அரேபிய அரசியலையும் சாதகமாக்கிய இந்தியா..!
பிரதமர் மோடிக்கு கத்தார் நாட்டின் சிவப்பு கம்பள வரவேற்பு.
வளைகுடாவில் சுற்றுபயணம் செய்யும் மோடி அபுதாபியில் அரேபிய இஸ்லாமிய மக்கள் வாழ்த்த இந்து ஆலயத்தை திறந்து வைத்தார்.
பின் அங்கிருக்கும் இந்திய மக்களுடன் உரையாடினார். 1990களில் ராமர்கோயில் சிக்கல் கடைசி கட்டத்துக்கு வந்த போது பாஜக எனும் கட்சி பூச்சாண்டியாக காட்டப்பட்டது. அரபு நாடுகள் இனி எண்ணெய் தராது. பேரீச்சம்பழம் தராது. இந்தியருக்கு வேலை தராது. பாஜகவினால் கெட்டது, இந்தியா என எதிர் கட்சிகள் அழிச்சாட்டியம் செய்தன.
இந்திய பொருட்களை இனி அரேபியா வாங்காது, எல்லாவற்றையும் கடலில் போடுங்கள். நாடு வாழ அத்வானியினையும் அதோடு சேர்த்து போடுங்கள் என்றெல்லாம் பயமுறுத்திகொண்டிருந்தார்கள்.
இப்போது மோடி ஆட்சியில் ராமர்கோவில் கட்டப்பட்டுள்ளது மட்டுமின்றி, அரேபியாவிலும் இந்து ஆலயம் கட்டி திறந்தும் வைத்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் பூச்சாண்டி காட்டியது போல் அல்லாமல் பாஜகவின் மோடி பிரதமராக அங்கு கௌரவிக்கப்படுகின்றார். ஒவ்வொரு நாடும் விரும்பி அழைகின்றன.
எதிர்க்கட்சிகள் மற்றும் சில ஊடகங்கள் மூலம் கட்டமைத்த பிம்பமெல்லாம் பொய், முழுப் பொய் அது அட்டையில் கட்டப்பட்ட பொய் கோட்டை என்பதை மோடி உடைத்து காட்டிவிட்டார்.
இப்போது ஐக்கிய அமீரகத்தை தொடர்ந்து கத்தாருக்கு சென்றிருக்கின்றார் மோடி. கவனியுங்கள், முன்பு ஈரானுக்கு ஜெய்சங்கரும், சவுதிக்கு ஸ்ம்ருதி இரானியும் சென்றார்கள் ஆனால் இப்போது மோடி நேரடியாக கத்தாருக்கே செல்கின்றார். ஏன் என்றால் விஷயம் இல்லாமல் இல்லை.
அரேபியாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நாடு அதிகாரம் செலுத்த முயலும், அவ்வகையில் எகிப்து, ஈராக், லிபியா, வரிசையில் கத்தார் பெரும் பிரயத்தனம் செய்கின்றது. சிறிய தீவு என்றாலும் தங்கள் அபரிமிதமான எரிவாயு வளத்தின் மூலம் தங்கள் கனவை அவர்கள் நிறைவேற்ற துடிக்கின்றார்கள்.
அவர்கள் கனவு பெரிது. கொட்டும் பெரும் பணமும் பெரிது. எடுக்கும் சவால் அதைவிடப் பெரிது. ஹமாஸின் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து இஸ்ரேலை சரிக்கு சரி பேசவைக்கும் அளவு தங்கள் செல்வாக்கை காட்டுகின்றார்கள். உலகக்கோப்பை கால்பந்து போட்டியினை பல்லாயிரம் கோடியில் நடத்தினார்கள். இன்னும் பெரும் பெரும் கனவுத் திட்டங்களை பிரமாண்டமாக வைத்திருக்கின்றார்கள்.
அரேபிய அரசியலில் பல குழப்பம் உண்டு. சவுதியினை துருக்கிக்கு பிடிக்காது. சவுதிக்கு கத்தாரை பிடிக்காது. ஈரானுக்கோ யாரையுமே பிடிக்காது. இங்கே எல்லோரையும் அரவணைத்து எல்லோருக்கும் பொதுவானவராக காட்டி தனக்கு தேவையான நலன்களை காத்துகொள்கின்றது, இந்தியா. அவ்வகையில் இப்போது கத்தார் ஒரு தவிர்க்க முடியா தேசம். அமெரிக்க ஆதரவும் அவர்களுக்கு உண்டு.
இதனால் அரேபிய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு கத்தாருக்கு மோடி செல்கின்றார். கத்தாரும் இந்தியா மிக பலமான நாடு என்பதை உணர்ந்து இந்தியாவுடன் உறவினை விரும்புகின்றது. அதனால் தான் இந்திய முன்னாள் கடற்படையினரை விடுவித்து நட்புகரம் நீட்டியது. அதை பற்றிக் கொள்கின்றது இந்தியா.
மிக மிக கவனிக்க வேண்டிய விஷயம் பாகிஸ்தான் என்றொரு இஸ்லாமிய தேசத்தை அங்கு யாருமே தேடவில்லை. அப்படி ஒரு நாடு இருப்பதையே மறந்து விட்டார்கள். இஸ்லாமிய சகோதரத்துவம் என்பது வேறு அரசியல் என்பது வேறு. அந்த அரசியலில் மிக சாதுர்யமாக காய் நகர்த்தி வெற்றிபெற்று கொண்டிருக்கின்றது, மோடி தலைமையிலான இந்தியா.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu