தொடரும் மழையால் விவசாய பணிகள் மும்முரம்..!
தேனி மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு காலை 6 மணிக்கே தொழிலாளர்களை டிராக்டர்களில் ஏற்றிக் கொண்டு தோட்டங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். (இடம்: வடபுதுப்பட்டி அருகே அம்மாபட்டி).
தேனி மாவட்டத்தில் விவசாயப்பணிகள் வேகம் எடுத்துள்ளதால் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் சில மாதங்களுக்கு கிராம நுாறுநாள் வேலை திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. மழை பெய்யாத நாட்களில் சிறிது நேரம் சாரல் கிடைக்கிறது. இதனால் நிலத்தில் ஈரப்பதம் நல்ல முறையில் உள்ளது. முல்லை பெரியாறு, கொட்டகுடி ஆறு, வைகை நதிகளில் நீர் வரத்து உள்ளது.
வராகநதி, மஞ்சளாறு, சண்முகாநதிகளில் ஈரப்பதம் இருக்கும் அளவு நீர் உள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்யும் முன்னரே மாவட்டத்தில் ஈரப்பதம் நல்ல முறையில் உள்ளதால் மாவட்டம் முழுவதும் 2 லட்சம் ஏக்கருக்கும் அதிக பரப்பில் விவசாய பணிகள் தொடங்கி உள்ளன. விவசாய, மற்றும் தோடக்கலை பணிகள் ஒட்டுமொத்தமாக தொடங்கி உள்ளதால் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கிராமங்களுக்கு டிராக்டர்களை அனுப்பி அதில் விவசாய கூலி தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு தங்கள் நிலத்தில் வேலை செய்ய அழைத்துச் செல்கின்றனர். அதேபோல் வேலை செய்யும் இடத்திலேயே டீ, வடை வாங்கித்தருகின்றனர்.
பணி முடித்ததும் உடனே சம்பளம் தருகின்றனர். இருப்பினும் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே விவசாயிகளுக்கு உதவும் வகையில் அரசு கிராமங்களில் செய்து வரும் நுாறுநாள் வேலை திட்டப்பணிகளை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும்.
கிராமங்களில் விவசாய பணிகள் நடக்காத நேரத்தில் ஏழை விவசாயிகளுக்கு வேலை வழங்கவே கிராம நுாறுநாள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது கிராமத்தில் பணிகள் நடப்பதால் விவசாயிகளுக்கு உதவும் வகையில் கிராம நுாறுநாள் வேலை திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். அந்த தொழிலாளர்களை எங்கள் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி வேண்டும். இவ்வாறு கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu