காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?

காலை வாரிய கட்சியினர்  அதிமுகவில் நடப்பது என்ன?
X

முன்னாள் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி 

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், கட்சியின் அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறது அ.தி.மு.க.

தேர்தல் செலவுகளைக் கணக்கிடுவது தொடங்கி, கட்சிக்குள் நிலவும் பஞ்சாயத்துகள் வரை தலைமையே நேரடியாகக் களமிறங்கி விசாரிப்பதாகத் தெரிகிறது. அதோடு இந்தப் பணிகளைக் கண்காணிக்க கட்சியின் வாரிசு ஒருவரும் களமிறங்கியிருப்பதால் எம்.ஜி.ஆர் மாளிகையே தேர்தல் பணிமனை போல பரபரத்துக் கிடக்கிறது.

இது தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம். “எதிர்பார்த்த கூட்டணி அமையவில்லை என்றாலும், ‘பசை’யுள்ள வேட்பாளர்களைக் களத்தில் இறக்கி, தனது தலைமையிலான முதல் நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக முடித்திருக்கிறார் இ.பி.எஸ்.

ஒரு தேர்தல் முடிந்த பிறகு, பூத்வாரியாக கட்சிக்கு விழுந்ததாக நிர்வாகிகள் சொல்லும் வாக்கு சதவிகிதம் தோராயமாகக் கணக்கிடப்படும். தேர்தல் ரிசல்ட் வெளியாகும் போது, அத்துடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால், நிர்வாகிகளின் நம்பகத்தன்மை தெரிந்து விடும். சமீபத்தில், 2.25 கோடி உறுப்பினர்கள் கட்சியில் இணைக்கப்பட்டனர். அவர்களின் ஓட்டு கட்சிக்கு விழுந்ததா என்பது இதன் மூலமாகத் தெரிந்து விடும். அதற்கான பணி ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.

அதேபோல மாவட்ட செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களும் தேர்தல் செலவுக்காகச் சில ஸ்வீட் பாக்ஸுகளை இறக்க வேண்டுமெனத் தலைமை உத்தரவிட்டிருந்தது. ஆனால், பெரும்பாலானோர் கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டார்கள். அப்படிச் செலவு செய்யாத மாவட்ட செயலாளர்களின் பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இது தவிர, ஒன்றிய, பேரூர், சட்டமன்றத் தொகுதிகளின் பொறுப்பாளர்கள் சிலர், மாற்றுக்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகத் தலைமைக்குப் புகார்கள் வந்திருக்கின்றன. தென்மாவட்டங்களில் தான் இந்தப் புகார்கள் அதிகமிருக்கின்றன. மேலும், வாக்குப் பதிவின் போது செயல்படாத பூத் கமிட்டிகளின் கணக்கும் எடுக்கப்படுகிறது.

எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தல் கட்சிக்குள் புதுவிதக் குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அம்மா இருக்கும் போது, கட்சிக்குள் யாருக்கு என்ன பொறுப்பு வழங்கப்பட்டதோ, அதைச் சரியாக செய்யவில்லையென்றால், அவர்களை உடனடியாகப் பொறுப்பிலிருந்து நீக்குவார்.

அமைச்சர்கள் தொடங்கி கீழ்மட்ட நிர்வாகிகள் வரை யாரும் அந்த நடவடிக்கையிலிருந்து தப்பியதில்லை. ஆனால், கடந்த ஓராண்டாகக் கட்சிக்குள் பிரச்னையாக இருக்கும் நபர்கள் மீது தொடர்ந்து புகார் வந்தும் இ.பி.எஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கிளைக் கழகம், ஒன்றிய அளவிலான செயலாளர்கள் பதவிகளும் காலியாக இருக்கின்றன. சார்பு அணிகளுக்கும் நிர்வாகிகள் முழுமையாக நியமிக்கப்படவில்லை. குறிப்பாக, வயது முதிர்வு காரணமாகத் தேர்தல் பணியாற்ற முடியாத நிர்வாகிகளுக்கு பதிலாக, இளம் நிர்வாகிகளை நியமிக்கவும் இல்லை. இந்தப் பிரச்னைகள் அனைத்தும் நடந்து முடிந்த தேர்தலில் எதிரொலித்திருக்கின்றன.

அம்மா பாணியில் பெரிய அளவில் ஒழுங்கு நடவடிக்கைகளை எடப்பாடி எடுக்க வாய்ப்பு குறைவு தான். நடவடிக்கை எடுத்தால், கட்சிக்குள் சலசலப்பு ஏற்படும் என்றே நினைக்கிறார். இதுவே அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரும் பிரச்னையாக வாய்ப்பு இருக்கிறது. எனவே, புகார் குறித்து விரைவாக நடவடிக்கை எடுப்பது தான் கட்சிக்கு நல்லது...” என்றனர் ஆதங்கத்துடன்.

இந்தப் பிரச்னைகள் ஒருபுறமிருக்க தேர்தலுக்காகத் தலைமை கொடுத்த 300 ஸ்வீட் பாக்ஸுகள் ஏப்பம் விடப்பட்டதாகவும் புகார் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக சீனியர் அமைப்புச் செயலாளர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், “நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் செய்யும் செலவு போக, தலைமையிலிருந்து 300 ஸ்வீட் பாக்ஸுகள் வரை ஒதுக்கப்பட்டன. அதைக் கண்காணிப்பதற்காகத் தனது வாரிசையே களமிறக்கியது தலைமை. அதன்படி, கூடுதல் இனிப்பு தேவைப்படும் தொகுதிகளுக்கு, வாரிசு தனது டீமுடன் சென்று கள நிலவரங்களை ஆராய்ந்து, விநியோகத்தைக் கண்காணித்தார்.

அதன்படி, தேர்தல் முடிந்ததும் பட்டுவாடா செய்யப்பட்ட ஸ்வீட்டுகளின் கணக்கைச் சமர்ப்பிக்கச் சொல்லி கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதில், இனிப்புகளை முழுமையாக விநியோகம் செய்யாமல் சிலர் ஏப்பம் விட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அவர்களின் லிஸ்ட்டை வாரிசுப் புள்ளியின் டீம் எடுத்து வைத்திருக்கிறது.

அதேபோல, பசை விநியோகத்தைத் தவிர்த்த வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோரின் லிஸ்ட்டும் அந்த டீமிடம் இருக்கிறது. இது குறித்து விசாரிக்க சீனியர்கள் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்படவிருக்கிறது. அந்தக் குழுவையும் வாரிசுப் புள்ளி தான் இயக்கவிருக்கிறார்.

தேர்தல் பணிகள் சார்ந்த புகார்கள்மீது நடவடிக்கை இருக்கிறதோ, இல்லையோ... ‘ஸ்வீட் பாக்ஸ்’ விஷயத்தில் கட்டாயம் கடும் நடவடிக்கை இருக்கும். தேர்தலுக்குப் பிறகு தலைமையின் முதல் நடவடிக்கையே இதுவாகத்தான் இருக்கும்” என்றார். பஞ்சாயத்துகளை வாரிசுப் புள்ளி பார்ப்பது இருக்கட்டும்... வாரிசுப் புள்ளியே பஞ்சாயத்தாக மாறாமல் இருந்தால் சரி என்கின்றனர் கட்சி சீனியர்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!