பா.ம.க.,வின் கையில் மாயச்சாவி : பா.ஜ.க.,வுடன் கைகுலுக்குகிறது..!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் (கோப்பு படம்)
திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கான பங்கீட்டினை நிறைவு செய்து தேர்தலின் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்து விட்டது. அதிமுக, பாஜக இரண்டும் தத்தமது கூட்டணிகளை இறுதி செய்யும் மாயச்சாவி இப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் கையில் உள்ளது.
திமுக கூட்டணிக்காக இறுதிவரை காத்திருந்த பாமகவுக்கு, சென்ற மாதம் திருச்சியில் வி.சி.க., மாநாட்டில் தனது நிலைப்பாட்டை தெளிவாக உணர்த்தி விட்டார் திமுக தலைவர். அப்போது முதல் தங்களின் வழக்கம் போல ஒரே நேரத்தில் அதிமுக, பாஜகவுடன் நள்ளிரவு பேச்சு வார்த்தையை நடத்தி வரும் பாமகவுக்கு இப்போதைய சூழலில் நல்ல டிமாண்ட் இருக்கிறது.
பாமக தங்களது கூட்டணியில் இருந்திரா விட்டால் எப்படியும் 25 சட்டமன்றத் தொகுதிகளை இழந்திருப்போம் என்பதை முழுவதுமாக உணர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, இப்போது தாராளமான ஆஃபர் தந்திருக்கிறார்.
ஒருவேளை பாமக அதிமுகவுடன் சேரவில்லை எனில், அநேகமாக தேர்தலுக்குப் பிறகு எடப்பாடியின் தலைமை பதவியே ஆட்டங்காணக்கூடிய அளவில் தேர்தல் முடிவுகள் வரக்கூடிய அபாயம் உள்ளதால் வேலுமணி, தங்கமணி அதி தீவிரமாக வேலை செய்கின்றனர்.
பாஜகவின் கையில் இருப்பதோ அட்சயப்பாத்திரம். எனவே, பாஜக ஆட்சியில் தனக்கு கேபினட் அமைச்சர் பதவியை உறுதி செய்ய அன்புமணி கோருகிறாராம். அதுபோக இரண்டு சிபிஐ வழக்குகள் வேறு காத்திருப்பில் உள்ளனவே. வழக்கிலும் தப்ப வேண்டும். அமைச்சர் பதவியும் சுளையாக கிடைக்கிறது. இதனால் அன்புமணி பா.ஜ.க.,வை விரும்புகிறார்.
கட்சியின் எதிர்காலம் கருதி அதிமுகவுடன் தான் கூட்டணி எனும் முடிவை டாக்டர் ராமதாஸ் எடுத்திருக்க, பாஜக பக்கம் நகர்வோம், அதிகாரத்தை ருசிப்போம் என அன்புமணி பிடிவாதம் பிடிக்கிறாராம்.
பாமக எடுக்கப் போகும் முடிவில் தான் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி என இருவரது அரசியல் எதிர்காலம் உள்ளது என்பது தான் இப்போதைய நிலவரம்.
இதற்கிடையில் கேப்டன் கட்சி வேற பாஜவுடன் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளதாம். இப்படி ஒரு கூட்டணி உருவாகி விட்டால் அ.தி.மு.க.,வின் நிலைமை அதோகதியாகி விடும். இன்று இரவு பா.ஜ.க.,வுடன் டெல்லியில் அன்புமணி ராம்தாஸ் கை குலுக்குவார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu