திமுக - பாஜக கூட்டணி யூகங்கள் அதிகரிக்க காரணம் என்ன?
தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பேசு பொருளாகி இருக்கக்கூடிய விஷயம் கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியிடும் நிகழ்ச்சியில் பாஜக தலைவர்களும் திமுக தலைவர்களும் காட்டிய நெருக்கம் தான்.
1999 வாஜ்பாய் தலைமையில் நடந்த பாஜக-திமுக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலம் கண் முன்பு வந்து போவதை போல தெரிந்ததாக, திமுகவில் ஒரு தரப்பினரே சமூக வலைத்தளங்களில் புலம்பும் நிலையை உருவாக்கி இருக்கிறது இந்த நிகழ்வுகள்.
கூட்டத்தில் பின்னால் நின்று கொண்டிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை முன் வரிசைக்கு வருமாறு முதல்வர் ஸ்டாலின் அழைக்க, கனிமொழி அவருக்கு வழிவிட்டு முன்வரிசைக்கு கொண்டு வந்து நிறுத்த என.. சகோதர பாச சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு அந்த நிகழ்வுகள் நடந்தேறியது பாஜகவில் உள்ள திமுக தீவிர எதிர்பாளர்களுக்கே தீவிரமான அதிர்ச்சியை அளித்துள்ளது.
இப்படியாக, இரு கட்சியிலும் உள்ள குறிப்பிட்ட சதவீதத்தினர் ரசிக்காத நிகழ்வாக இந்த நிகழ்வுகள் மாறியிருந்தாலும், எங்களுக்குள் எந்த ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது.. முழுக்க முழுக்க இது அரசு நிகழ்ச்சி மட்டுமே என்று ஆணித்தரமாக கூறுகின்றனர் திமுகவின் மேல்மட்ட தலைவர்கள்.
பாஜக-திமுகவின் நெருக்கம் இவ்விரு கட்சியினரை மட்டுமல்லாது அதிமுகவையும் ஆட்டிப் பார்த்துள்ளது. அதிமுக-பாஜக கள்ள உறவு வைத்துக் கொண்டு இருக்கிறது என்று இத்தனை நாட்களாக கூறி வந்தீர்களே, ஆனால் இப்போது நீங்கள் செய்வது என்ன? என்ற தொனியில் எடப்பாடி பழனிச்சாமி முதல் அத்தனை நிர்வாகிகளும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார்கள்.
இந்த சந்தேக பேச்சுக்கள் கலைஞரின் நாணய வெளியீட்டு விழாவால் மட்டுமே வந்தது கிடையாது. கருணாநிதி நினைவாக மெரினா கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட போது, மத்திய அரசு அதற்கு உடனடியாக சம்மதம் தெரிவித்தது
செந்தில் பாலாஜி தவிர திமுகவின் மற்ற அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் பெரிய அளவில் வேகம் பிடிக்கவில்லை. கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதோடு மட்டுமின்றி அவரது நினைவிடத்துக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினார் ராஜ்நாத் சிங்.
என்னதான் அரசு வேறு, கட்சி வேறு என்று சொன்னாலும் கூட, கலைஞர் என்று பாராட்டி வாழ்த்தி தள்ளி இருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அரசு நிகழ்ச்சி என்பதால் மாண்புடன் நடந்து கொள்கிறோம் என்று திமுக தரப்பில் சொன்னாலும் கூட, பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வந்த போது கருப்பு பலூன் பறக்க விட்டது, வலைத்தளங்களில் அவருக்கு எதிராக திரும்பிச் செல்லுமாறு ஹேஷ் டேக் உருவாக்கியது போன்றவற்றை சுட்டிக்காட்டும் எதிர்த்தரப்பினர், அப்போது மட்டும் மோடி என்ன, பாஜக தலைவராகவா வந்தார், பிரதமராக தானே வந்தார்? இந்த நியாயத்தை ஏன் அப்போது பேசவில்லை என்று கேட்பதை பார்க்க முடிகிறது. எழுதிக்கிட்ட போகலாம். அவ்வளவு விஷயம் இருக்கு. அவ்வளவு உள்குத்து வேலைகள் நடக்குது. பொறுந்திருந்து பார்ப்போம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu