நிதின் கட்கரியின் ‘கோட்டை’ தகர்க்கப்படுமா?

நிதின் கட்கரியின் ‘கோட்டை’ தகர்க்கப்படுமா?
X
நாக்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கடினமான போட்டியை எதிர்கொள்கிறார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மக்கள் மத்தியில் நிலவும் அரசுக்கு எதிரான தற்போதைய மனநிலையும் கட்கரியை எதிர்த்துப் போட்டியிடும் வலுவான காங்கிரஸ் வேட்பாளரான விகாஸ் தாக்கரேயும்தான் இதற்கு முக்கிய காரணங்கள்.

தவிர, இந்த முறை இந்தத் தொகுதியில் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாதி அமைப்பும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கிறது. உள்ளூர் எம்.எல்.ஏ.வான காங்கிரஸ் வேட்பாளர் தாக்கரே, காங்கிரஸ் கட்சியின் நாக்பூர் நகரத் தலைவராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார். வரும் ஏப். 19 ஆம் தேதி மேலும் 3 தொகுதிகளுடன் நாக்பூர் மக்களவைத் தொகுதியிலும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

பாரதிய ஜனதாவின் வலுவான வேட்பாளரான கட்கரி, 2014 மக்களவைத் தேர்தலில் நாக்பூரில் 26.2 சதவிகித வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளரான விலாஸ் முத்தம்வர் 27.9 சதவிகிதம் பெற, பதிவான வாக்குகளில் 54 சதவிகித வாக்குகளைப் பெற்றார் நிதின் கட்கரி. ஆனால், 2019 மக்களவைத் தேர்லில் கட்கரியின் வெற்றிக்கான வித்தியாசம் 18.3 சதவிகிதமாகக் குறைந்து விட்டது.

கடந்த பத்தாண்டுகளில் நாக்பூரில் மிகவும் புகழ்பெற்ற நபராக மாறிவிட்டிருக்கும் நிதின் கட்கரி, காங்கிரஸின் செல்வாக்கு மிக்கதாக இருந்த பகுதியைத் தன்னுடைய கோட்டையாக மாற்றி வைத்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கைவிட கட்கரியின் தனிப்பட்ட செல்வாக்குதான் அதிகம்.

பிராமணர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், எல்லாருடனும் இயல்பாகப் பழகும் இவருடைய குணமும் தாராளமான அரசியலும் இவருக்கு அனைத்துச் சாதியினரிடையேயும் ஆதரவாளர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது.

அனைத்துத் தரப்பினருக்குமானவர் என்ற தகுதியைக் கட்கரி பெற்றிருந்தாலும் இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் தாக்கரேயின் வலுவான போட்டி காரணமாக வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றாக இருக்காது.

மேலும் பத்தாண்டுகளாகப் பதவியிலிருந்த நிலையில் எதிர்ப்பு உணர்வும் மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியும் கட்கரிக்குப் பாதகமாக இருக்கிறது. தவிர, நகரில் தாக்கரேவுக்கு வலுவான தொடர்புகள் இருக்கின்றன. இது தேர்தல் பிரசாரத்தில் வலுவாக எதிரொலிக்கும் என்றும் அரசியல் பார்வையாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

இன்னொரு பக்கம் பார்த்தால், தாக்கரேயின் தொடர்புகளையும் சாதிக் கணக்குகளையும் எதிர்கொள்ள, நிதின் கட்கரி முழுவதுமாக தன்னுடைய நல்ல மனிதர் என்ற பெயரையும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் தொடர்புகளையுமே நம்பியிருக்கிறார்.

நாக்பூர் தொகுதி பல காரணங்களால் பாரதிய ஜனதாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தத் தொகுதியில்தான் அகில இந்தியாவுக்குமான ஆர்எஸ்எஸ் தலைமையகம் இருக்கிறது. கட்கரியின் தாராளப் போக்கு, முற்போக்கு அரசியல், பிரதமர் பதவி மீதுள்ள ஆசை போன்றவற்றின் காரணமாக சில தலைவர்கள் அதிருப்தி அடைந்திருப்பதால், இந்த முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட அனேகமாக கட்கரிக்குத் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றே பேச்சுகள் நிலவின.

ஆனால், மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தேர்தலில் நிதின் கட்கரிக்கு எதிராக ‘மறைமுகமாக சில சக்திகள்’ செயல்படும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதையும் ஒதுக்கிவிட முடியாது என்று நாக்பூரின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறுகிறார்.

இரண்டு முறை வெற்றி பெற்ற நாக்பூர் கோட்டையைத் தகர்க்கப்படாமல் தக்க வைத்துக் கொள்ள மிகக் கடுமையாக போராட வேண்டும் நிதின் கட்கரி.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!