அடி வாங்கிய அண்ணாமலை சொன்னதன் அர்த்தம் என்ன?

அடி வாங்கிய அண்ணாமலை  சொன்னதன் அர்த்தம் என்ன?
X

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை (கோப்பு படம்)

தமிழக சட்டசபை தேர்தல் களம் எங்களுக்கானது என அண்ணாமலை சொன்னதன் அர்த்தம் தான் என்ன?

பா.ஜ.க., நிர்வாகிகள் பலரிடம் பேசும்போது அவர்கள் சொன்ன தகவல்களை தொகுத்து வாசர்களுக்கு வழங்குகிறோம். அவர்கள் கூறியதாவது:

பேசா பொருளை பேச துணிந்தோம் என்றில்லை. எதை உணர்ந்தோமோ அதை சொல்கின்றோம். தமிழகத்தில் அண்ணாமலை தோற்றிருப்பது தேசாபிமானிகள் எல்லோருக்குமே வருத்தம். ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுப்பிள்ளை வெற்றியினை தவற விட்டதை போல் தவித்து கலங்கி நிற்கின்றார்கள்.

ஆனால் நடந்தது என்ன?

நீங்கள் நினைப்பது போல் தமிழகத்தில் திராவிட கட்சிகளை ஒரே நாளில் வீழ்த்த முடியாது. தமிழக திராவிட கட்சிகள் ஊடகம், கல்வி, தொழில் என எல்லாவற்றிலும் உடுறுவி தமிழக மக்களை ஒருவித மாய கட்டுபாட்டில் வைத்திருக்கின்றார்கள். இது ஒரு பெரும் மாயை மட்டுமல்ல. மாபெரும் வலுவான கட்டுமானம்.

நீங்கள் நம்புகின்றீர்களோ இல்லையோ, எம்ஜிஆரை முடக்கவோ இல்லை தன்னுடன் வைத்திருக்கவோ திமுகவால் முடிந்திருக்கும். ஆனால் தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகள் இருந்தால் மட்டுமே தேசியம் வளராது எனும் தந்திரத்துடன் எம்.ஜி.ஆர்., தனிக்கட்சி தொடங்க அனுமதிக்கப்பட்டார். அப்போதிருந்து, இப்போது வரை தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., என்ற இரு கட்சிகளின் ஆட்சி மட்டுமே தமிழகத்தில் நீடிக்கிறது. இப்போது முறியடிக்க நினைத்தாலும் இன்னும் பல பல வடிவங்களில் இந்த திராவிடத்தின் பிடி நீண்டு கொண்டே தான் இருக்கும்.

இப்படியான ஒரு பெரும் சக்தியினை தமிழகத்தில் உடைப்பது சுலபம் அல்ல. திராவிட கட்சிகள் எந்த நிமிடமும் மிகப்பெரும் சக்தி வாய்ந்த தலைவரை உருவாக்கும் திறன் படைத்தவர்கள். எனவே எந்த நிலையிலும் தமிழக அதிகாரபிடியினை விடமாட்டார்கள். இப்படித்தான் எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தோம். இந்த நேரத்தில் தான் பா.ஜ.க., தலைவராக அண்ணாமலை வந்தார்.

உண்மையில் அண்ணாமலையின் வருகை தமிழக பாஜகவில் பலருக்கே பிடிக்கவில்லை. அது என்னவோ தெரியவில்லை கேரளா, கன்னடம், தெலுங்கானாவில் பா.ஜ.க.,வினர் கடுமையாக உழைக்கும் போது தமிழகத்தில் மட்டும் பா.ஜ.க., வருத்தப்படாத வாலிபர் சங்கம் போல அதன் போக்கில் இருக்கின்றது.

ஆதரவு இல்லாத அண்ணாமலை

அண்ணாமலை இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியில் தனி மனிதனாகத்தான் போராடினார். பாஜக தலைமை அவருக்கு கொடுத்த சுதந்திரத்தை கட்சிக்குள் யாரும் கொடுக்கவில்லை. எனவே அண்ணாமலை திணறினார்.

உள்ளூர் பா.ஜ.க.,வினர் அண்ணாமலையினை ஆரம்பகட்டத்திலேயே முடக்கத்தான் அரவக்குறிச்சியில் தள்ளினார்கள். பின் கோவையில் தள்ளினார்கள், நிச்சயம் அண்ணாமலை அங்கே முடக்கியிருக்க கூடாது. அவரை அங்கு நிற்க வைத்தவர்கள், அண்ணாமலை தோற்றால் அது அவமானம். வென்றால் கோவைக்கு என்ன செய்தார் எனும் அரசியல் என்பது போல் திட்டம் வகுத்தார்கள். திட்டமிட்டே குழியில் தள்ளினார்கள். அண்ணாமலை கடுமையாகவே போராடினார். ஆனால் என்ன விலை கொடுத்தேனும் அவர் வெல்லக் கூடாது என முடிவெடுத்த திராவிட கட்சிகள் எல்லா தந்திரங்களையும் செய்து தோற்கடித்து விட்டன.

ஒரு தேர்தலின் தோல்வி ஒன்றும் முழு அரசியல் வாழ்வின் தோல்வி அல்ல. எனவே அண்ணாமலை மீண்டு வருவது உறுதி. ஆனால் இப்போது அவர் போட்டியிட்டதே அவசியமற்ற ஒன்று. அவர் தலைமையின் உத்தரவுக்கும் கட்சியினர் சதிக்கும் தமிழக மக்கள் தன்மேல் கொண்ட நம்பிக்கைக்கும் இடையில் போராடினார்.

அவரின் இந்த போராட்டத்துடனே தான் தமிழக அரசினை கட்டுப்படுத்தும் எதிர்கட்சி தலைவராகவும் மிகுந்த சக்தியுடன் செயலாற்றினார். மக்களிடம் அவருக்கு பெரும் வரவேற்பும் இருந்தது. இன்னும் இருக்கின்றது. ஆனால் மக்களிடம் இருந்த வரவேற்பு கட்சிக்காரர்களிடமில்லை. பெரியோர்களிடமில்லை. எனவே தான் அண்ணாமலை திணறினார்.

அதிமுகவுடன் கூட்டு வைத்து 5 அல்லது 7 சீட் வாங்கலாம். எதற்கு வீணாக சவால் எடுக்க வேண்டும் என்ற அரசியல் ஆலோசனைக்கு அண்ணாமலை கட்டுப்படவில்லை. அவர் கட்சியினை கட்சி வாக்கு வங்கியினை வளர்க்க விரும்பினார். அதிமுக தங்களை பயன்படுத்தி கொள்வதை அனுமதிக்கவில்லை. நிச்சயம் இந்த தேர்தலில் அவர் எடுத்தது மிகப்பெரும் சவால். ஆனால் அவரின் இந்த மாபெரும் சவாலுக்கு கட்சியினர் கொடுத்த ஒத்துழைப்பு என்பது மிக குறைவு.

ஒரு உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால் பொன்னார், தமிழிசை இந்த இருவர் போதும். கன்னியாகுமரி பாஜக வெல்ல வேண்டிய தொகுதி. ஆனால் பொன்னார் மேல் கொண்ட அதிருப்தி கொண்ட மக்களும், அதிருப்தி கொண்ட கட்சியினரும் அவரது தோல்விக்கு காரணமாகி விட்டனர். அதுதான் நிஜம். ஆம் கன்னியாகுமரியில் பொன்னார் தவிர இன்னொருவர் நின்றிருந்தால் எளிதில் வென்றிருக்கலாம்.

நெல்லை நிலை

நெல்லையில் நயினார் நாகேந்திரன் தவறான தேர்வு. அது நாடார்கள் உள்ள பலமான தொகுதி. உண்மையில் அப்போது அந்த தொகுதி திறந்தே கிடந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் முந்திக்கொண்டு வந்தார். எவ்வளவோ கருத்துக்கள் வந்தும் நயினார் வெற்றி பெறுவோம் என நம்பினார். இப்போது தோற்றும் போனார்.

நெல்லை தொகுதிக்கு பணபலம், சாதிபலம், இந்துபலம் என் எல்லா பலமும் கொண்டவர்கள் இருந்தும் வேட்பாளர் தேர்வில் பா.ஜ.க., கோட்டை விட்டது. தகுதியான வேட்பாளர் நெல்லையில் நின்றிருந்தால் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வந்திருக்கும். கனிமொழிக்கு சரியான போட்டியே இல்லை. துாத்துக்குடி தொகுதியை வழியச் சென்று விட்டுக் கொடுத்தார்கள்.

பாஜகவின் வேட்பாளர்களை அண்ணாமலை தேர்வு செய்யவில்லை. அவரை மீறி சிலர் செய்த சதிகள் தான், அதாவது ‘வந்தால் பா.ஜ.க.,வுக்கு லாபம். வராவிட்டால் அண்ணாமலைக்கு அவமானம்’ என தேர்ந்து திட்டமிட்டு சதி செய்தனர். அக முழுக்க கவனியுங்கள். அண்ணாமலை கட்சியினை வளர்ப்பதில் அக்கறை காட்டினார். வளர்த்தும் கொடுத்தார். ஆனால் அறுவடை செய்யும் நேரம் கட்சி அவரது கட்டுபாட்டை மீறிப்போனது. இதனால் ஏதேதோ நடந்தும் விட்டது.

அண்ணாமலை தோற்றிருக்கலாம். ஆனால் அவரின் உழைப்பு தோற்கவில்லை. இதற்கு முந்தைய தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டு வைத்ததால் தான் தோற்றோம் என சொன்ன அதிமுக இப்போது மண்ணை கவ்வி தலைகீழாக கிடக்கின்றது. இந்த தேர்தலில் 11 இடங்களில் பா.ஜ.க., இரண்டாமிடம் பெற்றுள்ளது. பல தொகுதிகளில் மிக சொற்ப எண்ணிக்கை வித்தியாசத்தில் மூன்றாமிடம் பெற்றுள்ளது. இதன் மூலம் பாஜக அசைக்க முடியா சக்தியாக மாறிவிட்டது. உண்மையில் இது அதிசயம்.

இந்த தேர்தலில் திமுக வெல்லும் என்பது எல்லோரும் அறிந்தது தான். ஆனாலும் பாஜக தன்னை வளர்த்துக் கொள்வதில் தான் ஆர்வம் காட்டியதே தவிர அதிக தொகுதிகளை அள்ளி வெற்றி பெற வேண்டும் என நினைத்து போராடவில்லை என்பதே உண்மை. எனவே பா.ஜ.க.,வின் நோக்கம் நிறைவேறியது.

அப்படி திமுகவினை வெற்றி கொள்ள வேண்டும் என்று மட்டும் பா.ஜ.க., விரும்பியிருந்தால் வலுவான கூட்டணியினை தேர்தலுக்கு முன்பே உருவாக்கியிருப்பார்கள். ஆனால் அ.தி.மு.க., விஜயகாந்த் மரணத்தை கூட அரசியலாக்கி ஆதாயம் பார்க்கவே தே.மு.தி.க.,வை தன்னுடன் இணைத்தது. உண்மையில் விஜயகாந்த் இறந்தது தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு தான். அந்த பாதிப்பினையும், அதன் மூலம் கிடைத்த அனுதாப ஓட்டுக்களையும் அதிமுக தங்கள் கூட்டணிக்கு மாற்றியும் இப்படி பரிதாபமாக தோற்றுள்ளனர்.

ஒரு வேளை தே.மு.தி.க., பாஜக பக்கம் இருந்திருந்தால் பல தொகுதிகளில் வாய்ப்பு இருந்திருக்கும். இதில் அ.தி.மு.க.,வும் இருந்திருந்தால், தமிழக தேர்தல் களத்தின் முகமே மாறியிருக்கும். ஆனால் பா.ஜ.க., தன்னை வளர்க்கவே சுய பரிசோதனை மேற்கொண்டது. அதில் வெற்றியும் கண்டுள்ளது.

உயர்ந்த வாக்கு சதவீதம்

இதை தவிர சொல்ல ஒன்றுமில்லை, அண்ணாமலை சொன்னபடி கட்சியின் வாக்கு சதவீதத்தை தனி கட்சியாக கணிசமாக உயர்த்தி பெரும் வெற்றி பெற்று விட்டார். திமுக ஒன்றும் வெல்ல முடியாத கட்சி இல்லை. ஒரு வலுவான கூட்டணி அமைந்தால் தி.மு.க.,வை தேர்தல் களத்தில் எளிதில் வீழ்த்தலாம் என்பது தெரிந்து விட்டது. எனவே வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் திமுகவுக்கு மிகப்பெரிய நெருப்பாறு தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இனி பாஜக அசைக்க முடியாத கட்சி. தமிழகத்தில் தவிர்க்கமுடியாத கட்சி. ஆட்சியினை நிர்ணயிக்கும் கட்சி எனும் அளவு வளர்ந்து விட்டது. ஆக இனிமேல் அதிமுக எனும் கட்சி பாஜக தயவில் இனி வாழலாம் இல்லை அழியலாம் என்பதை காலம் முடிவு செய்து விட்டது. இனி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., தனியே நின்றாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.

இந்த தேர்தல் வழக்கம் போல் இங்கு தோல்வி தான். ஆனால் அது காட்டியிருக்கும் அறிகுறிகளும் எதிரிகளின் பலவீனங்களும், கட்சியின் உள்சண்டையும், சரியான அமைப்புக்களை உருவாக்காததும் என பா.ஜ.க., செய்ய வேண்டிய நிறைய விஷயங்களை சுட்டிக் காட்டி விட்டது. அப்படியே விளைந்த வயலை அறுக்க ஆளில்லாமல் சொதப்பியதையும் காட்டி விட்டது.

தலைமைக்கு கட்டுப்பட்ட அண்ணாமலை

அண்ணாமலை மத்திய தலைமைக்கு கட்டுப்பட்டார், ஆனால் அவருக்கு கட்டுப்பட தமிழகத்தில் யாருமில்லை. அண்ணாமலை யார் யாரை நம்பி பொறுப்பை கொடுத்தாரோ அவர்களும் சரியாக ஒத்துழைக்கவில்லை. தமிழகத்தில் ஒவ்வொரு பூத் கமிட்டியாக அவர் செல்லமுடியாது, ஒவ்வொரு வாக்காளர் பட்டியலும் அவர் சரிபார்க்க முடியாது.

அதெல்லாம் கட்சியினர் பணி. கட்சியினர் தமிழகம் முழுவதும் சொதப்பி விட்டார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பா.ஜ.க.,வின் உள்கட்சி அரசியல் குழப்பமும் இதற்கு ஒரு முக்கிய காரணம். இனி எல்லாம் சரி செய்யப்படும். சரி செய்யப்பட்டே ஆக வேண்டும். நிச்சயம் சரியாகவும் செய்யும். அதில் சந்தேகமில்லை. இப்போது பட்ட அடியில் இனி ஆளாளுக்கு ஒழுங்காக வருவார்கள்.

இனி எல்லாம் சரியாகும். காயமில்லாமல் யுத்தமில்லை. இழப்பில்லாமல் பாடங்களில்லை. அனுபவமில்லாமல் வெற்றியில்லை. அடுத்த சட்டமன்ற தேர்தல் பாஜகவுக்கானது எனும் பெரும் மகிழ்ச்சியோடு அவரவர் கடமையினை செய்வோம். எல்லாம் மாறும். இது எல்லாம் தெரிந்து தான் அண்ணாமலை வரும் சட்டசபை தேர்தல்களம் எங்களுக்கானது என்று உறுதியாக கூறியுள்ளார். இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா