அதிமுகவில் மீண்டும் குழப்பம் : செங்கோட்டையனை துாண்டுகிறார்களா?
கோப்பு படம்
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ‘இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி என ஒவ்வொருவரும் தனித்தனியாகச் செயல்படுவது தான் இந்தத் தோல்விக்குக் காரணம். எனவே, அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றிபெறலாம்’ என்ற பேச்சுகள் எழவே… சசிகலாவும் பன்னீரும் தனித்தனியாக அறிக்கையெல்லாம் விட்டுப் பார்த்தார்கள்.
ஆனால், யாரும் அவர்கள் பேச்சைக் கேட்டதாகத் தெரியவில்லை. மாறாக, பன்னீருடன் இருந்த ஜே.சி.டி.பிரபாகர், பெங்களூர் புகழேந்தி, கே.சி.பழனிசாமி ஆகியோர் ஒன்றிணைந்து புதிதாக, ‘அ.தி.மு.க ஒருங்கிணைப்புக் குழு’ என ஒன்றை உருவாக்க... சோகத்தின் உச்சிக்கே சென்று விட்டாராம் பன்னீர்.
மற்றொரு புறம்... சசிகலா தரப்பிலிருந்து டி.டி.வி.தினகரனுக்குத் தூதுவிட, அவரோ, ``அதெல்லாம் சித்தியால் முடியவே முடியாது. இப்போது போல அரசியல் விவகாரங்களிலிருந்து அவரை ஒதுங்கியே இருக்கச் சொல்லுங்கள்” என்று `பட்’டென பதில் சொல்லித் திருப்பி அனுப்பி விட்டாராம். ஆக, சசிகலா தரப்பும் அப்செட் என்கிறார்கள்.
தேர்தல் முடிந்த கையோடு மலர்க்கட்சியின் சீனியர்கள் பலரும் டெல்லியில் முகாமிட்டு, ``மத்திய அமைச்சரவையில் ஏதாவது இடம் கிடைக்குமா?” என முட்டி மோதிக்கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில், ‘மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும்’ என்பதற்காக மலர்க் கட்சியின் அந்த சர்ச்சைத் தலைவர் கும்பகோணத்திலுள்ள ஒரு கோயிலில், பதவி உயர்வு, அரசியலில் முன்னேற்றம் தரக்கூடிய யாகம் ஒன்றை நடத்தினாராம்.
ஆனாலும், அவர் நினைத்தது நடக்கவில்லை என்பதோடு பதவியேற்பு விழாவிலும் உரிய மரியாதை வழங்கப்படவில்லை. இதனால் கடும் அப்செட்டிலும் ஏமாற்றத்திலும் இருக்கிறாராம் அவர்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பேரன் திருமணம் விரைவில் நடக்கவிருக்கிறது. இதற்காக ஊர் ஊராக அலைந்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். `அட, பேரன்மீது அவ்வளவு பாசம்?' என்று நக்கலாக இந்த விஷயத்தைப் பற்றிப் பேசும் அதே கொங்குப் பகுதி இலைக் கட்சியினர், ``செங்கோட்டையன் தென்மாவட்டத்துக்குச் சென்ற போது, கட்சித் தலைமை மாற்றம் குறித்து அங்கிருப்பவர்கள் தூபம் போட்டனர். அதை மனதில் வைத்துத்தான் மற்ற பகுதி நிர்வாகிகளின் பல்ஸ் பார்க்கத் திட்டமிட்டிருந்தார். அதற்குத் தோதாக பேரனின் திருமண நிகழ்வு வரவே, சரியாகப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்” எனக் கிசுகிசுக்கிறார்கள்.
சமீபத்தில், டெல்டாவுக்குச் சென்ற செங்கோட்டையனை, பணிவானவரின் குழுவில் இருக்கும் ட்ரீட்மென்ட் புள்ளி சந்தித்தாகக் கூறப்படுகிறது. ``நாங்கள் தாய்க் கழகத்துக்கு வரத் தயார். அதுவும் உங்கள் தலைமையின்கீழ் என்றால், எங்களுக்கு டபுள் ஓ.கே” என அந்தப் புள்ளி மேலும் தூபம் போட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதற்கிடையில் சுதாரித்துக் கொண்ட இ.பி.எஸ்., தரப்பு, எடப்பாடியின் தலைமையை ஏற்றுக்கொள்வதாக பகிரங்கமாக அறிவித்தால், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பது பற்றி பரிசீலிக்கலாம் என தகவல்களை கசிய விட்டுள்ளதாக தெரியவருகிறது.
எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதாவால் பெரும் கட்சியாக வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவுக்கா இந்த நிலை..?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu