பகை... பதவி... எதிர்காலம்..? புதுக்கணக்கை தொடங்கும் பாலாஜி..!

பகை... பதவி... எதிர்காலம்..?  புதுக்கணக்கை தொடங்கும் பாலாஜி..!
X

கோப்பு படம்


முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் 471 நாட்கள் சிறைவாசம் ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.\

“ஆருயிர் சகோதரருக்குப் பிணை கிடைத்திருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில்கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச்செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. உன் தியாகம் பெரிது. உறுதி, அதனினும் பெரிது!’ எனச் சிறையிலிருந்து வெளிவந்திருக்கும் பாலாஜியை உணர்ச்சிகரமாக வரவேற்றிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை கரூர் தி.மு.க-வினர் ஒரு திருவிழாபோலக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். சென்னை புழல் சிறை வாயில், பாலாஜி ஆதரவாளர்களால் திணறி விட்டது. “அண்ணன் வந்து விட்டார், அமைச்சரவை மாற்றத்துக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது. இனி அமைச்சராகத்தான் சொந்த ஊருக்குத் திரும்புவார்” எனச் சொல்லிக் குதூகலிக்கிறார்கள் கரூர் உடன்பிறப்புகள்.

“அவருக்கு ஜாமீன் கிடைத்திருப்பதை தி.மு.க-வினர் மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகள்கூட வரவேற்றிருக்கின்றன. ஆனால், பாலாஜியின் மனநிலை முழுக் கொண்டாட்டத்தில் இல்லை. காயம்பட்ட புலியாக அவர் உறுமிக்கொண்டிருக்கிறார். அவரைச் சிறைக்கு அனுப்பியதில் மூன்று பேருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அவர்களுடனான பகையைத் தீர்க்க உள்ளுக்குள் துடித்துக்கொண்டிருக்கிறார் அவர்.

கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் தான் இழந்த அதிகாரத்தை மீட்டெடுத்து, தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை நிலைநிறுத்துவதே அவரது முதன்மைத் திட்டமாக இருக்கிறது. அதற்கான புதுக்கணக்கையும் போடத் தொடங்கி விட்டார் பாலாஜி” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான தி.மு.க புள்ளிகள்.

பாலாஜியின் ரிலீஸ் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு பட்டாசைப் பற்ற வைத்திருக்கும் சூழலில், `அவருடைய மனநிலை என்ன... என்ன செய்யக் காத்திருக்கிறார்..?’ என பார்க்கலாம்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, சட்டவிரோதப் பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின்கீழ், கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைதுசெய்தது அமலாக்கத்துறை. திடீர் நெஞ்சுவலி, அதைத் தொடந்து பைபாஸ் சர்ஜரி, இரண்டு முறை ஜாமீன் மறுப்பு, 58 முறை நீதிமன்றக் காவல் நீடிப்பு, 471 நாள்கள் சிறைவாசம் எனத் தொடர்ந்து கொண்டிருந்த பாலாஜியின் புழல் சிறை வாழ்க்கையை செப்டம்பர் 26-ம் தேதி முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

“பாலாஜி மீது பதியப்பட்டிருக்கும் வழக்கை விசாரித்து முடிப்பதற்குக் காலதாமதம் ஆகும். அதுவரையில் அவரைச் சிறையில் தொடர்ந்து வைத்திருக்க முடியாது” எனக் காரணங்களைக் குறிப்பிட்டு, அவரை ஜாமீனில் விடுவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதோடு, “ஜாமீன் விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லையென்றால், அது விசாரணைக் கைதிகளுக்காக இருக்கும் அரசியல் சாசனப் பிரிவு 21-ஐ தோற்கடிப்பதாகி விடும்” எனவும் அழுத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறது.

ஜாமீனுக்கான நிபந்தனைகளாக, “இரண்டு பேர் 25 லட்சம் ரூபாய்க்கு பாண்ட் வழங்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 11-12 மணிக்குள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும். ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையில், விசாரணை அதிகாரி முன்பாக ஆஜராக வேண்டும். சாட்சிகளைக் கலைக்க எந்த முயற்சியும் எடுக்கக் கூடாது. ஜாமீனுக்கு முன்பாக தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதில் எதையாவது மீறினால் ஜாமீன் ரத்துசெய்யப்படும்” எனக் கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது நீதிமன்றம்.

புழல் சிறையிலுள்ள அதிகாரிகளுக்கு ஜாமீன் உத்தரவின் நகல் வந்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 26-ம் தேதி மாலை 6 மணிக்குள் சிறையிலிருந்து அவர் வெளியே வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரை வரவேற்க, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை வடக்கு தி.மு.க மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம், மாதவரம் வடக்கு பகுதிச் செயலாளர் புழல் நாராயணன் தலைமையில் ஏராளமானோர் கூடி மேளதாளங்களோடு ஆட்டமும் பாட்டமுமாய்க் காத்திருந்தனர்.

டெல்லிக்குப் புறப்படுவதற்கு முன்னதாக பாலாஜி வெளியே வந்து விட்டால், சந்தித்து விடலாமே என முதல்வரும் எதிர்பார்ப்போடு இருந்தார். ஆனால், பாலாஜியின் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்து, பிணை உத்தரவாதத் தொகையைச் சமர்ப்பித்த பிறகு தான் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கறார் கண்டிஷன் போட்டு விட்டதால், முதல்வர் கிளம்புவதற்குள் பாலாஜியை வெளியே கொண்டுவர முடியவில்லை.

“பிணை உத்தரவாதத் தொகையை எங்கே செலுத்துவது..?” எனக் கீழமை விசாரணை நீதிமன்றத்தில் குழப்பம் நீடித்ததால், மாலைக்குள் பாலாஜி வெளியே வருவதில் திடீர் சிக்கல் உருவானது.

நடைமுறைச் சிக்கல்களை புழல் சிறை அதிகாரிகள் கூறியபோது, “சூரிய அஸ்தமனம் ஆகுறதுக்கு இன்னும் டைம் இருக்கு சார்...” என மெல்லிய சிரிப்புடன் கூறியிருக்கிறார் பாலாஜி. அவர் உதட்டளவில் சிரித்தாலும், உள்ளுக்குள் எரிமலையாகக் குமுறிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமான தி.மு.க புள்ளிகள்.

இது தொடர்பாக நம்மிடையே பேசியவர்கள், “செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்றதும், அதற்காக வருத்தப்பட்ட தி.மு.க சீனியர்களைவிட, உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்த சீனியர்கள்தான் அதிகம். கட்சியில் இணைந்த சில வருடங்களிலேயே பாலாஜி அடைந்த உயரமும், கட்சியில் அவருக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவமும் பலருடைய கண்களையும் உறுத்தி விட்டன.

குறிப்பாக, காவிரி பாயும் மத்திய மாவட்ட சீனியரும், ‘ஜோதி’ மாவட்ட சீனியரும் பாலாஜி மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார்கள். அதற்குக் காரணங்களும் இருக்கின்றன.

மத்திய மாவட்ட சீனியர்தான், அமைப்புரீதியாக தி.மு.க-வின் வியூகங்களையெல்லாம் செயல்படுத்துபவர். அவர் மாவட்டத்துக்குள்ளேயே புகுந்து, இரண்டு எம்.எல்.ஏ-க்களைத் தன்னுடைய ஆதரவாளர்களாக பாலாஜி கையில் எடுத்ததை, அந்த சீனியர் துளியும் ரசிக்கவில்லை.

உள்ளாட்சித் தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பாலாஜியின் தேர்தல் வியூகத்தையே பின்பற்றும்படி தலைமையிலிருந்து உத்தரவு போடப்பட்டதையும் அவர் விரும்பவில்லை.

அவரைப்போலவே, ‘ஜோதி’ மாவட்டப் புள்ளியும் பாலாஜி மீது கடுப்பில்தான் இருந்தார். கரூர் மாவட்டச் செயலாளராக வாசுகி முருகேசன் இருந்த காலகட்டத்திலேயே, அந்த மாவட்டத்துக்குள் தன் அரசியலைத் தொடங்கியவர் ‘ஜோதி’ மாவட்டப் புள்ளி. கரூரின் மொத்த ஃபைனான்ஸ் தொழிலையும் தன் விரலசைவில் வைத்திருந்தவர். இவையெல்லாமே பாலாஜி தி.மு.க-வுக்குள் நுழையும் வரையில்தான்.

அறிவாலய வாசலில் பாலாஜி எப்போது கால் வைத்தாரோ, அன்றிலிருந்தே ‘ஜோதி’ மாவட்டப் புள்ளியிடமிருந்த கரூர் ஃபைனான்ஸ் தொழில் பாலாஜியிடம் முழுவதுமாக வசமானது. தவிர, கோவையிலும் அந்தப் புள்ளிக்கு நெருக்கமாக இருந்தவர்களை அரசியல்ரீதியாக ஓரங்கட்டினார் பாலாஜி. சிலருக்கு உள்ளாட்சித் தேர்தலில்கூட சீட் கிடைக்கவில்லை. எனவே, அந்தக் கோபத்தில் ‘அந்த இரண்டு சீனியர்களும்தான், தனக்கெதிராகப் பல்வேறு விஷயங்களையும் திரட்டி, பா.ஜ.க தரப்புக்குப் போட்டுக் கொடுத்ததாக’ நம்புகிறார் பாலாஜி.

அவர்களோடு, பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீதும் பாலாஜிக்குக் கடும் கோபமிருக்கிறது. ரஃபேல் வாட்ச் விவகாரத்தைக் கிளப்பிவிட்டு, அண்ணாமலைக்குக் கடும் நெருக்கடியைக் கொடுத்தது பாலாஜிதான். ‘அவர் வெளியே இருந்தால், கொங்குப் பகுதியில் டெபாசிட்கூட வாங்க முடியாது’ என டெல்லி மேலிடத்திடம் அண்ணாமலை கூறியதைத் தொடர்ந்தே, அவர்மீது அமலாக்கத்துறையின் அட்டாக் பாய்ந்தது.

அந்தப் பாய்ச்சலுக்கு, அந்த இரண்டு தி.மு.க சீனியர்களும் உதவியதாகத்தான் சந்தேகிக்கிறார் பாலாஜி. சிறை நாள்களின் அவஸ்தையில், இந்த மூன்று பகை குறித்த சிந்தனைகளும் அவருக்குள் கடுமையான பழியுணர்ச்சியை ஏற்படுத்தியிருக் கின்றன. இந்த அரசியல் பகைக் கணக்கைத் தீர்க்க, நேரம் பார்த்துக் காத்திருந்தார் பாலாஜி. அவர் சிறைக்கு வெளியே காலை எடுத்து வைக்கும் அடுத்த நொடியிலிருந்து, அதற்கான அரசியல் ஆட்டம் ஆரம்பித்து விடும்” என்றனர்.

தன் அரசியல் பகையைப் பழிதீர்த்துக்கொள்வது ஒருபுறமென்றால், தன் எதிர்காலத்துக்கான புதுக்கணக்கையும் பாலாஜி போடத் தொடங்கி விட்டதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

நம்மிடம் பேசிய அமைச்சர்கள் சிலர், “சீனியர்கள் சிலரோடு பாலாஜிக்கு முரண்பாடுகள் இருந்தாலும், தலைமை அவரை ஒருபோதும் கைவிடவில்லை. ‘இந்த 15 மாதச் சிறைவாசத்தில் எத்தனையோ அழுத்தங்களை எதிர் கொண்டாலும், தலைமைக்கு விசுவாசமாகவே இருந்தார்’ என அவரை சாஃப்ட் கார்னரோடுதான் பார்க்கிறது தலைமை.

அதனால்தான், பாலாஜி சிறையில் இருந்தாலும் கோவைக்கான புதிய மேயர் தேர்விலும், நாடாளுமன்ற வேட்பாளர் தேர்விலும் அவர் விருப்பப்படியே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பாலாஜியின் வருகைக்காகத்தான் அமைச்சரவை மாற்றம் இத்தனை நாள்கள் காத்திருந்தது. உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி அளிப்பதும் காலதாமதமானது. இனி அந்தத் தடை இல்லை.

செந்தில் பாலாஜி உள்ளே போகும்போது, தலைமையிடம் அவருக்கு என்ன செல்வாக்கு இருந்ததோ, அதே செல்வாக்கு இப்போதும் அப்படியே இருக்கிறது. எனவே, விருப்பப்படி அவர் கேட்கும் துறைகளை ஒதுக்கத் தலைமை தீர்மானித்திருக்கிறது. இது தொடர்பாக, சில வாரங்களுக்கு முன்னரே அவரிடம் வழக்கறிஞர்கள் மூலமாகத் தகவல் சொல்லப்பட்டது. தகவலைக் கொண்டு சென்றவர்களிடம், ‘எனக்கு டாஸ்மாக்துறை வேண்டாம். அந்தத் துறையால் நான் பட்ட அவமானங்களும், மன உளைச்சல்களும், சச்சரவுகளும்தான் ஏராளம். எனக்குப் பொதுப்பணித்துறையை ஒதுக்கச் சொல்லுங்கள்.

அந்தத் துறையைக் கையில்வைத்திருக்கும் அண்ணன் எ.வ.வேலுவுக்கு டாஸ்மாக் துறையை ஒதுக்கலாம். அவர் சிறப்பாகச் செயல்படுவார்’ என்றிருக்கிறார் பாலாஜி. அமைச்சரவைக்குள் தன்னை அதிகார மையமாக நிறுத்திக்கொள்ளவே, வேலு வசமிருக்கும் பொதுப்பணித்துறைக்குக் குறிவைத்திருக்கிறார் பாலாஜி.

இந்தத் தகவல் கட்சி வட்டாரங்களில் கசிந்து, வெளியில் பேசுபொருளானது. ஆனால், இந்த விவகாரத்தில் கட்சித் தலைமை எந்த முடிவையும் எடுக்கவில்லை.

பாலாஜி சிறைக்குள் இருக்கும்போது, அவரால் ஓரங்கட்டப்பட்ட மீனா ஜெயக்குமாருக்கு அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் பதவியை, சில சீனியர்கள் மெனக்கெட்டு வாங்கிக்கொடுத்தனர். கரூர் நகர தி.மு.க-வும், கரூர் மாநகராட்சியும் அவருடைய கட்டுப்பாட்டைவிட்டுக் கழன்றுபோயின. பாலாஜியின் நண்பர் சங்கரின் விரலசைவில் வேலை பார்த்த தி.மு.க-வினர் பலரும், சங்கர் வந்தாலே முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள். ‘இப்போதைக்கு அவர் வர மாட்டார். உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைப்பது சிரமம்...’ என்கிற நம்பிக்கையில்தான், ஆளாளுக்கு ஓர் அரசியல் கணக்கைப் போட்டு பாலாஜிக்கு எதிராகக் காய்நகர்த்தினார்கள்.

அவர்களே எதிர்பாராத திருப்பமாக, உச்ச நீதிமன்றம் சிறைக்கதவைத் திறந்து விட்டு விட்டது. இனி, பாலாஜி போடும் புதுக்கணக்குகளால் கட்சிக்குள் மட்டுமல்ல, ஆட்சிக்குள்ளும் பல வெடிகள் வெடிக்கப்போகின்றன” என்றனர்.

நீதிமன்ற நடைமுறைகள் முடிந்து, செப்டம்பர் 26-ம் தேதி, சரியாக இரவு 7:10-க்கு புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி. தொண்டர்கள், ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் சிறை வாயிலில் ஆரவாரம் செய்து அவரை வரவேற்றனர். பலரும் மாலைகள், பொன்னாடைகள் என அணிவிக்க, தி.மு.க கட்சித்துண்டை மட்டும் தோளில் அணிந்துகொண்டார்.

கட்சிக்காரர்களின் தள்ளு முள்ளுவில் மெல்ல மெல்லத் தனது காரை நெருங்கி அதில் ஏறிக்கொண்டவர், ‘என்மீது போடப்பட்டது பொய் வழக்கு; அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட வழக்கு. சட்டப்படி அதை வென்று மீண்டு வருவேன். கரூர் மாவட்ட மக்களின் ஆதரவுக்கு நன்றி. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்நாள் நன்றி’ என்று சுருக்கமாகப் பேசிவிட்டுக் கிளம்பினார்.

“வெளியே வந்தவுடன் அதே வீரியத்தோடு அவர் செயல்படுவார்” என முதல்வரே சொல்லியிருப்பதால், பாலாஜியின் பாய்ச்சலில் வேகம் குறையாது என்கிறார்கள் கரூர் புள்ளிகள்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!