அந்தியூரில் அரசு கலை கல்லூரி: சட்டசபையில் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பைல் படம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 14 ஊராட்சிகளும், அதன் கீழ் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கூலி தொழிலாளர்களாகவே உள்ளனர். இங்கு அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிக்கூடங்கள் மட்டுமே உள்ளன. எனவே, இந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி (கல்லூரி) படிப்புக்காக அதிக தொலைவில் உள்ள சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, கோபி , சேலம், குமாரபாளையம் ஆகிய பகுதிக்கு தான் செல்ல வேண்டும்.
இதன்காரணமாக, இங்குள்ள மாணவர்களுக்கு அதிக செலவு ஏற்படுகிறது. குடும்ப வருவாய் காரணமாக மாணவர்கள் பலர் பள்ளிப்படிப்புடன் நின்றுவிட்டு கிடைக்கிற வேலைக்கு சென்றுவிடுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, அந்தியூரில், அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பர்கூர் மலைவாழ் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும், தங்கள் பகுதியில் அரசு கலை கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலத்திடம், அந்தியூர் மற்றும் பர்கூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதை, அரசின் கவனத்திற்கு எம்.எல்.ஏ கொண்டு சென்றார்.
இந்நிலையில், அந்தியூர் அரசு கலை கல்லூரி தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று அறிவித்தார். இது, பர்கூர் மற்றும் அந்தியூர் பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் இதற்கு உறுதுணையாக செயல்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் மற்றும் மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் ஆகியோருக்கு, அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu