பஞ்சாப்பில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம் : அதிர்ச்சியில் மாநில தலைமை

பஞ்சாபில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள்.
பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆம் ஆத்மி வெற்றி பெற்றதில் இருந்தே காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் பாஜகவில் இணைந்தார்.
பஞ்சாப் அரசியலில் அந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியில் பாஜகவுக்கு திருப்புமுனையாக அந்த சம்பவம் பார்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாஜகவில் இணைந்த சுனில் ஜாக்கருடன் 4 மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் வீடியோ அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்புக்கு உள்ளானது. அந்த வீடியோவை பாஜக தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தனது ட்விட்டரில் பகிர்ந்து, பல காங்கிரஸ், சிரோமணி அகாலிதள தலைவர்கள் பாஜகவில் சேருவார்கள் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர்களான ராஜ்குமார் வெர்கா, பல்பீர் சித்து, குர்பிரீத் கங்கர், சுந்தர் ஷாம் அரோரா உள்ளிட்ட தலைவர்கள் நேற்று பஞ்சாப் மாநில பா.ஜ.க தலைவர் அஷ்வனி சர்மா, பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இவர்கள் 4 பேரும் கடந்த சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ்-ன் முக்கியத் தலைவர்கள் பாஜக-வில் இணைந்தது தொடர்பாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங் செய்தியாளர்களிடம், 'பாஜக தேவையற்றதை தனது மடியில் கட்டிக்கொண்டுள்ளது. அது எத்தகைய பரிசைக் கொடுக்கும் என்பதை அடுத்த தேர்தலில் அந்தக் கட்சி நிச்சயம் உணரும். இவர்களால்தான் காங்கிரஸ் அரசியல் தோல்வியை சந்தித்தது. என்னைப் பொறுத்தவரை அவர்களுக்கு இது தேவையற்ற சுமை அவ்வளவுதான்' எனக் கூறினார்.
காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள் பாஜக-வில் இணைந்திருப்பது, காங்கிரசுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu