ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில கொள்ளையன் என்கவுண்டர் : போலீஸ் அதிரடியால் பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில கொள்ளையன் என்கவுண்டர் : போலீஸ் அதிரடியால் பரபரப்பு
X

போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட வடமாநில கொள்ளையன்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண்ணிடம் வழிப்பறி செய்து விட்டு காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த வடமாநில கொள்ளையனை போலீசார் என் கவுண்டர் செய்தனர். ஒருவரை உயிருடன் பிடித்தனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பூதேரி பகுதியை சேர்ந்தவர் இந்திராணி இவர் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பணிக்கு வரும்போது வடமாநில இளைஞர்கள் இருவர் இவரிடம் வழி கேட்பது போல் அவரிடம் இருந்த 5 சவரன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

இந்திராணியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வழிப்பறிக் கொள்ளையர்களைப் துரத்தியபோது அவர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால் பொதுமக்கள் பயந்து நின்று விட்டனர். இதை சாதகமாக்கி பென்னலூர் ஏரிப் பகுதியில் இருவரும் மறைந்தனர்.

பொதுமக்கள் இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறைக்கு தெரிவித்ததன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நேற்று 5 மணி நேரம் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். போதிய வெளிச்சம் இன்மை காரணமாக பணி நிறுத்தப்பட்டு இன்று காலை மீண்டும் பணி துவங்கியது.

அந்தக் காட்டுப்பகுதியை சுற்றியுள்ள அனைத்து வழிகளிலும் 10க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கொள்ளையர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ஐந்த ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில் மேவலுர் குப்பம் அருகில் தைல காட்டு பகுதியில் மர்ம நபர் உலாவுவதாக வந்த தகவலின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையை சேர்ந்த காவலர் குழு அப்பகுதிக்கு சென்றது. அப்போது அக்குழுவை நோக்கி வடமாநில கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட முயன்றனர்.

இதில் லாவகமாக தப்பிய காவலர்கள், சுட முயன்ற கொள்ளையன் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவனை சுட்டதில் சம்பவ இடத்திலேயே அவன் பலியானான். பலியானவன் உடலை பரிசோதித்தில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முர்தாஷா என்பதும் தெரியவந்தது.

இவனுடன் பதுங்கியிருந்த நைம்அத்தர் என்பவரையும் காவல்துறை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் முர்தஷாவிடம் இருந்து துப்பாக்கி மற்றும் நகைகள் மற்றும் 5 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரகடம் அரசு மதுபான கடையில் விற்பனையாளர் கொலை செய்யப்பட்டதும், இன்னொரு ஊழியர் உடலிலிருந்து துப்பாக்கி குண்டு அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் இவர்கள் தொடர்பு இருக்கிறதா என கோணத்தில் கைது செய்யப்பட்டுள்ள அக்தரிடம், காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story