2026-ல் மீண்டும் ஆட்சி...! பகல் கனவு காண்கிறார் எடப்பாடி..!

2026-ல் மீண்டும் ஆட்சி...!  பகல் கனவு காண்கிறார் எடப்பாடி..!
X
தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த போது, அவை நாள்களிலெல்லாம் ஏதாவது ஒரு பிரச்னையைக் கிளப்பிக்கொண்டேயிருந்தார்கள்.

இந்த மூன்று ஆண்டுகளில், ஆளுங்கட்சியை ஒரு முறைகூடப் பதற்றத்தில் வைக்கவில்லை எடப்பாடி. நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, “2026-ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று அ.தி.மு.க ஆட்சி அமைக்கும்” என்ற தொடர்ந்து பேசிவருகிறார் எடப்பாடி பழனிசாமி. “ஆக்கபூர்வமாக எந்த வேலையும் செய்யாமல், மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என எடப்பாடி கனவு காண்கிறார்” என்று அவரின் பேச்சைக் கட்சியிலுள்ள சீனியர்களே விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். என்னதான் பிரச்னை… விரிவாகவே விசாரித்தோம்.

பொதுச்செயலாளரா... சேலம் மா.செ-வா?

அ.தி.மு.க சீனியர் அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 வென்ற தி.மு.க-வே ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தேர்தல் பணியில் சொதப்பியதாக அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்திருக்கிறது. தொடர்ந்து சில முக்கிய நிர்வாகிகளை மாற்றும் முடிவில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அவ்வளவு ஏன் பா.ஜ.க-வில்கூட சில ஒன்றியக்குழுக்களைக் கலைத்து, சில மாவட்டத் தலைவர்களையும் நீக்கியிருக்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க-வில் சேலம் தொகுதியில் மட்டுமே இ.பி.எஸ் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது. இ.பி.எஸ் அ.தி.மு.க-வுக்கு, பொதுச்செயலாளரா அல்லது சேலம் மாவட்டச் செயலாளரா?

தமிழ்நாட்டு அரசியல் என்பது இதுவரை தி.மு.க Vs அ.தி.மு.க என்று தான் இருந்திருக்கிறது. ஆனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில், சரிந்த தி.மு.க-வின் வாக்கு சதவிகிதம் அ.தி.மு.க-வுக்கு வரவில்லை. அ.தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் இருக்கும், 56 தொகுதிகளில் கட்சி இரண்டாமிடம், மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

தென்சென்னை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், புதுச்சேரி ஆகிய எட்டு மக்களவைத் தொகுதிகளில் டெபாசிட்டையே இழந்து விட்டது அ.தி.மு.க. ஒன்பது தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்கும், இரண்டு தொகுதிகளில் நான்காவது இடத்துக்கும் தள்ளப்பட்டு பரிதாப நிலையில் இருக்கிறது கட்சி.

இது குறித்தெல்லாம் நிர்வாகிகளுடன் நீண்ட ஆலோசனை மேற்கொண்டால் தான் கட்சியை மீட்டெடுக்க முடியும். ஜெயலலிதா இருக்கும்போது தேர்தலில் வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும் சீனியர்களை வைத்துத் தேர்தல் முடிவுகளை ஆராய, குழு ஒன்றை அமைப்பார். அந்தக் குழு, பலதரப்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, ஜெயலலிதாவிடம் அறிக்கை சமர்ப்பிக்கும். அதன்படி, நிர்வாகிகளுக்குப் பதவி உயர்வு, நீக்கம் இருக்கும். ஆனால், எடப்பாடி பொறுப்புக்கு வந்த பிறகு, கட்சியில் அந்த நடைமுறையே இல்லாமல் போய்விட்டது.

அ.தி.மு.க-வின் பரிதாபத் தோல்விக்குப் பின்னால், பல நிர்வாகிகளின் உள்ளடி அரசியல் இருக்கிறது. ஒருவேளை குழு அமைத்து சீனியர்கள் மீது தவறு இருப்பது தெரியவந்தால், அவர்கள்மீது இ.பி.எஸ் நடவடிக்கை எடுப்பதென்பது இயலாத காரியம். அதேபோல், தன் இடத்தைத் தக்கவைக்க ஜூனியர் மா.செ-க்களின் உதவியும் அவருக்குத் தேவைப்படுவதால் அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார். இதனால்தான், யாரையும் பகைத்துக்கொள்ளாமலும், தோல்வி குறித்து ஆலோசிக்காமலும் நழுவிவருகிறார். இப்படி, கட்சி வளர்ச்சிக்கு எதையுமே செய்யாமல்,‘2026-ல் ஆட்சியைப் பிடித்துவிடலாம்’ என்று பகல் கனவு காண்கிறார்” என்றனர் பொருமலாக.

கட்சிக்குள் இருக்கும் பிரச்னை இப்படியென்றால், எதிர்க்கட்சித் தலைவராகவும் எடப்பாடி ஆக்கபூர்வமாக செயல்படத் தவறுகிறார் என்கிறார்கள் சீனியர்கள். இது குறித்து பேசிய அ.தி.மு.க சீனியர் எம்.எல்.ஏ ஒருவர், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை உயரத் தொடங்கியதும், எடப்பாடி பழனிசாமி முதல் ஆளாக அங்கு நேரடியாகச் சென்று வந்தது எங்களுக்கே ஆச்சர்யம். ஓர் எதிர்க்கட்சித் தலைவர் இப்படி உடனுக்குடன் களத்தில் இறங்கினால் தான், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற முடியும் என்பது அரசியலில் பாலபாடம். ஆனால், முன்பு இது போன்ற பல சந்தர்ப்பங்கள் வாய்த்த போதும், அத்தனையையும் கோட்டைவிட்டு விட்டார் எடப்பாடி.

இப்போதும்கூட, கள்ளச்சாராய விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் இன்னும் எடப்பாடி பேசவே இல்லை. கடந்த 22-ம் தேதி அதற்கான வாய்ப்பு கிடைத்தும் வெளிநடப்பு செய்து விட்டார். 24-ம் தேதி போராட்டம் என்பதால், அன்றும் பேசவில்லை. ‘வெளியில் என்ன பிரச்னை வேண்டுமென்றாலும் செய்யலாம். ஆனால், அவைக்குள் இன்று என்ன பிரச்னையை கிளப்பப்போகிறார்களோ…?’ என்று ஆளும் கட்சியைப் பதற்றத்தில் வைத்திருப்பது தான் ஒரு நல்ல எதிர்க்கட்சியின் வேலை. அப்படியிருந்தால் தான், தவறு செய்யும் அமைச்சர்களும் அதிகாரிகளும் பயப்படுவார்கள்.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த போது, அவை நாள்களிலெல்லாம் ஏதாவது ஒரு பிரச்னையைக் கிளப்பிக்கொண்டேயிருந்தார்கள். ஆனால், இந்த மூன்று ஆண்டுகளில், ஆளுங்கட்சியை ஒரு முறைகூடப் பதற்றத்தில் வைக்கவில்லை எடப்பாடி. ஆளுங்கட்சியின் ஊழல்கள் குறித்து வெளியில் புலிபோலக் குற்றச்சாட்டை முன்வைப்பவர், சட்டசபைக்குள் எலிபோல எதுவும் பேசாமல் இருந்து விடுகிறார். கடந்த ஓராண்டாக இருக்கை விவகாரத்தை வைத்தே வெளிநடப்பு செய்தார்கள். தற்போது, அவைக்கு வருவதையே தவிர்க்கிறார்கள். இதெல்லாம் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதில்லை” என்றார் வேதனையுடன்.

அரசியல் விமர்சகர்களோ, “தி.மு.க கேடர் பேஸ்டு பார்ட்டி. அ.தி.மு.க-வோ மாஸ் பேஸ்டு பார்ட்டி. தி.மு.க செய்யும் தவறுகளைப் பார்த்து, மக்கள் அ.தி.மு.க-வை ஆட்சிக்குக் கொண்டு வந்தது தான் கடந்த கால வரலாறு. ஆனால், இப்போது மக்கள் தங்களுக்கான ஆபத்பாந்தவனாக அ.தி.மு.க-வைப் பார்க்கும் நிலையில் அந்தக் கட்சி இல்லை. எடப்பாடியும் அதற்கு இன்னும் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவில்லை” என்கிறார்கள். இப்படியே காலம் போய்க்கொண்டிருந்தால், எடப்பாடி நிலைமை அதோகதியாகி விடும். 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலும் எடப்பாடிக்கு பகல் கனவு ஆகி விடும் என்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!