நினைவாற்றலை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்ட தி.மு.க.!

நினைவாற்றலை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்ட தி.மு.க.!

டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்.,

தி.மு.க., தலைவர் தங்கள் வசதிப்படி நினைவாற்றலை மாற்றும் திறன் கொண்டவர்கள் என பா.ஜ.க., விமர்சித்துள்ளது.

தேனி பா.ஜ.க., மருத்துவப்பிரிவு நிர்வாகி டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்., கூறியதாவது:

அரசியல் சட்டத்தை திருத்த முயன்ற மோடி இன்று அரசியல் சட்டத்தை வணங்குகிறார் என்றால் அதற்கு நாங்கள் அடித்த அடி தான் காரணம் என முதல்வர் ஸ்டாலின் கூறியதை கேட்டு சிரிக்கத்தான் முடிகிறது. அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அறைகூவல் விடுகிற முதல்வர் மு க ஸ்டாலின் செயல் வேடிக்கையாக இருக்கிறது.

தி.மு.க.,வினர் தங்களுக்கு வசதியான விஷயங்களை மட்டும் நினைவில் வைத்துக்கொள்கின்றனர். தங்களுக்கு எதிரான விஷயங்களை, தங்களால் நடந்த குழப்பங்களை மறந்தது போல் சாமர்த்தியமாக நடிக்கின்றனர். அவர்களுக்கு சில விஷயங்களை நினைவூட்ட வேண்டி உள்ளது.

42 வது சட்ட திருத்தத்தை அவசர நிலை காலத்தில் கொண்டு வந்து நீதிமன்றங்களின் உரிமைகளை மதிப்பிழக்கச் செய்து அரசியல் சாசனத்தை முற்றிலும் காலி பண்ணியது இந்திரா காந்தி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்தக் கட்சியோடு தான் அரசியல் சாசனத்தை மதிக்கும் தி.மு.க.,வினர் கூட்டணி வைத்து இருக்கிறார்கள்.

இவர்கள் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி அரசியல் சாசனத் சட்டத்தை 90 முறை திருத்தம் செய்திருக்கிறார்கள். பிரிவு 356 கொண்டு மாநில அரசுகளை 90 முறை (மொத்தம் 115) மாநில அரசுகளை கலைத்து இருக்கிறார்கள்.

1988ல் தமிழ்நாட்டில் கருணாநிதி, அன்பழகன் உட்பட பலரும் இதே அரசியல் சாசனத்தைத் தீ வைத்து எரித்தார்கள். அதன் காரணமாகச் சிறைக்குச் சென்றார்கள். அப்போதைய பேரவைத் தலைவர் பி.ஹெச்.பாண்டியன் அச்சம்பவத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என்கிற வரலாற்றை எல்லாம் தி.மு.க.,வினர் வசதியாக மறந்து விட்டார்கள் போல இருக்கிறது.

அகில இந்தியாவிலேயே.. தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தான் சட்ட நகலை எரித்ததற்கு பதவியிழந்தவர்கள். அப்படிப்பட்ட இவர்கள் இன்று பேசுவது நகைப்பைத் தருகிறது. இப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு அரசியல் சாசனம் தேவநாகரி எழுத்தில் இருக்கிறது என்பதாக காரணங்களை மாற்றிக் கூறினார்கள்.

அரசியல் சாசனத்தை எந்த காரணத்தையும் முன்னிட்டு மதிக்காத இவர்கள் இன்றைக்கு வந்து அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்று கூச்சல் போடுவதும் கையடக்க சாசனப் பிரதிகளைத் தூக்கிக் காட்டுவதும் எந்த வகையில் நியாயம். தனக்கு வந்தால் இரத்தம்!.அடுத்தவருக்கு வந்தால் தக்காளிச்சட்னியா? முதல்வருக்கு இது புரியாமலா இருக்கும்? இவ்வாறு கூறினார்.

Tags

Next Story