கோவையில் களம் இறங்கும் அண்ணாமலை..! உள்துறை அமைச்சராகும் வாய்ப்பு?
பா.ஜ., கூட்டுறவுப்பிரிவு மாநில செயலாளர் சிவக்குமரன்.
கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் வாய்ப்புகள் உள்ளதாக வெளியான கருத்து குறித்து பா.ஜ.க., கூட்டுறவுப்பிரிவு மாநில செயலாளர் சிவக்குமரன் கூறியதாவது:
வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் இதுவரை இல்லாத ஆதரவு பா.ஜ.க.,வுக்கு உருவாகி வருகிறது. மத்திய உளவுத்துறை கொடுத்த அறிக்கைகளும் பா.ஜ.க.,வுக்கு பெரும் நம்பிக்கையினை கொடுத்துள்ளன. தி.மு.க., பெரும் அழிவை சந்திக்கப்போகிறது என பிரதமர் பேசியதின் அடிப்படை இப்போது வரை பலருக்கு புரியவில்லை. மிகப்பெரிய வியூகத்தின் அடிப்படையில்தான் பிரதமர் அப்படியான கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார்.
சென்னை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர், தமிழகத்தில் ஆட்சியில் உள்ளவர்கள் துணையுடன் போதைப்பொருள் கடத்தல் நடந்துள்ளது என மிக கடுமையான அதிபயங்கரமான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். வாரிசு அரசியலால் பதவி பெற்ற ஒருவர் அமைச்சராகி மிகுந்த ஆணவத்துடன் செயல்படுவதாகவும் பிரதமர் பேசியதும், தமிழகத்தில் மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டு மக்களிடம் வழங்கப்படும் எனவும் பிரதமர் பேசியது, வரும் காலங்களில் தி.மு.க., மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்ற அர்த்தம் பொதிந்த பேச்சு.
தமிழகத்தில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தை சிலிண்டர் வெடிப்பு என மடைமாற்றி விட்டனர். என்.ஐ.ஏ., போலீசார் விசாரணைக்கு பல இடங்களில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. குறிப்பாக தமிழக போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளது. கஞ்சா, மது, இதர போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது. வெட்டுக்குத்து சம்பவங்களும், ரவுடியிசமும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. தவிர தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் மிரட்டப்பட்டு வருகின்றனர்.
ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, அடிதடிகளில் ஈடுபட்ட ஆளும் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினரை தி.மு.க., அரசு கண்டுகொள்ளவில்லை. இது பற்றிய முழு விவரங்களும் மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளன. இதனை சரி செய்ய தமிழகத்திற்கு கிடுக்குப்பிடி போட வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சரியான நபர் அண்ணாமலை தான் எனவும் முடிவுக்கு வந்துள்ளது.
இதனால் அண்ணாமலையை கோவை தொகுதியில் களம் இறக்குகிறது. நிச்சயம் அண்ணாமலை வெற்றி பெறுவார். வெற்றி பெற்றதும் மத்திய உள்துறை இணை அமைச்சர் பொறுப்பினை அவரிடம் வழங்கி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கினை சரி செய்தல், தேசத்துரோக செயல்களை கட்டுப்படுத்துதல், போதைப்பொருள் நடமாட்டத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வருதல் உட்பட பல பொறுப்புகளை அவரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால்தான் பிரதமர் மோடி தமிழகத்தில் இன்னும் பல மேடைகளில் பிரசாரம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த முறை தேர்தல் களத்தை அவ்வளவு எளிதில் பா.ஜ.க., விட்டுக்கொடுக்காது எனவும் அக்கட்சியினர் தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu