திமுக எதிர்ப்பில் பின்வாங்கினாரா அண்ணாமலை?
நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். அந்த நிகழ்வில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது படை பரிவாரங்களுடன் கலந்து கொண்டிருக்கிறார். அதுதான் தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக்.
முன்னதாக இந்த நிகழ்ச்சிக் குறித்துப் பேசியிருந்த அண்ணாமலை, "விழாவில் கலந்து கொள்ளுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அழைத்தார். பா.ஜ.க அலுவலகத்துக்குப் பூச்சி முருகனை அனுப்பி அழைப்பிதழ் கொடுத்துள்ளார்" என தெரிவித்திருந்தார்.
தி.மு.க அரசு முன்னெடுத்த நாணயம் வெளியீட்டு விழாவில் பா.ஜ.க தலைவர்கள் கலந்து கொண்டது, தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கும் நிலையில், அதுகுறித்து கடுமையாக விமர்சனம் வைத்து வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. "தி.மு.க - பா.ஜ.க இடையே ரகசிய உறவு இருக்கிறது..." என எடப்பாடி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, "2017-ம் ஆண்டு கலைஞர் உடல் நலம் குன்றியிருந்தபோது அவரது உடல்நிலை குறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார். நாங்க எதிரும் புதிருமாக இருந்தாலும், ஒரு தலைவரை மதிப்பதை அரசியல் நாகரிகமாக கருதுகிறோம். கலைஞருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியும், அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் விரும்பும் போது அதற்கு தமிழக பாஜக சார்பில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது கடமையாகும். எனவே இதில் அரசியல் இல்லை" என விளக்கமளித்திருக்கிறார் அண்ணாமலை.
இதுநாள் வரை தி.மு.க எதிர்ப்பில் வேகம் காட்டிய அண்ணாமலை திடீரென தி.மு.க-விடம் பாசம் காட்டத் தொடங்கியிருப்பது தான், கமலாலயத்தில் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. இதுகுறித்து பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: "கடந்த 2022-ம் ஆண்டு இல.கணேசன் இல்ல நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுத்தும் அண்ணாமலை செல்லவில்லை. அப்போது, 'விழாவிற்குச் சென்று இருப்பேன். அந்த விழாவிற்கு மம்தா பானர்ஜி வந்ததால் அங்கே செல்லக்கூடாது என்ற எண்ணமும் இருந்தது.
காரணம், மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வினர் மம்தா பானர்ஜியால் மிகவும் மோசமாகத் துன்புறுத்தப்பட்டுள்ளனர்' எனத் தெரிவித்திருந்தார். அதேபோல தானே பல்வேறு தருணங்களில் பா.ஜ.க-வினர் மீது தி.மு.க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அப்போதெல்லாம் விமர்சனம் செய்த அண்ணாமலை, இப்போது மட்டும் நாணயம் வெளியீட்டு விழாவுக்குச் சென்றதோடு, அதற்குச் சப்பைக்கட்டு காரணங்களையும் அடுக்குகிறார். 'டெல்லி கட்சித் தலைமை எடுத்த முடிவுக்கு அண்ணாமலை கட்டுப்பட்டு நடக்கிறார்' என அவரது ஆதரவாளர்களும் காரணம் சொல்கிறார்கள். '2024 தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்போம்...' என டெல்லி சொல்லியும் கூட, வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி, அ.தி.மு.க-வுடனான உறவைத் துண்டித்தவர் அண்ணாமலை. தவிர, டெல்லியிடம் அழுத்தம் கொடுத்து, தனியே ஒரு அணியை அமைத்து, கட்சியை நட்டாற்றில் விட்டவர். 'அ.தி.மு.க உறவே வேண்டாம்' என டெல்லி தலைமையிடம் முட்டி மோதத் தெரிந்த அண்ணாமலைக்கு, 'என்னால் தி.மு.க அரசு நடத்தும் நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வர முடியாது..?' எனச் சொல்லத் தெரியாதா..?
இதுகூட பரவாயில்லை... 'அவிநாசி அத்திக்கடவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. குழாய் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான நிதி வழங்கவில்லை. தமிழக அணைகளைப் பாதுகாக்கக் குழு உருவாக்கவில்லை. பவானி சாகர், ஆழியாறு, திருமூர்த்தி, அமராவதி போன்ற அணைகள் போதிய பராமரிப்பின்றி இருக்கின்றன. எனவே ஆக.20-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்" என அண்ணாமலை அறிவித்தார். தற்போது, அந்தப் போராட்டத்தையே கைவிட்டு விட்டார்.
அதற்கு, 'அத்திக்கடவு -அவிநாசி திட்டம் நிறைவேறியிருப்பதால் போராட்டம் கைவிடப்படுகிறது' எனக் காரணமும் சொல்லியிருக்கிறார். திட்டம் நிறைவேறிவிட்டது சரி. ஆனால், அணைகள் பராமரிக்கப்படாதது, விவசாயிகளுக்கு நிதி வழங்காதது போன்ற பிரச்னைகளெல்லாம் இன்னும் இருக்கவே செய்கின்றன. அதைக்கண்டித்து போராட்டம் நடத்தியிருக்கலாமே..? யார் தடுத்தது?
ஆளும் கட்சியை எதிர்த்து அரசியல் செய்தால்தான் கட்சி வளரும். ஆனால் இவர் போராட்டம் என அறிவித்துவிட்டு பிறகு பின்வாங்குகிறார். இதன்மூலம் தி.மு.க-வுக்கு எதிரான தனது நிலைப்பாட்டிலிருந்து அண்ணாமலை அந்தர் பல்டி அடித்து விட்டார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது" என கொதித்தனர்.
இது குறித்து பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறுகையில், "அவிநாசி அத்திக்கடவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு விட்டது. எனவே தான் போராட்டம் நடத்தவில்லை. நாணயம் வெளியீட்டு விழாவில், அரசியல் நாகரீகம் கருதி நாங்கள் கலந்து கொண்டதில் எந்த தவறும் இல்லை. மம்தா பானர்ஜி வந்த போது மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வை சேர்ந்த பலர் படுகொலை செய்யப்பட்டனர். எனவே தான் அப்போது அண்ணாமலை செல்லவில்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் தி.மு.க-வை நாங்கள் எதிர்த்து அரசியல் செய்வது சிறிதளவும் குறையாது" என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu