தீவிர அரசியலில் களமிறங்கும் விஜய்? பனையூர் பங்களாவில் ரகசிய ஆலோசனை

தீவிர அரசியலில் களமிறங்கும் விஜய்? பனையூர் பங்களாவில் ரகசிய ஆலோசனை
X

நடிகர் விஜய்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, பனையூர் பங்களாவில், மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் திரைத்துறைக்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து சாதித்தவர்களும் உண்டு; சறுக்கியவர்களும் உண்டு. அரசியலில் குதிக்கும் நப்பாசையில், சினிமாவில் வீர வசனம் பேசும் நடிகர்களில் விஜய் ஒருவர். அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக, விஜய் மக்கள் இயக்கத்தை தொடங்கி, அவர் நடத்தி வருகிறார்.

தமிழகத்தில், கடந்தாண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம், சத்தமில்லாமல் களமிறங்கியது. கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என, மொத்தம் 169 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டு, அதில் 115 பேர் வெற்றி பெற்றது. விஜய் மக்கள் மன்றத்தில் இந்த வெற்றி, முன்னணி அரசியல் கட்சிகளையே சற்று திகைக்க வைத்தது.


இச்சூழலில், தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய்யின் மக்கள் இயக்கம் களமிறங்க உள்ளது. முந்தைய தேர்தலில் கிடைத்த வெற்றி தந்த தெம்பால், இந்த தேர்தலிலும் களமிறங்க, விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பச்சை கொடி காட்டியுள்ளார். தேர்தலில் போட்டியிடவும், விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியையும், விஜய்யின் படங்களை பயன்படுத்தவும் அனுமதி தரப்பட்டுள்ளது.

மறுபுறம், நடிகர் விஜய் தனது மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை பனையூர் பங்களாவில் நடைபெறும் இந்த ரகசிய ஆலோசனையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோர் விவரம், அவர்களின் பின்னணியை விஜய் கேட்டறிந்து வருகிறாராம்.


அடுத்து வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் அரசியலில் களமிறங்க வேண்டும்; அதற்கு முன்பாக மக்களின் நாடித்துடிப்பை அறிய, உள்ளாட்சித் தேர்தல் வசதியாக இருக்கும் என்று நம்பும் விஜய், அதற்கு முன்னோட்டமாகவே ரசிகர் மன்றத்தினரை களமிறங்குவதாக கூறப்படுகிறது. இதில் கிடைக்கும் முடிவுகளுக்கேற்க, அவரது காய் நகர்த்தல்கள் இருக்கும்.

கடந்த முறை தற்செயலாக களமிறங்கி வெற்றி பெற்ற விஜய் ரசிகர்கள், இம்முறை வியூகம் வகுத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க போகின்றனர். இது வெற்றி கிடைத்தால், நிச்சயம் அவர்களுக்கு கொண்டாட்டம் தான்; தோல்வியைச் சந்தித்தா, அது அவர்களின் அரசியல் எதிரிகளுக்கு உற்சாகம் தருவதாக இருக்கும். எனவே, விஜய்யின் அரசியல் ஆசையை தீர்மானிக்கும் சக்தியாக, இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இருக்கும் என்றால் அது மிகையல்ல.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil