கடப்பாவில் களமிறங்கும் ராஜசேகர ரெட்டி மகள்..!

கடப்பாவில் களமிறங்கும் ராஜசேகர ரெட்டி மகள்..!
X

கடப்பா தொகுதி காங்., வேட்பாளர் ஒய்.எஸ்.ஷர்மிளா.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்எஸ் சர்மிளா காங்கிரஸ் கட்சியின் கடப்பா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடப்பா தொகுதி ஒய்எஸ் சர்மிளா குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியாகும். அவரது தந்தை, அண்ணான தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இந்த தொகுதியில் எம்பியாக இருந்த நிலையில் காங்கிரஸ் ஒய்எஸ் சர்மிளாவை வேட்பாளராக்கி உள்ள நிலையில் அவர் வெல்வாரா? காங்கிரஸின் கணக்கு என்ன? என்பது பற்றிய இங்கு பார்ப்போம்.

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். இந்நிலையில் தான் ஆந்திராவில் சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் மே மாதம் 13ம் தேதி ஒன்றாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 18 ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்க உள்ளது.

ஆந்திராவை பொறுத்த மட்டில் ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் களமிறங்க உள்ளது. அதேபோல் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி அமைத்து லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் களமிறங்கி உள்ளது. இதன்மூலம் ஆந்திராவின் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி நிலவ உள்ளது.

இந்நிலையில் தான் லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 8வது கட்ட புதிய வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் 17 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ஒடிசாவில் 8 தொகுதி, ஆந்திராவில் 5 தொகுதி, பீகாரில் 3 தொகுதி, மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

ஆந்திராவில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 5 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி ஆந்திர மாநிலம் கடப்பா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஒய்எஸ் சர்மிளா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஆவார்.

இவர் சமீபத்தில் தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இருப்பினும் உடனடியாக மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அவர் கடப்பா லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஒய்எஸ் சர்மிளா இடையே பிரச்சனை உள்ளது. இதனால் ஒய்எஸ் சர்மிளா புது கட்சி தொடங்கி தெலுங்கானா அரசியலில் ஆர்வம் காட்டினார்.

ஆனால் அவரால் அங்கு கட்சியை வளர்க்க முடியவில்லை. இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் தெலங்கானா சட்டசபை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலுக்கு முன்பாக ஒய்எஸ் சர்மிளா காங்கிரஸில் இணைந்தார். அதன்பிறகு அவர் ஆந்திரா மாநில காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

தற்போது அவர் ஆந்திர அரசியலில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் கடப்பா லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் கடப்பா தொகுதி எம்பியாக கடந்த 1989 முதல் ஒய் சர்மிளாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் இருந்து வருகின்றனர். இதனால் கடப்பா என்பது அவர்களின் பாரம்பரிய தொகுதியாக உள்ளது.

கடந்த 1989, 1991, 1996, 1998 ஆகிய 4 தேர்தல்களில் ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சியின் ஒய்எஸ் ராஜேசேகர ரெட்டி (ஜெகன் மோகன் ரெட்டி - ஒய்எஸ் சர்மிளாவின் தந்தை) எம்பியாக இருந்தார். அதன்பிறகு 1999, 2004 தேர்தலில் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் சகோதரர் ஒய்எஸ் விவேகானந்த ரெட்டி காங்கிரஸ் சார்பில் எம்பியாக இருந்தார். 2009ல் தற்போதைய முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸ் சார்பிலும், 2012ல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன்பிறகு 2014, 2019ல் ஒய்எஸ் சர்மிளாவின் உறவினரான ஒய்எஸ் அவினாஷ் ரெட்டி (ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஒய்எஸ் சர்மிளாவின் Cousin) ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் இந்த தொகுதியில் ஒய்எஸ் அவினாஷ் ரெட்டியை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக ஜெகன் மோகன் ரெட்டி களமிறக்கி உள்ளார். இந்நிலையில் தான் இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி ஒய்எஸ் சர்மிளாவை வேட்பாளராக நிறுத்தி உள்ளது.

தற்போது ஒய்எஸ் சர்மிளாவுக்கு கடப்பா தொகுதியில் செல்வாக்கு உள்ளது. மேலும் அவர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். இதனால் வரும் லோக்சபா தேர்தலில் ஒய்எஸ் சர்மிளா கடப்பா தொகுதியில் எளிதாக வெல்லலாம் என கணக்கிட்டு அவருக்கு அங்கு காங்கிரஸ் கட்சி சீட் வழங்கி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story