சர்வதேச அளவில் பல நாடுகள் ஆட்டம் கண்டாலும் இந்தியா தப்பியது எப்படி?

சர்வதேச அளவில் பல நாடுகள் ஆட்டம் கண்டாலும் இந்தியா தப்பியது எப்படி?
X
"கொரோனா, உக்ரைன் போர் நிலவரத்தால் சர்வதேச அளவில் பல நாடுகள் ஆட்டம் கண்டாலும் இந்தியா தப்பியது இப்படித்தான்" - சொல்கிறார்கள் வியாபாரிகள்.!

கொரோனா பாதிப்புகளிலும், உக்ரைன் போர் பாதிப்புகளிலும் சிக்கி பல உலக நாடுகளின் பொருளாதாரம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி விட்டது. அமெரிக்கா உட்பட மேலை நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் கூட கடும் பாதிப்பில் சிக்கி உள்ளன. இலங்கை, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் கடும் விலை வாசி உயர்வு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் பேரிடர்களால் உலகம் தவித்த நிலையிலும், இந்தியாவில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. குறிப்பாக இந்த இரண்டு ஆண்டுகளில் பெட்ரோலிப்பொருட்கள், தங்கம் தவிர வேறு எந்த பொருட்களின் விலைகளும் உயரவில்லை. குறிப்பாக உணவுப்பொருட்களின் விலைகள் சீராகவே இருந்து வருகிறது.

இன்றைய மொத்த மார்க்கெட் நிலவரப்படி, 'சீனி கிலோ 38 ரூபாய், மைதா, கோதுமை கிலோ 42 ரூபாய், ரவை 40 ரூபாய், வறுகடலை 75 ரூபாய், கடலைப்பருப்பு 64 ரூபாய், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு 96 ரூபாய், கருப்பு சுண்டல் சிறியது 57 ரூபாய், பெரியது 77 ரூபாய், வெள்ளை சுண்டல் சிறியது 80 ரூபாய், பெரியது 116 ரூபாய், தட்டைப்பயறு 70 ரூபாய், போர்மொச்சை 95 ரூபாய், குஜராத் வெள்ளை மொச்சை 85 ரூபாய், வெள்ளை கானம் 60 ரூபாய், கருப்பு கானம் 66 ரூபாய், வெள்ளை பீன்ஸ் 112 ரூபாய், சிகப்பு பீன்ஸ் 115 ரூபாய், பச்சை பட்டாணி 65 ரூபாய், வெள்ளைபட்டாணி 70 ரூபாய், கடுகு 75 ரூபாய், மல்லி 151 ரூபாய், கடலை எண்ணெய் லிட்டர் 170 ரூபாய், பாமாயில் 150 ரூபாய், நல்லெண்ணெய் 245 ரூபாய், அரிசி எண்ணெய் (தவிட்டு எண்ணெய்) 175 ரூபாய், வத்தல் 255 ரூபாய் என விற்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விலை சீராக இருக்கிறது. அவ்வப்போது ஒரு ரூபாய் முதல் இரண்டு ரூபாய் வரை ஏறும் அல்லது இறங்கும் அவ்வளவு தான். மற்றபடி இந்த விலையில் இந்தியா முழுவதும் பெரும் மாற்றம் இல்லை.

இதற்கு காரணம் என்ன என்பது குறித்து தேனி வியாபாரிகள் சிலர் கூறியதாவது: பயறு வகைகள், பருப்பு வகைகள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, உக்ரைன் உட்பட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும். பொதுவாகவே மூன்று மாதங்களுக்கு தேவையான அளவு அரிசி, பருப்பு, பயறு, எண்ணெய் வகைகள் உள்நாட்டில் இருப்பு இருக்கும். கொரோனா காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் உணவுப்பொருட்கள் மீதான இறக்குமதி வரி 30 சதவீதத்தை மத்திய அரசு ரத்து செய்து விட்டது. கொரோனா களேபரத்தில் இந்த விஷயம் பெரிதாக பேசப்படவில்லை. இதனால் வெளிநாடுகளில் விலை உயர்ந்தாலும், வரியில்லாமல் அந்த பொருட்கள் இந்திய மார்க்கெட்டுகளுக்கு வந்து சேர்ந்தது. தவிர சில பொருட்கள் வரத்து குறைகிறது, இனி வராது என கணித்த உடனே அந்த பொருளின் உள்நாட்டு உற்பத்தியை உயர்த்த அரசு தீவிர கவனம் எடுத்தது. அதாவது கனடா, அமெரிக்காவில் இருந்து வரும் பயறு வகைகள் மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், குஜராத் மாநிலங்களில் விளைவிக்கப்பட்டன. இந்தோனேஷியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி வரியில்லாமல் வந்து சேர்ந்தது. விலை கட்டுப்பாட்டிற்குள் இருக்க இதுவே முக்கிய காரணம். தற்போது உக்ரைனில் இருந்து சூரியகாந்தி ஆயில் வருவது தடைபட்டது. அந்த இடத்தை கடலை எண்ணெய், தவிட்டு எண்ணெய், பாமாயில் ஈடுகட்டி விட்டது. உள்நாட்டில் நிலக்கடலை உற்பத்தி மிக, மிக அதிகமாக உள்ளது.

அதேபோல் அரிசி, கோதுமை, சர்க்கரை உற்பத்தியும் உள்நாட்டில் அதிகரித்துள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு கோதுமை, சர்க்கரை ஏற்றுமதியாகிறது. இதனாலும் உள்நாட்டில் விளைச்சல் அதிகம் இருந்தாலும் ஏற்றுமதி இருப்பதால் விவசாயிகளுக்கு விலை கிடைக்கிறது. அதேசமயம் உள்நாட்டு தேவை, இருப்பு, ஏற்றுமதி மூன்றிலும் சமநிலை உருவாக்குவதில் மத்திய அரசு பெரும் அளவில் வெற்றி கண்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கும் விலை கிடைக்கிறது. மக்களுக்கும் விலை உயராமல், வாங்கும் சக்திக்குள் பொருட்கள் கிடைக்கிறது. மிகச்சிறந்த நிர்வாக திறமை மத்திய அரசிடம் இருப்பதால் இது சாத்தியமாகி உள்ளது. இவ்வாறு கூறினர்.

Tags

Next Story