நாடகமாடுகிறது தி.மு.க : அண்ணாமலை காட்டம்..!

நாடகமாடுகிறது தி.மு.க : அண்ணாமலை காட்டம்..!
X

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை (கோப்பு படம்)

பா.ஜ.க.,வில் தான் உண்மையான சமூக நீதி நிலவுகிறது என பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை பேசினார்.

திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், தாமரை சின்னத்தில் போட்டியிடும் பாஜ மாநிலப் பொதுச் செயலாளர் பொன் பாலாஜியை ஆதரித்து நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, பெரும் திரளெனக் கூடியிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது, ‘தமிழகம் மாபெரும் அரசியல் மாற்றத்திற்குத் தயாராகிவிட்டது என்பதை வெளிப்படுத்தினர்.

மத்தியில், மீண்டும் நமது பாரதப் பிரதமர் மோடிதான் பொறுப்பேற்கப் போகிறார் என்ற முடிவை நன்கு தெரிந்த தேர்தல் இது. இது நாட்டிற்கான தேர்தல். நாட்டின் வளர்ச்சிக்கான தேர்தல். ஆனால், திமுக, மாநிலத் தேர்தல் போல பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது. அதிமுக, உள்ளாட்சித் தேர்தல் போல பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது.

மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியின் உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தால், தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்களை, ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்து கேட்டுப் பெறலாம். இத்தனை ஆண்டு காலமாக, எதிர்க்கட்சி வரிசையில் இருந்து, தங்கள் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்த திமுக அதிமுகவுக்கு மாற்றாக, தொகுதியின் வளர்ச்சி குறித்துச் செயலாற்ற, நமக்கு பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தேவை.

பாரதப் பிரதமர் மோடியின் நல்லாட்சியில், நமது நாடு உலக அரங்கில் வேகமாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் உலகில் ஐந்தாவது இடத்தை நாம் பிடித்திருக்கிறோம். தனிநபர் வருமானம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 33 மாதங்களில், தமிழகத்தின் கடனை அதிகரித்திருப்பது மட்டும் தான் அவர்களின் சாதனையாக இருக்கிறது. தமிழகத்தின் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மீது கடன் சுமையை ஏற்றியிருக்கிறார்கள்.

பாரதப் பிரதமர் மோடி அமைச்சரவையில் உள்ள 76 அமைச்சர்களில் 11 அமைச்சர்கள் பெண்கள். ஆனால், தமிழகத்தில் 2 பேர் தான் பெண்கள். பிரதமர் மோடி அமைச்சரவையில், 12 அமைச்சர்கள் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 27 அமைச்சர்கள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆனால், திமுகவில் 2 பேர் மட்டுமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை ஜனாதிபதியாக அமர வைத்துள்ளோம். உண்மையான சமூகநீதி பாஜகவில் தான் இருக்கிறது. ஆனால், திமுகவில் வெறும் பேச்சளவில் தான் சமூகநீதி இருக்கிறது.

தமிழகத்தில் இளைஞர்கள் முன்னேற்றத்திற்காக, 2 லட்சம் கோடி ரூபாய் முத்ரா கடனுதவி வழங்கியிருக்கிறார் நமது பிரதமர் மோடி. இந்தியாவிலேயே அதிகமாக நிதி பெற்ற மாநிலம் தமிழகம். ஆனால் ஸ்டாலின், 33 மாதங்களில், மின்சாரக் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு என, அனைத்து வரிகளையும் கடுமையாக உயர்த்தி, மக்கள் மீது விலைவாசி உயர்வைச் சுமத்தியுள்ளார்.

பிரதமர் மோடி, 40 லட்சம் தாய்மார்களுக்கு, இலவச எரிவாயு இணைப்பு வழங்கியுள்ளார். தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு, கௌரவ நிதியாக, வருடத்திற்கு ரூ.6,000 என, 15 தவணைகளில், 30,000 ரூபாய் வழங்கியுள்ளார். ஆனால், ஸ்டாலின், தங்கள் நிலத்தைக் காப்பாற்றப் போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

கடந்த பத்து ஆண்டுகளில், நமது பிரதமர் உள்ளிட்ட 76 அமைச்சர்கள் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. ஆனால், தமிழகத்தில், ஒரு பொம்மை முதலமைச்சர் இருப்பதால், அவரது மகனும் மருமகனும், ஒரு ஆண்டில் ரூ.30,000 கோடி சம்பாதித்து விட்டார்கள் என்று, தமிழக அமைச்சர் ஒருவரே குற்றம் சாட்டியிருந்தார். இவ்வாறு பேசினார்.

Tags

Next Story