மதுரைத் தளபதிகள் தடுக்கிறார்கள் : புலம்பும் அழகிரி ஆதரவாளர்கள்..!

மதுரைத் தளபதிகள் தடுக்கிறார்கள் :  புலம்பும் அழகிரி ஆதரவாளர்கள்..!
X

மு.க.அழகிரி (கோப்பு படம்)

அழகிரி அண்ணனோடு முதல்வரும், அவங்க குடும்பத்தினரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க.

‘ பத்து வருடங்களுக்கு முன்பு நீக்கிய எங்களைத் திரும்பக் கட்சியில சேர்த்துக்க மாட்டேங்கிறாங்க...” என்று புலம்புகிறார்கள் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள்!

2014-ம் ஆண்டு, தன்னுடைய ஆதரவாளர்களுக்குப் பதவிகள் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமைக்கு எதிராகப் பேசியதால், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தி.மு.க-வின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரியையும், அவருடைய ஆதரவாளர்களையும் கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கியது தி.மு.க தலைமை.

அதற்கு முன்பும் இதேபோன்ற புகார்களால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், சில ஆண்டுகளிலேயே மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். ஆனால், 2014-ல் கட்சியைவிட்டு நீக்கப்பட்ட அழகிரி ஆதரவாளர்கள், ஒட்டுமொத்தமாக கட்டம் கட்டப்படுவதாகப் புலம்பல்கள் கேட்கின்றன.

இது தொடர்பாக நம்மிடம் பேசியவர்கள், “கலைஞர் உயிரோடு இருக்கும்போது கட்சியைவிட்டு நீக்கப்பட்டோம். இன்றுவரை மீண்டும் எங்களைக் கட்சியில் சேர்க்கவில்லை. 2021-ல் தி.மு.க ஆட்சிக்கு வரும் வரை அழகிரி அண்ணன் எடுத்த முயற்சிகளையும் கட்சித் தலைமை கண்டுகொள்ளவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அழகிரி அண்ணனின் குடும்பத்தினருடன், முதல்வர் குடும்பம் மீண்டும் நெருக்கம் காட்டியது.

மதுரைக்கு வந்த உதயநிதி ஸ்டாலின், அழகிரி அண்ணனின் வீட்டுக்கும் வந்தார். கோபாலபுர இல்ல நிகழ்ச்சிகளில் அண்ணனும் கலந்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு துரை தயாநிதிக்குத் திடீரென உடல்நலம் மோசமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் நிலைகுலைந்த அழகிரி அண்ணனுக்கு ஆறுதலாக இருந்து வருவது முதல்வரும், அவரின் குடும்பமும் தான். பழைய கசப்புகளை மறந்து எல்லோரும் சகஜமாகி விட்ட நிலையில், அண்ணன் அழகிரியின் ஆதரவாளர்களான எங்களை மட்டும் மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்குச் சிலர் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

கழகத் தளபதி ஸ்டாலினே எங்களை ஏற்றுக்கொண்டாலும், மதுரை மாநகர் செயலாளரான கோ.தளபதி உள்ளிட்டோர் அதைத் தடுக்கிறார்கள்” என்றனர் ஆதங்கமாக.

இது குறித்து நம்மிடம் பேசிய அழகிரியின் முக்கிய ஆதரவாளரும், மதுரை மாநகராட்சி முன்னாள் மண்டலத் தலைவருமான இசக்கிமுத்து, “அண்ணனும் தம்பியுமே ஒன்றாகி விட்டார்கள். ஆனால், கட்சிப் பணியாற்ற, பல மாவட்டங்களிலுள்ள அண்ணனின் ஆதரவாளர்களான எங்களைக் கட்சியில் மீண்டும் இணைத்துக்கொள்ள முதல்வர் ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரே முடிவெடுத்தாலும் மதுரை மாவட்டப் பொறுப்பிலுள்ள சிலர் தடுக்கிறார்கள்.

இந்தப் பத்தாண்டுக்கால இடைவெளியில் மூன்று நாடாளுமன்றத் தேர்தல்கள், இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள், ஓர் உள்ளாட்சித் தேர்தல் ஆகியவை நடந்து முடிந்து விட்டன. அதிகாரபூர்வமாகக் கட்சியில் இல்லாவிட்டாலும் தி.மு.க-வுக்கே நாங்கள் வேலை செய்கிறோம்.

பா.ஜ.க உள்ளிட்ட பிற கட்சி நிர்வாகிகள் மதுரைக்கு வந்து தலைவர் குடும்பத்தையும், ஆட்சியையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அதற்கு இங்கிருக்கும் தி.மு.க அமைச்சர்களோ, மாவட்டச் செயலாளர்களோ சரியான பதிலடி கொடுப்பதில்லை. அந்த அளவுக்கு பயப்படுகிறார்கள். அழகிரி அண்ணன் பொறுப்பில் இருந்திருந்தால் இப்படி யாராவது இங்கு பேச முடியுமா... இதில் கொடுமை என்னவென்றால், மதுரை மட்டுமன்றி தென்மாவட்டத்திலுள்ள பல மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும் அண்ணனால் அடையாளம் காட்டப்பட்டவர்கள். ஆனால், அந்த நன்றியை மறந்து, எங்களைக் கட்சியில் இணைக்க முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு வாக்கு சதவிகிதம் குறைந்திருக்கும் நிலையில் தீவிரக் களப்பணியாளர்களான எங்களையும் இணைத்துச் செயல்பட்டால் தான், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 200+ என்ற முதல்வரின் இலக்கை எட்ட முடியும். மாவட்ட நிர்வாகிகளின் முட்டுக்கட்டைகளைப் பற்றிக் கவலைப்படாமல் தலைமை சீக்கிரம் நல்ல முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

மதுரை தி.மு.க-வின் உள்விவகாரம் அறிந்த புள்ளிகள் சிலர், “மகனைக் குறித்த கவலையில் ஆழ்ந்திருக்கும் மு.க.அழகிரி, இனி ஆக்டிவ்வான அரசியலுக்கு வர மாட்டார். ஆனால், தன்னை நம்பியிருக்கும் ஆதரவாளர்களுக்கு ஒரு வழியைக் காட்ட விரும்புகிறார். அதற்கு மதுரை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் தான் தடையாக நிற்கிறார்கள். எங்கே தங்களது பதவிக்கும் அதிகாரத்துக்கும் ஆபத்து வந்து விடுமோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள்” என்கின்றனர்.

இதையடுத்து “அழகிரியின் ஆதரவாளர்களைக் கட்சியில் இணைக்க முட்டுக்கட்டை போடுகிறீர்களா?” என்று மதுரை மாநகரச் செயலாளர் கோ.தளபதியிடமே கேட்டோம். “மாற்றுக் கட்சிகளிலிருந்து வருகிறவர்களையெல்லாம் தி.மு.க-வில் சேர்த்துக் கொண்டிருக்கும் போது, எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீண்டும் இணைக்கப்படுவதற்கு நான் தடையாக இருப்பேனா... நானும் அவர்களைக் கட்சியில் இணைக்கவே ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன். என்மீது குற்றம்சாட்டுவது தவறு. தி.மு.க-வில் அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று தான் நானும் விரும்புகிறேன்...” என்றார்.

அமைச்சர் மூர்த்தி தரப்பில் பேசியவர்களோ, “தலைமைக் கழகம் நீக்கிய ஆட்களை மாவட்டக் கழகம் எப்படிச் சேர்க்க முடியும்... தலைமை நல்ல முடிவெடுத்தால், அழகிரியின் ஆதரவாளர்களை அரவணைக்க நாங்களும் தயார்தான்” என்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!