும் நாங்கள் பூசவில்லை. உலகில் உள்ள அனைத்து மதங்களும், அமைதியை,ஆன்மிகத்தை தான் சொல்லுகிறது.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu