உதயநிதி துணை முதல்வர்-சரியா? தவறா? வேறு வழியில்லை என்பதே உண்மை..!

உதயநிதி துணை முதல்வர்-சரியா? தவறா?  வேறு வழியில்லை என்பதே உண்மை..!

தொடரும் திமுக......

அ.தி.மு.க., வைப்போல் தி.மு.க., உடைந்து சிதறுவதை தடுக்க அரசியல் வாரிசை நியமிப்பது தி.மு.க.,விற்கு அவசியமாகிறது.

பேரறிஞர் அண்ணா தனது வாரிசு யார் என்பதை அறிவிக்காததால், தி.மு.க., இரண்டாக பிளந்தது. அதிர்ஷ்டவசமாக இரண்டு அணிக்குமே கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்ற வலுவான தலைவர்கள் கிடைத்ததால், இரண்டு கட்சிகளுமே உயிர் பெற்றன. இப்போது வரை ஆட்சி நடத்தி வருகின்றன.

ஆனால் எம்.ஜி.ஆர்., தனது அரசியல் வாரிசை நியமிக்கவில்லை. இதனால் அ.தி.மு.க., உடைந்து சிதறியது. திடீரென சுயம்பு போல் எழுந்த ஜெயலலிதா என்ற மாபெரும் சக்தி அ.தி.மு.க.,வை சரிவில் இருந்து மீட்டது. ஜெ., தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாகி விட்டார்.

எம்.ஜி.ஆர்., செய்த தவறையே ஜெயலலிதாவும் செய்தார். அவர் தனது அரசியல் வாரிசை நியமிக்கவில்லை. இதனால் அ.தி.மு.க., சிதறு தேங்காய் போல் சிதறியது. ஜெ., இறந்த பின்னர் தமிழகத்தில் நடந்த 10 தேர்தல்களிலும் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. இப்போது எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் தலைமையாக உருவெடுத்தாலும், கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை. அ.தி.மு.க.,வில் உள்ள சீனியர்களை எடப்பாடியால் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போது வரை அ.தி.மு.க., தத்தளித்து வருகிறது. பல அணிகளாக உள்ள அ.தி.மு.க., மீண்டு வருமா? மீட்பது யார்? என்ற குழப்பம் இன்னமும் நிலவுகிறது.

காங்கிரஸ் கட்சியை பாருங்கள். இந்தியாவிலேயே அதிக முறை உடைந்த கட்சி காங்கிரஸ் தான். ஆனால் காங்., கட்சியின் அதிர்ஷ்டம் அடுத்தடுத்து தனது அரசியல் வாரிசு யார் என்பதை அக்கட்சி தொடர்ந்து தெளிவுபடுத்தி வந்தது. இதன் காரணமாக இப்போது வரை உயிர்ப்புடன் இருப்பதோடு, உலகின் மாபெரும் தலைவராக உருவெடுத்த பிரதமர் மோடியையே பல நேரங்களில் காங்., நிலைகுலையச் செய்யும் அளவுக்கு இன்னும் வலுவுடன் உள்ளது.

இந்த விஷயத்தை கருணாநிதி தெளிவாக புரிந்து கொண்டிருந்தார். தவிர தி.மு.க.,வில் இருக்கும் அத்தனை இரண்டாம் கட்ட தலைவர்களும் மிகப்பெரிய புத்திசாலிகள். மிகப்பெரும் ஆளுமைகள். பயங்கரமான பராக்கிரமசாலிகள். இவர்களுக்கு மத்தியில் வாரிசு யார் என தெளிவாக பதிய வைக்காவிட்டால், தி.மு.க., கீழே கொட்டப்பட்ட நெல்லிக்காய் மூட்டை போல் ஆகி விடும். கருணாநிதிக்கு இன்னொரு பிரச்னையும் இருந்தது. அவரது குடும்பத்திற்குள்ளேயே பல வாரிசுகள் போட்டியிட்டனர். இவர்களை சமாளிப்பதும் பெரும் தலைவலியாக இருந்தது.

இருப்பினும் கருணாநிதி மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு தனது அரசியல் வாரிசாக தனது மகன் ஸ்டாலினை மையப்படுத்தி வளர்த்தெடுத்து வந்தார். அவர் கணித்தது போலவே ஸ்டாலின் கருணாநிதியை விட மிகப்பெரிய வெற்றியை பெற்று கட்சியை ஆட்சியில் அமர்த்தினார்.

இதே சிக்கல் தான் முதல்வர் ஸ்டாலினுக்கும் உருவாகி உள்ளது. கருணாநிதியாலேயே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்த தலைவர்கள் இன்னும் தி.மு.க.,வில் கொடிகட்டிப்பறக்கின்றனர். இவர்கள் மீது கை வைக்க முதல்வர் ஸ்டாலினே அச்சப்படுகிறார். அந்த அளவுக்கு வலுவான இரண்டாம் கட்ட தலைவர்கள் தி.மு.க.,வில் உள்ளனர். அவர்களின் பண பலம், அரசியல் ஆளுமை, புத்திசாலித்தனம் இவற்றின் முன்னால் தனது அரசியல் வாரிசு யார் என்பதை தெளிவுபடுத்தி வெற்றி பெற வைக்க வேண்டிய நிர்பந்தம் முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது.

இதனால் தயக்கமின்றி தனது தந்தை பாணியில் தனது மகன் உதயநிதியை வளர்த்துக்கொண்டு வந்து இன்று உதயநிதியை தமிழகத்தின் துணை முதல்வராக உட்காரச் செய்துவிட்டார். ஆக அடுத்து 30 ஆண்டுகளுக்கு தி.மு.க.,வின் தலைமைக்கு பிரச்னை இல்லை.

தனது வாரிசுகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை. காரணம் பல ஆயிரம் தலைமுறைகள் மிக, மிக வசதியாக வாழும் அளவுக்கு வசதிகள் அவர்களிடம் உள்ளன. ஆனால் கட்சியை காப்பாற்ற ஸ்டாலினுக்கு வேறு வழியே இல்லை. இதனால் தான் தனது மகன் தான் அடுத்த வாரிசு என்பதை தெளிவுபடுத்தி விட்டார்.

நாளுக்கு நாள் தமிழக அரசியல் களம் கடுமையாகிக் கொண்டே வருகிறது. அண்ணாமலை போன்ற அசுர பலம் கொண்ட ஆளுமைகளும், விஜய் போன்ற சினிமா நட்சத்திரங்களும் களம் இறங்கி தமிழக அரசியல் களத்தின் நிலவரத்தை திசை திருப்பி வருகின்றனர். தவிர தி.மு.க., கூட்டணியிலேயே தற்போது ஆட்சியில் பங்கு கேட்கும் அளவுக்கு வளர்ந்த கட்சிகள் உருவாகி விட்டன.

இந்த சவால் நிறைந்த சூழலில் தி.மு.க., தன்னை நாளுக்கு நாள் பலப்படுத்த வேண்டிய நிர்பந்தம் உருவாகி உள்ளது. இதனை சரியாகப் புரிந்து கொண்டே தி.மு.க., செயல்படுகிறது. எனவே ஸ்டாலின் தனது மகனை துணைமுதல்வராக்கி தனக்கு அடுத்து அரசியல் வாரிசு உதயநிதி தான் என மக்களுக்கு அடையாளம் காட்டியது மிகவும் சரியான செயலே.

இந்த செய்தி வாரிசு அரசியலை நியாயப்படுத்த எழுதப்படவில்லை. இன்று உச்சபட்ச சுயநலம் நிறைந்த அரசியல் காலகட்டத்தில் உள்ள நிர்பந்தங்களை எதிர்கொள்ள தி.மு.க., விற்கு வேறு வழியே இல்லை என்பது தான் உண்மை. உதயநிதி ஒன்றும் வாழ்வியல் வசதிக்காக இந்த பதவிக்கு வரவில்லை என்பதே உண்மை.

காரணம் இன்று தி.மு.க., குடும்பத்திடம் உள்ள சொத்துக்களுக்கு, சினிமா பாணியில் தினமும் பல கோடிகளை செலவிட்டு இந்த உலகின் அதிகபட்ச சொகுசு நிறைந்த வசதியான வாழ்க்கையை வாழ்ந்தாலும், பல நுாறு ஆண்டுகளுக்கு வசதியுடன் வாழ முடியும். அந்த சொகுசு வாழ்க்கையை தியாகம் செய்து விட்டு தான் உதயநிதி தற்போது அரசியலுக்கு வந்துள்ளார்.

நிச்சயம் துணை முதல்வர் பதவி அவருக்கு புதிய அந்தஸ்தையோ, புதிய வசதிகளையோ, புதிய மரியாதைகளையோ, புதிய அதிகாரத்தையோ தரப்போவதில்லை. காரணம் அவருக்கு மேலே சொன்ன எல்லாமே இருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில், எவ்வளவு பெரிய சொகுசு வாழ்க்கையை அவரால் தேர்ந்தெடுத்திருக்க முடியும்.

அப்படியிருந்தும், அவர் முள்படுக்கை என அறிந்தும் துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டு தி.மு.க.,வின் அரசியல் வாரிசு என்ற டென்சனையும் துாக்கி சுமப்பது என்பது காலத்தின் கட்டாயமே தவிர... உதயநிதிக்கான சுயநல வாழ்க்கைக்கானது அல்ல என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரே நோக்கம் திமுக எனும் இயக்கத்தை காப்பாற்றவேண்டும்.

Tags

Next Story