நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?

நடுங்கும் கட்சி நிர்வாகிகள் :  திமுகவில் என்ன நடக்கும்?
X

திராவிட முன்னேற்ற கழகம் (கோப்பு படம்)

“வருகிற ஜூன் 4-ம் தேதி என்பது, ஒவ்வொரு வருடமும் வந்து போகிற சாதாரண ஜூன் 4 அல்ல. `

இந்தியா’ எனும் பெரிய தேசத்தின் கோடிக்கணக்கான மக்கள் மனங்களின் விருப்பம் வெளிப்படவிருக்கும் நாள். அடுத்த ஐந்தாண்டுகளின் அதிகாரம் யாருக்கு எனத் தீர்மானமாகும் நாள். இமயம் முதல் குமரி வரை ஒட்டுமொத்த நாடும் காத்திருக்கிறது அந்த நாளுக்காக. நாள்கள் நெருங்க நெருங்க, தமிழகத்தின் அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் பல்ஸ் எகிறத் தொடங்கியிருக்கிறது.

“குறிப்பாக, தமிழகத்தின் முக்கிய மூன்று கட்சிகளிலும் தேர்தல் ரிசல்ட் வெளியானதும், பெரிய புயல் வீசக் காத்திருக்கிறது. அந்தக் காற்றில் பலரின் நாற்காலிகள் பறக்கப்போகின்றன. ரிசல்ட்டில் எங்கேயெல்லாம் வாக்கு சதவிகிதம் குறைகிறதோ, அந்தத் தொகுதிகளுக்குப் பொறுப்பான அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் காத்திருக்கிறது அறிவாலயம்.

அதேநேரத்தில், அ.தி.மு.க-வுக்குள்ளும் ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கிறார்கள் அந்தக் கட்சியின் சீனியர் புள்ளிகள். எதிர்பார்த்த அளவு வாக்கு சதவிகிதத்தையும் தொகுதிகளையும் அ.தி.மு.க பெறாவிட்டால், அதிரடியான பல பிரச்னைகள் வெடிக்கலாம்.

பா.ஜ.க-வுக்குள் பசைப் பட்டுவாடாவில் தொடங்கி, செயல்படாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது வரை விசாரணை நடக்கிறது. கூட்டணிக்குள்ளும் கசப்புகள் எழத் தொடங்கியிருக்கின்றன. ரிசல்ட்டுக்குப் பின்னர் கமலாலயத்திலும் பல கலகங்கள் வெடிக்கும்” என்கிறார்கள் தமிழக அரசியல் புள்ளிகள். என்னதான் நடக்கிறது மூன்று அரசியல் கட்சிகளுக்குள்ளும்... என்னென்ன பிரச்னைகள் வெடிக்கக் காத்திருக்கின்றன..?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “ஆயிரம் பிரச்னைகள் வரலாம். அதையெல்லாம் சமாளிச்சுத்தான் ஆகணும். உங்கள் பொறுப்பிலிருக்கும் தொகுதிகளின் வெற்றிக்கு நீங்கள் தான் பொறுப்பு. தவறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” எனக் கடுமையாகவே எச்சரிக்கை விடுத்தார்.

“ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்” என அமைச்சர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் ‘டார்கெட்’டும் நிர்ணயிக்கப்பட்டது. அந்த டார்கெட்டைச் சிலர் பூர்த்தி செய்யவில்லை என்பது தான், தி.மு.க தலைமையை ரொம்பவே கொதிக்கச் செய்திருக்கிறது.

நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர்கள் சிலர், “தேர்தல் சமயத்தில், ‘இங்கேயெல்லாம் பிரச்னைகள் இருக்கின்றன. இவர்களெல்லாம் சரியாகச் செயல்படவில்லை’ எனச் சில அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, தொடர்ந்து புகார்கள் தலைமைக்கு வந்து கொண்டிருந்தன. தேர்தல் முடிந்தவுடன், யாரெல்லாம் வேலை பார்க்கவில்லை, யாரெல்லாம் எதிர்க் கட்சியினரோடு கூட்டுவைத்துக் கொண்டு உள்ளடி வேலை பார்த்தார்கள், யாரெல்லாம் எந்தச் செலவுமே செய்யவில்லை எனத் தனித்தனியாக விவரங்களைச் சேகரிக்கச் சொல்லிவிட்டது தலைமை.

உளவுத்துறையும், கட்சிக்காகத் தேர்தல் பணியாற்றும் ‘பென்’ நிறுவனமும் தனித்தனியாக ரிப்போர்ட்டுகளைத் திரட்டின. முதற்கட்டமாக அவர்கள் அளித்திருக்கும் ரிப்போர்ட்டில், ‘ஓட்டு சதவிகிதம் சில தொகுதிகளில் குறையும். ஒருசில தொகுதிகளில், வாக்கு வித்தியாசம் ஒரு லட்சம் வாக்குகளுக்குக் குறைவாக இருக்கலாம்’ எனச் சொல்லியிருக்கிறார்கள். அதில், தலைமை சூடாகிவிட்டது.

பல தொகுதிகளில் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் செயல்படாமல் சுணக்கமாக இருந்திருக்கிறார்கள். கொங்கு ஏரியா மாவட்டச் செயலாளர் ஒருவர், தலைமையிலிருந்து கொடுத்தனுப்பிய ஸ்வீட் பாக்ஸில், நான்கை அமுக்கிக் கொண்டு விட்டார். விஷயத்தைக் கேள்விப்பட்டு, தொகுதிக்குப் பொறுப்பான அமைச்சர் கண்டித்தும் கூட, ‘நானெல்லாம் அப்படி செய்வேனாண்ணே... என் பதவியைப் பறிப்பதற்குச் சில பேர் கட்டுக்கதையைக் கட்டிவிடுறாங்க...’ எனச் சொல்லிவிட்டார். இரண்டு சீனியர் அமைச்சர்கள் முழுதாகத் தேர்தல் வேலையே பார்க்கவில்லை. தலைமையிலிருந்து ஒரு குழு, அவர்களுக்குப் பொறுப்பான தொகுதியில் முகாமிட்டு எச்சரிக்கை செய்த போதும் கூட, அலட்சியமாக இருந்து விட்டனர்.

அந்தப் புகார்களெல்லாம் இப்போது தான் விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஜூன் 4-ம் தேதி தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகு அதிரடி ஆக்ஷன் அரங்கேறத்தான் போகிறது. எந்தப் பகுதியில் வாக்கு குறைவாக இருக்கிறதோ, அந்தப் பகுதி நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக மாற்றப்படவிருக்கிறார்கள்.

அதேசமயத்தில், மண்டலவாரியாக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி வருகிறார் அமைச்சரும், இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின். தேர்தலில் செயல்படாத நிர்வாகிகளின் பட்டியல் எடுக்கப்பட்டு, அவர்களிடம் விளக்கமும் கேட்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்ல, மாவட்டச் செயலாளர்கள் மாற்றமும், மாவட்டப் பிரிப்பு தொடர்பான விவாதமும் கட்சிக்குள் சூடாகியிருக்கின்றன. சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர் பாபுவின் கட்டுப்பாட்டில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளும், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் கட்டுப்பாட்டில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளும் இருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்னர் அவர்களுடைய மாவட்டங்களைப் பிரிக்கத் தலைமை தயாரான போது, அவர்கள் இருவருமே தலைமையிடம் முட்டி மோதித் தடுத்து விட்டனர். ஜூன் 4-ம் தேதி ரிசல்ட்டில், தலைமை எதிர்பார்த்த அளவுக்கு வாக்கு வித்தியாசத்தையும், வாக்குகளையும் அவர்கள் பெற்றுத் தரவில்லையென்றால், அவர்களின் மாவட்டம் பிரிக்கப்படப் போவது உறுதி. அதற்கான ஆலோசனைகள் தடதடக்கின்றன.

கோவை, நெல்லை, ராமநாதபுரம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள்மீது தலைமைக்குத் திருப்தியில்லை. அவர்களுக்குப் பொறுப்பான தொகுதிகளில் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லையென்றால், மாற்றங்கள் நிச்சயம். ‘கட்சிரீதியிலும் ஆட்சிரீதியிலும் முழுவதுமாகவே மாற்றியமைக்க வேண்டும்’ என ஒருசிலரும், ‘சிக்கல் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கு மட்டும் மாற்றத்தைச் செய்தால் போதும்’ என வேறு சிலரும் இரண்டு வகையான ஆலோசனைகளைத் தலைமைக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

அமைதியாகக் கேட்டுக்கொண்ட தலைமை, தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறது. ரிசல்ட்டுக்குப் பிறகு, அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு, உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்த விருக்கிறது. அந்தக் குழுவின் முடிவுகள் அறிவாலயத்துக்குள் பல மாற்றங்களைக் கொண்டுவரும்” என்றனர் விரிவாக.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!