பா.ஜ.க.வுக்கு சசிகலா கடிதம் : டென்ஷனில் இபிஎஸ்..!

பா.ஜ.க.வுக்கு சசிகலா கடிதம் : டென்ஷனில் இபிஎஸ்..!
X

பைல் படம்

பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று அதிமுக அறிவித்ததில் இருந்தே பாஜக தலைவர் அண்ணாமலை மௌனமாக இருந்து வருகிறார்

அதிமுக பாஜகவில் இருந்து பிரிந்து சென்ற பின்னர் பாஜ தமிழக தலைவர் அமைதியாக இருக்கிறார். அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால், 'பாத யாத்திரையில் நான் ரொம்ப பிஸி' என்பதாகக் காட்டிக் கொள்கிறார். 'பா.ஜ.க. தலைமையை மாற்றப் போகிறார்களாமே?' என்று ஒரு பெண் நிருபர் அண்ணாமலையிடம் கேட்க, அவரையே பதிலுக்கு மிரட்டுமளவுக்கு உச்சகட்ட வெறுப்பிலிருக்கிறார். அண்ணாமலையின் விரக்திக்கு என்ன காரணமென்று விசாரித்ததில், தற்போது கூட்டணி குறித்தோ, அ.தி.மு.க. குறித்தோ எதுவுமே பேசக்கூடாதென பா.ஜ.க. தலைமை அவருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

அந்த பக்கம் அ.தி.மு.க.விலோ, எடப்பாடியைத் தவிர மற்ற தலைவர்கள் அனைவரும் கூட்டணி முறிவு குறித்து பேசினார்கள். எடப்பாடி மட்டும் வாய் திறக்கவில்லை. இதுகுறித்து வாய் திறந்தால் எடப்பாடிக்கு வில்லங்கமாகி விடும் என்று அவரும் கப்சிப்.

எடப்பாடி அடக்கி வாசிப்பதற்கு, சசிகலாவின் கடிதம் அ.தி.மு.க.வில் கிளப்பிய பூகம்பத்தையும் ஒரு காரணமாகச் சொல்கிறார்கள். அதாவது, வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், வீரமணி உட்பட 6 முன்னாள் அமைச்சர்கள் வரை தனக்கு ஆதரவாக அணி திரண்டிருப்பதாகவும், எனவே அ.தி.மு.க.வுக்கு தலைமையேற்க, தான் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டு, பா.ஜ.க. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சசிகலா கடிதம் எழுதியிருக்கிறார்.

அதோடு, தனது தலைமையை ஓ.பி.எஸ். தரப்பும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். தனது தலைமையிலான அ.தி.மு.க.வோடு பா.ஜ.க. கூட்டணி வைத்துக் கொண்டால் தமிழ்நாட்டில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்குமென்று விரிவாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறாராம்.

சசிகலாவின் கடிதத்துக்கு இதுவரை பா.ஜ.க. தரப்பிலிருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், சசிகலா கடிதம் குறித்த சாதக, பாதகங்கள், உண்மை நிலவரம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டிருக்கிறது. இதற்கிடையே எடப்பாடிக்கு அடுத்த அதிர்ச்சி வைத்தியமாக, அவரது வலது கரமாக நம்பப்படும் வேலுமணி, அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனை ரகசியமாகச் சந்தித்திருக்கிறார்.

இந்த சந்திப்பின் போது, “எடப்பாடி பழனிசாமி, ஏற்கெனவே முதல்வராக நான்காண்டுகளுக்கு மேல் இருந்து விட்டார். அ.தி.மு.க.வைப் பொறுத்த வரை அனைவரும் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வர முடியும். அந்த வகையில், கட்சிக்காகப் பெரிதும் செலவழித்துள்ள நான் அடுத்து வரவுள்ள தேர்தலில் வென்று முதல்வராக விரும்புகிறேன். எனக்கு ஆதரவாக 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். எனக்கு உங்களின் ஆதரவும் தேவை” என்று கூறியிருக்கிறார்.

திண்டுக்கல் சீனிவாசனோ அனைத்தையும் கேட்டுக் கொண்டு அப்படியே எடப்பாடியிடம் போட்டுக்கொடுத்து விட்டார். உடனே டென்ஷனான எடப்பாடி, வேலுமணியை அழைத்துக் கடுமையாகக் கத்தியிருக்கிறார். இருவருக்குமிடையே மிகப்பெரிய வார்த்தைத் தகராறு நடந்திருக்கிறது. எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் தான் இடையில் புகுந்து இருவருக்கிடையே சமாதானம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்குள் நடக்கும் குஸ்தி குறித்து ஆய்வு செய்ய நிர்மலா சீதாராமனை பா.ஜ.க. தலைமை கேட்டுக்கொண்டது. அதன்படி ஆய்வு நடத்திய நிர்மலா, அ.தி.மு.க. கூட்டணியில்லாமல் பாராளுமன்றத் தேர்தலை நாம் எதிர்கொள்வது சரியில்லை. வரவுள்ள 5 மாநிலத் தேர்தல்களில் நாம் அமோக வெற்றிபெற்றால், அ.தி.மு.க. கூட்டணி குறித்து நாம் வலுவாக அடித்துப் பேசலாமென்றும், ஒருவேளை தோல்வியடைந்தால், அதற்கேற்ப அ.தி.மு.க.வை அனுசரித்துப் போக வேண்டுமென்றும் கூறியிருக்கிறார். இதில் குறிப்பாக, பா.ஜ.க. தலைமைப் பொறுப்பிலிருக்கும் அண்ணாமலை குறித்தும் கட்சித் தலைமைக்கு அறிக்கையை அழுத்தமாகக் கூறியிருக்கிறார்.

இச்சூழலில் அண்ணாமலையை டெல்லி தலைமை அழைத்திருப்பது பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்த அழைப்பு, அமலாக்கத்துறை ரெய்டு குறித்து விசாரிப்பதற்காகத்தான் என்கிறார்கள் பா.ஜ.க. தரப்பினர். பா.ஜ.க. அலுவலகத்தில் பணியாற்றும் ஜோதி என்பவரும், அவரது உதவியாளர் செல்வகுமார் என்பவரும் பா.ஜ.க. அலுவலகத்தின் ஃபைனான்ஸ் விவகாரங்களைக் கவனித்துக் கொள்கிறார்கள். இவர்கள் பா.ஜ.க. கேசவ விநாயகத்துக்கும் நெருக்கமானவர்கள். சமீபத்தில் நடந்த ரெய்டு விவகாரத்திலும், பல திடுக்கிடும் தகவல்கள் பா.ஜ.க மேலிடத்திற்கு கிடைத்துள்ளன.

அந்த ரெய்டு குறித்து அமலாக்கத்துறையிடம் நிர்மலா சீதாராமன் விசாரிக்க, அனைத்து பண வசூல் விவரங்களையும் புட்டுப்புட்டு வைத்துவிட்டனர். இந்த விவகாரங்கள் குறித்தும், அ.தி.மு.க.வுக்கு எதிராக யாரும் பேசக்கூடாதென விளக்குவதற்காக அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். டெல்லியில், ஓ.பி.எஸ்., சசிகலா ஆதரவுடன் தேர்தலைச் சந்திக்கலாமென அண்ணாமலை கூறிய யோசனைக்கு பா.ஜ.க. மேலிடம் தெளிவான தகவல் தரவில்லை. இதுவும் பா.ஜ.க,வின் மவுனத்திற்கு காரணமாக இருந்து வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!