அதிர்ச்சி கொடுத்த ரிசல்ட் : கமலாலயம் ஷாக்..!

அதிர்ச்சி கொடுத்த ரிசல்ட் :  கமலாலயம் ஷாக்..!
X

கோப்பு படம் 

நடந்து முடிந்த தேர்தல் பா.ஜ.க.,விற்கு தமிழக அரசியல் களத்திற்கான வியூகம் போதவில்லை என்பதை நிரூபித்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க 19 இடங்களிலும், பா.ம.க 10, த.மா.கா 3, அ.ம.மு.க 2, ஓபிஎஸ், தேவநாதன், ஜான்பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் ஆகியோருக்கு தலா ஒரு இடங்களிலும் போட்டியிட்டனர். இதில் ஓபிஎஸ் தனி சின்னத்திலும், தேவநாதன், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் ஆகியோர் தாமரை சின்னத்திலும் களம் கண்டனர்.

இதில் கோவையில் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை செளந்தரராஜன், நீலகிரி (தனி) எல்.முருகன், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், மத்திய சென்னையில் வினோஜ் பி.செல்வம் ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.

இதேபோல் வேலூரில் ஏ.சி.சண்முகம், கிருஷ்ணகிரியில் சி.நரசிம்மன், பெரம்பலூரில் டி.ஆர்.பாரிவேந்தர், திருவள்ளூர் பொன்.வி.பாலகணபதி, வட சென்னையில் ஆர்.சி.பால்கனகராஜ், திருவண்ணாமலையில் ஏ.அஸ்வத்தாமன், நாமக்கலில் கே.பி.ராமலிங்கம், திருப்பூரில் ஏ.பி.முருகானந்தம், பொள்ளாச்சியில் கே.வசந்தராஜன், கரூரில் வி.வி.செந்தில்நாதன், சிதம்பரம் (தனி) பி.கார்த்தியாயினி, நாகப்பட்டினம் (தனி) எஸ்.ஜி.எம்.ரமேஷ், தஞ்சாவூரில் எம்.முருகானந்தம், சிவகங்கையில் தேவநாதன், மதுரையில் பேராசிரியர் ராம சீனிவாசன், விருதுநகரில் நடிகை ராதிகா சரத்குமார், தென்காசி (தனி) பி.ஜான் பாண்டியன் ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.

இதில் மற்ற கட்சிகளைவிட பா.ஜ.க வேட்பாளர்களில் பெரும்பாலானோர் விஐபிக்கள்தான். அதே நேரத்தில் மோடி, அமித்ஷா, ஸ்மிருதி இராணி, ராஜ்நாத் சிங் என பலரும் பிரசாரத்திற்காக வந்திருந்தார்கள். ஆரம்பம் முதலே 'கூடுதல் தொகுதிகளை கைப்பற்றுவோம், மூன்றாவது இடத்தை பிடிப்போம்' என்றெல்லாம் அண்ணாமலை பேசிவந்தார். சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பு முடிவுகளும் அவர்களுக்கு சாதகமாகவே இருந்தது.

இந்தசூழலில்தான் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த தமிழக பா.ஜ.க தொண்டர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. சில தொகுதிகளில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும், வெற்றி பெறுவதற்கான சூழலில் எந்த தொகுதியும் இல்லை. இது ஒட்டுமொத்த கமலாலய சீனியர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள், "பாஜக-வின் இந்த நிலைக்கு அண்ணாமலைதான் முக்கிய காரணம். அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருந்தால் வாக்கு வங்கி அதிகரித்து இருக்கும். ஆனால் இவர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்களால் அதிமுக கூட்டணி வைக்க விரும்பவில்லை.

அதேபோல் திராவிட கட்சிகளுக்கு இணையாக டெல்லி பசையை அள்ளி தெளித்து இருந்தது. ஆனால் அதை பெற்ற நிர்வாகிகள் சரியாக செலவு செய்யயாமல், அவர்களே பதுக்கிக்கொண்டார்கள். தேர்தல் முடிந்ததும் இந்த விவகாரங்கள் வெடித்தது. மேலும் கட்சியில் இருக்கும் விஐபிக்கள் அனைவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு விட்டதால், அவர்கள் தங்களது தொகுதிக்குள்ளேயே சுருங்கி விட்டார்கள். இதனால் பிரசாரத்தில் முழுமையாக ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டது. இதுபோன்ற காரணங்கள்தான் பாஜக பின்னடைவுக்கு காரணம்" என்றனர்.

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது