அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.. திமுக-பாமக நெருக்கம் : கிலியில் அதிமுக?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ்
சமீப காலமாக தமிழகத்தின் அரசியல் நடவடிக்கைகளை கூர்ந்து நோக்குபவர்களின் பார்வையில் திமுக-பாமக என்ற இரு கட்சிகளின் நெருக்கம் குன்றிலிட்ட விளக்கு போல பிரகாசமாக தெரிவதை ஏற்றுக்கொள்வார்கள். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.. என்ற வார்த்தைகளை வெற்று வார்தைகளாக ஒதுக்கிவிட முடியாது என்பதை இந்த இரு கட்சிகள் நெருங்கி வருவதை காட்டுகிறது.
இதற்கு 2 விளக்கங்களை முன் வைக்கலாம்.
ஒன்று சமீபத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது 83 வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் டாக்டர் ராமதாஸை தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினார். அப்போது டாக்டர் ராமதாஸ், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் தனக்கும் இடையிலான நட்பு மற்றும் கருணாநிதி பிற்பட்ட வகுப்பு மக்களுக்கு செய்த நன்மைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் சிலாகித்து பேசியுள்ளார். அதை அவரே அறிக்கையாக பதிவும் செய்து இருந்தார்.
வன்னியர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீட்டை திமுக அரசு நிறைவேற்றுமா என்று பலரும் நினைத்திருந்த வேளையில் சட்டமன்றத்தில் பா.ம.க எம்.எல்.ஏக்கள் இட ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பினர். ஆலோசனை செய்து முடிவு எடுப்பதாக முதலமைச்சர் பதில்கூறி இருந்தார். அடுத்த சில தினங்களிலேயே இட ஒதுக்கீட்டிற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த சம்பவம் டாக்டர் ராமதாஸை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. முதலமைச்சருக்கு வாழ்த்துக்களை தொலைபேசி மூலம் தெரிவித்தார். இது திமுக-பாமக நெருக்கத்தின் முதல் சம்பவமாக பார்க்கப்படுகிறது.
இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்க தவறக்கூடாது. வன்னியர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஏற்கனவே சட்டம் கொண்டு வந்திருந்தது. சட்டமாக கொண்டு வந்ததை பாராட்டி டாக்டர் ராமதாஸ் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நன்றி தெரிவித்திருந்தார் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
திமுக-பாமக நெருங்கி வருவதின் இரண்டாவது சம்பவம், தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா,முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திறப்பு மற்றும் குடியரசு தலைவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எவ்வித பாகுபாடுகளில்லாமல் அனைத்து கட்சி பிரமுகர்களையும் வரவேற்று இருந்தார். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு சிறப்பாக வரவேற்றதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அதிமுகவில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட எம்.எல்.ஏக்கள் அனைவரும் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டனர். ஆனால், பா.ம.க. எம்.எல்.ஏக்கள் 5 பேரும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இது திமுகவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பா.ம.க, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கிறது. இந்த சூழலில் அதிமுகவே சட்டமன்ற நூற்றாண்டு நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்ட நிலையில் பா.ம.க கலந்து கொண்டதை திமுக-பா.ம.க நெருங்கி வருவதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் திமுக-பாமக நெருக்கம் அதிமுகவுக்கு கிலி ஏற்படுத்தியுள்ளதாகவே அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu