தேசிய நீரோட்டத்தில் கலக்கிறதா தமிழகம்..?
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை (கோப்பு படம்)
அயரா உழைப்பு, கடுமையான சவால்களை சுலபமாக கையாளும் விதம், மக்களுடன் நேரடி தொடர்பு, ஊடகங்களை கதிகலங்க வைக்கும் தைரியம், ஆழ்ந்த சிந்தனை, நேர்மறை எண்ணம், அறிவு கூர்மை என்று அண்ணாமலையின் பிளஸ் பாயிண்ட்களை சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் வியக்கும் வண்ணம் உள்ளது. அண்ணாமலை தலைமையில் தற்போது தமிழக பாஜக தேர்தலை சந்திக்கிறது. அவரின் அரசியல் சாதுரியத்திற்கு கிடைத்த சில பலன் இவைகள் என்றே தோன்றுகிறது.
1. என் மண் என் மக்கள் யாத்திரை மாபெரும் வெற்றி. தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று, மக்களை நேரடியாக சந்தித்தது மட்டுமின்றி, தனது கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தி தட்டி எழுப்பியுள்ளார் என்றே சொல்லலாம். அருமையான திட்டமிடல். குறிப்பாக தேர்தல் நெருங்கும் வேளையில், சரியாக கணித்து, குறித்த நேரத்தில் நிறைவு செய்தது பாராட்டிற்குரியது.
2. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு மெகா கூட்டணியை உருவாக்கியது. இதனை அதிமுக சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் கணக்கு பொய்த்து போகும் படி சாணக்யனாக செயல்பட்டிருக்கிறார் அண்ணாமலை.
3. தமிழகத்தில் பாஜக 25 இடங்களில் போட்டியிடும் என்று தொடர்ச்சியாக கூறிவந்தார் அண்ணாமலை. அதிமுக கூட்டணியை முறிக்கும் முன்பிருந்தே. பல அரசியல் விமர்சகர்கள் இது சாத்தியம் இல்லை என்று அடித்து சொன்னார்கள். ஆனால் மெகா கூட்டணி அமைத்து, மேலும் தமிழகம் புதுச்சேரி சேர்ந்து, தாமரை சின்னம் 24 இடங்களில் தற்போது போட்டியிடும்படி செய்தது மாபெரும் வெற்றி. அவரது தலைமை பண்புக்கு உதாரணம்.
4. இறுதியாக வியக்க வைத்த விஷயம் இது தான். 45 ஆண்டு அரசியல் வாழ்க்கை எடப்பாடி பழனிசாமிக்கு. முன்னாள் முதல்வர், இந்நாள் எதிர்க்கட்சி தலைவர். இப்படிப்பட்ட பெரும் தலைவரை தனிமைப்படுத்தியது. ஒட்டுமொத்த அ.தி.மு.க.,வையும் அரண்டு போக செய்து விட்டது. ஏதாவது கட்சிகள் வருமா, கூட்டணி வைக்க முடியுமா என்று வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டு இருக்கும்படி செய்து விட்டார் அண்ணாமலை. இதைவிட துரோகிகளுக்கு வேறென்ன பரிசு கொடுக்க முடியும். தேர்தல் தோல்விக்கு பின்னால் எடப்பாடி பாடு திண்டாட்டம் தான்.
உட்கட்சி எதிர்ப்புகள் வலிமை பெரும். அண்ணாமலை என்னும் 40 வயது ஆளுமை, இளம் வயதிலே, குறுகிய காலத்தில், தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து விட்டார். ஏறத்தாழ இன்னும் 40 ஆண்டு அரசியல் பயணம் உள்ளது. பல உயரிய பொறுப்புகளுக்கு செல்லவுள்ளார். தேச நலம் சார்ந்த பணிகள் ஏராளம். இந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று, தனது வாக்கு சதவிகிதத்தை பாஜக பல மடங்கு உயர்திக்கொள்ளும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளமாக அமைய வேண்டும். தமிழகத்தை பிடித்த திராவிடம் என்னும் மாயை அகல வேண்டும். தமிழகம் மாற்றத்தை நோக்கி, தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்பதே தேச பக்தர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு. அண்ணாமலை அதை பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. வாழ்த்துவோம்.
தகவல் உதவி நன்றி: ஆனந்த் ஸ்ரீனிவாசன்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu