கவலைப்படாத பா.ஜ.க., கூட்டணி..! சந்தோஷப்படாத இண்டி கூட்டணி..!

கவலைப்படாத பா.ஜ.க., கூட்டணி..!  சந்தோஷப்படாத இண்டி கூட்டணி..!

டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்.,

பாஜகவினர் வருத்தப்படும் அளவுக்கும், இண்டி கூட்டணி மகிழ்ச்சியடையும் அளவுக்கும் தேர்தல் முடிவுகளில் எதுவும் நடந்து விடவில்லை

தேனி மாவட்ட பா.ஜ.க., மருத்துவப்பிரிவு டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்., கூறியதாவது:

எப்போதுமே உண்மைக்கும் நேர்மைக்கும் சோதனைகள் அதிகம் வரத்தான் செய்யும். நாடு முழுவதும் உள்ள மக்கள் இலவசங்களை இன்னும் நம்புகின்றனர். இதனால் இலவசங்கள் தருவோம் என வாக்குறுதி கொடுத்த பலர் வென்றுள்ளனர். மக்களுக்கு நல்லது செய்த பா.ஜ.க.,வினர் தனிப் பெரும்பான்மை பெறவில்லை. ஆனால் தனிப்பெரும் கட்சியாக பா.ஜ., உருவெடுத்துள்ளது.

பாரத தேசம் இவ்வளவு மக்கள் தொகைகளை வைத்துக் கொண்டு 10 வருடங்களில் பெற்ற வளர்ச்சியை எந்த நாடும் பெறவில்லை. மோடி பிரதமர் வேட்பாளராக மீண்டும் போட்டியிடுவது அன்னிய சக்திகளுக்கு பிடிக்கவில்லை. வெளிநாட்டு எதிரிகளும் பாரத தேசத்தின் தேர்தலில் விளையாடி இருப்பது தெளிவாகின்றது.

பாரதம் எங்கே வல்லரசாகி விடுமோ என்ற பயத்தில் வெளிநாட்டு மருந்து மாஃபியா, ஆயுத மாஃபியா, மதமாற்ற மாபியா கூட்டங்கள் கச்சிதமாக பல சதிகள் செய்துள்ளனர். அதீத தேசப்பற்றுள்ள மக்களால் மட்டுமே இந்த சதிகளை உணர முடியும். பாஜக தனிப் பெரும்பான்மை பெற்று விடக்கூடாது என்பதில் உள்நாட்டில் அவரை பிடிக்காத சில சக்திகளும் வெளிநாட்டு சக்தியும் நன்றாகவே விளையாடி இருக்கின்றன.

மேலும் எதிர்கட்சிகள் அறிவித்த இலவசங்களில் மக்கள் சிறிது தடுமாறி வாக்களித்தது தான் உச்சகட்ட வேதனை. அவர்களுக்கு வாக்களித்த மக்களே வருங்காலத்தில் இவர்களுக்கு வாக்களித்தது தவறென யோசிப்பார்கள். இருப்பினும் என்.டி.ஏ., கூட்டணிக்கு மிகப்பெரும்பாலானோர் வாக்களித்துள்ளனர். இப்படி நம்பிக்கை வைத்து மோடி மீண்டும் பிரதமராக வாக்களித்த மக்களுக்கு நிச்சயம் நன்றியை தெரிவித்தே ஆக வேண்டும்.

NDA கூட்டணியில் பாஜகவிற்கு கடந்த இரண்டு முறை தனிப் பெரும்பான்மை இருந்தது. மோதி அரசு அதனால் சாதித்தது நிறைய.. தேசப்பற்று கொண்ட மக்களால் இதை நன்கு உணர முடியும். இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. மக்கள் தொகையில் முதன்மை நாடாக இருக்கிறது. இதை தனது வியாபாரக் கூடமாக வைத்திருப்பது தான் அன்னிய வெளிநாட்டு சக்திகளுக்கு லாபகரமாக இருக்கும்.

அதற்கு இந்திய மோடி அரசு துணை போகாது என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். ஆக சத்தியத்திற்கும் தர்மத்திற்கும் மீண்டும் சத்திய சோதனைகள் ஆரம்பமாகி விட்டது என்பதே உண்மை. பாஜக தனிப் பெரும்பான்மை பெறாவிட்டாலும், சத்தியத்தையும், தர்மத்தையும், மக்கள் நலனையும் பாதுகாக்க போராடும். கடவுள் நல்லவர்களை கைவிடுவதில்லை. இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி மோடி அரசு மூன்றாவது முறையாக தனிக்கட்சியாக 240 இடங்களை பெற்றுள்ளது என்பது இதற்கு சான்று. தேசப்பற்றுள்ள மக்கள் இந்தியாவில் பாஜகவிற்கு ஆதரவாக பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதே மோடியின் ஊழலற்ற அரசிற்கு கிடைத்த வெகுமதிகள்.

தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என்ற ஏகபோகமாக கூறி வந்தனர். இன்று தாமரை தவிர்க்க முடியாத சக்தியாகவே மாறி விட்டது. தமிழகத்தின் பெரிய கட்சிகளுள் ஒன்றாக அண்ணாமலை தலைமையில் பாஜக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்துள்ளது. இலவசங்களுக்கு மதிமயங்காத தேசப்பற்றுள்ள மக்கள் பாஜகவை ஆதரிக்கிறார்கள். இந்த தேர்தல் மூலம் 2026ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக எதிர்க்கட்சியாக அமர்வதற்கு வாய்ப்புள்ளதை காட்டுகிறது.

காலம் கொடுத்த கம்பீரமிக்க தலைவன் மோடியும் அவரது சீடர் அண்ணாமலையும் இருக்கும் வரை பா.ஜ.க., தொண்டர்கள் சோர்வடைய தேவையில்லை. வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தேவையான திட்டங்களை வகுத்து தலைவர் அண்ணாமலைக்கு கை கொடுத்து அரணாக நிற்போம்.

இது தோல்வி இல்லை. சின்ன சறுக்கல் தான் இது. அதை வெற்றி படிக்கட்டுகளாக மாற்ற இனி காவிகள் தீவிரமாக கட்சியை வளர்க்க உழைப்போம். பாஜகவை நோட்டா கட்சி என்று கிண்டல் செய்த நிலை மாறி, இன்று பா.ஜ.க., தவிர்க்க முடியாத அரசியல் சக்தி என்ற நிலை உருவாகி விட்டது. இதற்காக இடைவிடாமல் உழைத்த அண்ணாமலைக்கு தொடர்ந்து கை கொடுப்போம். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story