டெல்லியுடன் நேரடி மோதலுக்கு தயாரான எடப்பாடி பழனிசாமி..!
முன்னாள் முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி
லோக்சபா தேர்தல் நெருங்கிவரும் இந்நிலையில், புதுச்சேரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தை அதிமுக அறிவித்திருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் வர பெரும்பாடு பட்டது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக கட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கையில், நெருங்கும் லோக்சபா தேர்தல் பெரும் சோதனையாக மாறியிருக்கிறது.
பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் சந்திக்கும் முதல் லோக்சபா தேர்தல் இது என்பதால் எப்படியாவது வெற்றியை சாத்தியப்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயன்று வருகிறார்.
எனவே அதிமுகவுக்கான வாக்கு வங்கிகளை தொடர்ந்து பலப்படுத்தி வருகிறார். பாஜகவிலிருந்து வெளியேறியதால், பாஜக அதிருப்தி வாக்குகள்+ திமுக அதிருப்தி வாக்குகள் தனக்கு சேரும் என்று மனக் கணக்கை போட்டு வைத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆனால், பாஜகவை வெளிப்படையாக எதிர்த்து இதுவரை எந்த போராட்டங்களையும் அதிமுக நடத்தவில்லை. பட்ஜெட், ராமர் கோயில், ஆளுநர் தலையீடு போன்ற விவகாரங்களுக்கு சொல்லிக்கொள்ளும் அளவில் பலமான விமர்சனங்கள் அதிமுக தரப்பிலிருந்து எழவில்லை. இப்படியே போனால் வாக்கு வங்கிகளை ஒருங்கிணைக்க முடியாது என்பதையும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
எனவே உஷாரான அதிமுக, தற்போது மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை அறிவித்திருக்கிறது. இது குறித்து எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், "புதுச்சேரி மாநிலத்திற்கு இதுநாள் வரையிலும் மாநில அந்தஸ்து வழங்கவில்லை. மத்திய நிதிக் குழுவில் புதுச்சேரி மாநிலத்தை இணைக்கவில்லை.
மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அதேபோல், ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் புதுச்சேரிக்கென உரிய இட ஒதுக்கீடு வழங்காதது எனப் புதுச்சேரி மக்களுக்கு மத்திய பாஜக அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது.
புதுச்சேரி மாநில மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு அனைத்துத் திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றித் தர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக புதுச்சேரி மாநிலத்தின் சார்பில், வரும் 10ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தினை விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் தலைமையேற்று நடத்துவார்கள்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசை எதிர்த்து அ.தி.மு.க., போராட்டம் அறிவித்திருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu