பிரமாண்ட மாநாட்டுக்கு தயாராகும் தமிழக பா.ஜ.க...!
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை -கோப்பு படம்
'சர்வதேச அரசியல்' தொடர்பான படிப்புக்காக லண்டன் சென்றிருக்கும் தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை நவ., 23ல் தமிழகம் திரும்புகிறார். அவர் வந்தவுடன் கட்சியில் பெருமளவு மாற்றம் இருக்கும் என, நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர். கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை தற்போது தீவிரமாக நடக்கிறது.
தமிழகத்தில், 2 கோடி பேரை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கிய பா.ஜ.க., 'மிஸ்டு கால்' உட்பட பல்வேறு வழிகளில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு உள்ளது.
தி.மு.க., - அ.தி.மு.க.,விலேயே 2 கோடி என்பது கானல் நீர் போலத்தான் உள்ளது. பா.ஜக.,வில் அந்த இலக்கை எட்ட முடியாவிடினும், தற்போதுள்ள நிலையில் சில லட்சங்களை எட்டினால் போதும் என்ற அளவில் நிர்வாகிகள் பணியாற்றுகின்றனர்.
அண்ணாமலை தமிழகத்தில் இருந்திருந்தால் ஏதாவது பரபரப்பு விஷயங்களை பேசி, அதிகளவு இளைஞர்களை வசீகரம் செய்திருப்பார் என, கட்சியினர் நம்புகின்றனர். இவ்வகையில், அவருடைய நவம்பர் வருகைக்கு பின் அதை நிறைவேற்ற, கட்சியினரை தன் ஆதரவாளர்கள் வாயிலாக அண்ணாமலை தயார்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
நவ., 23ல் அவர் வருகைக்கான ஏற்பாடுகள் உறுதியாகி விட்டாலும், மேலும் சில நாட்கள் லண்டனிலேயே தங்கி இருந்து, படிப்புக்கான சான்றிதழைப் பெற்று திரும்புங்கள் என குடும்பத்தினர் வலியுறுத்துவதால், அதுகுறித்த யோசனையில் ஆழ்ந்திருக்கிறார் அண்ணாமலை.
லண்டன் பயணத்தை முடித்து தமிழகம் திரும்பியதும், கட்சிக்காக கோவையில் மிகப்பெரிய மாநாடு நடத்தி, அரசியல் களத்தில் கட்சியை உயிரோட்டம் மிக்கதாக ஆக்கும் முடிவில் அண்ணாமலை இருப்பதாகக் கூறப்படுகிறது.
அப்படி நடத்தப்படும் பிரமாண்ட மாநாடு வாயிலாகவும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை கட்சியில் புதிதாக இணைக்கலாம் எனவும், அண்ணாமலை திட்டமிடுவதாக கட்சியினர் கூறுகின்றனர். கோவை, 'கொடிசியா' அரங்கில், கட்சிக்கான பிரமாண்ட மாநாட்டை நடத்தி முடித்த பின், பார்லிமென்ட் தேர்தலுக்கு முன் தமிழகம் முழுதும் ஏற்கனவே மேற்கொண்ட, 'என் மண்; என் மக்கள்' யாத்திரையை மீண்டும் துவங்கவும் அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu