மக்களவைத் தேர்தல்: தே.மு.தி.க. யாருடன் கூட்டணி?

மக்களவைத் தேர்தல்:  தே.மு.தி.க. யாருடன் கூட்டணி?
X

மோடி மற்றும் விஜயகாந்த் - கோப்புப்படம் 

மக்களவைத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்கப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

மக்களவை தேர்தலுக்கான தேதியே இன்னமும் முடிவாகவில்லை. ஆனால், தேர்தல் ஆணையம் முதல் கட்சிகள் வரை அனைவருமே தங்களது தயாரிப்புப் பணிகளில் தீவிரமாகிவிட்டனர். குறிப்பாக, தமிழகத்தில், அனைத்துக்கட்சிகளுமே மும்முரமாக தொகுதி உடன்பாடு, தேர்தல் அறிக்கை என அனைத்திலும் களமிறங்கிவிட்டனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான அணி, அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான அணி, பா.ஜ.க. தலைமையிலான அணி, நாம் தமிழர் என 4 முனைப் போட்டியாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தி.மு.க. அணியைப் பொறுத்தவரை காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள், வி.சி.க., ஐ.யூ.எம்.எல். உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் என கடந்த தேர்தலில் இருந்த கூட்டணியே தற்போதும் தொடரலாம். ஆனால், தொகுதி உடன்பாடு ஏற்படும்போதுதான், பிரச்சினைகள் வெடித்து விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

இதற்காக ஸ்பெயினில் இருந்து திரும்பியவுடன், சட்டசபைக் கூட்டம், அதைத் தொடர்ந்து அதிரடியாக தேர்தல் பணிகளைத் தொடங்கும் அதிரடி திட்டமொன்றை திமுக தலைவர் ஸ்டாலின் வைத்துள்ளதாக திமுக தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மறுபக்கத்தில், அ.இ.அ.தி.மு.க.வை பொறுத்தமட்டில், பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். மற்ற கட்சிகளுடன் பேச்சு மறைமுகமாக நடைபெறுகிறது. ஆனால், இதுவரை உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. குறிப்பாக, பாமகவுடன் உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கலாம். கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக-வுடனும் பேசி வருகின்றனர். ஆனால், தேமுதிகவோ பாஜக-வுடன் கூட்டணி சேர்வதில்தான் இருக்கிறது என்பதை அக்கட்சியின் தலைமையக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உறுதியான முடிவை எடுக்க தேமுதிக திட்டமிட்டுள்ளது. அக்கட்சியின் பெயர் வெளியிட விரும்பாத சில தலைவர்கள் நமக்களித்த தகவலின்படி, 5 மக்களவை தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை இடம் ஆகியவற்றை தரும் கட்சியுடன்தான் கூட்டணி என்பதில் பிரேமலதா உறுதியாக இருக்கிறாராம். ஏனெனில், கேப்டனின் அனுதாப அலை, கூட்டணிக்குப் பெரும்பலமாக இருக்கும் என நம்புகிறாராம்.

இதற்கிடையே, அக் கட்சியின் வேட்பாளராக, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனை இறக்கலாம் என்ற தகவல்கள் கசிந்தாலும், தற்போது வேண்டாம், சட்டப்பேரவை தேர்தலின் போது பார்த்துக் கொள்ளலாம் என பிரேமலதா கூறிவிட்டாராம். தற்போதைய நிலையின்படி, சுதீஷ், பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் ஆகிய மூவரும் நிச்சயம் போட்டியிடுவார்கள் என்றும் அதில், கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டியிட ஒப்புக்கொள்ளும் கட்சியுடன்தான் கூட்டணி என்பதிலும் தெளிவாக இருக்கிறதாம் தேமுதிக.

அதேபோல், மாநிலங்களவை இடத்தைப் பொறுத்தமட்டில், அந்த இடத்தில் பிரேமலதாவுக்கு கொடுத்து, அவரை எம்-பி-யாக்க வேண்டும் என அக் கட்சியின் பெரும்பாலோர் விரும்புவதாகவும் பேச்சு அடிபடுகிறது. கூட்டணிக்கு தலைமையேற்கும் கட்சி, அதிக அழுத்தம் கொடுத்தால், ஒரு லோக்சபா தொகுதியைக் குறைத்துக் கொண்டு, 4+1 ஃபார்முலாவுக்கு ஒப்புக் கொள்ளலாம் என தே.மு.தி.க.வினர் தெரிவித்தனர்.

அ.இ.அ.தி.மு.க., பா.ஜ.க. என இரு கட்சிகளுமே தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைக்க முயற்சித்தாலும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதற்கே அதிக வாய்ப்புகள் என கூறப்படுகிறது. குறிப்பாக, விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவித்தது முதல் பலமுறை கேப்டனுக்கு பிரதமர் மோடியே புகழாஞ்சலி செலுத்தியது வரை பல உதாரணங்கள் முன் வருகின்றன. இவற்றை வைத்து பார்க்கும்போது, பாஜக-வுடன் கூட்டணி வைப்பதே, தேமுதிக-வின் முதல் விருப்பமாக இருக்கும். ஆனால், அஇஅதிமுக-வும் ஒரு பக்கத்தில் பேச்சு நடத்தி வருகிறது.

பாஜக-வை பொறுத்தமட்டில், தேமுதிக-வை இழுப்பதிலும், அதுவும் மறைந்த கேப்டனின் ரசிகர்களின் வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் வாங்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால், கூட்டணி கிட்டத்தட்ட உறுதிதான். 5 அல்லது 4 மக்களவை தொகுதிகள் கொடுப்பதில் பெரிய சிக்கல், பாஜக-வுக்கு இருக்காது. ஆனால், அந்த 1 மாநிலங்களவை இடம்தான் இழுபறியாக இருக்கலாம். ஆனால், ராஜ்யசபா இடத்தில் தேமுதிக-சமரசம் செய்துக்கொள்ளாது என தெரிகிறது.

தற்போதைக்கு மறைமுகமாக நடைபெறும் பேச்சுவார்த்தைகள், இன்னும் ஒரு சிலதினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளிவரும் எனத் தெரிகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!